ஸ்டாலின் ஆட்சியில் 24 கஸ்டடியல் மரணங்கள் நடைபெற்றுள்ளதாக கூறும் விஜய், எடப்பாடி ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற கஸ்டடியல் மரணங்கள் குறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசை கண்டித்து தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற போராட்டம் தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகரும், அரசியல் விமர்சகருமான பொன்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- காவல்துறை மரணங்களை கண்டித்து தவெக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சாரி வேண்டாம், நீதி வேண்டும் என்று விஜய் சொல்கிறார். ஒரு முதலமைச்சர் சாரி கேட்கிறார் என்றால், ஒட்டுமொத்த காவல்துறை செய்த தவறு ஏற்றுக்கொள்ள முடியாதது. அந்த தவறை ஒருபோதும் நான் நியாயப்படுத்த மாட்டேன் என்று சொல்லி 5 காவலர்களின் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்தும், டிஎஸ்பியை சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுத்தார். அதற்கு பிறகே அஜித்குமாரின் அம்மாவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாரி கேட்டிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொறுப்புள்ள ஒரு முதலமைச்சராக, ஒட்டுமொத்த தவறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனிமேல் இப்படி நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கிறேன். சாரிமா என்று கேட்கிறார் என்றால் அது மனிதாபிமானம் மிக்க செயலாகும். அந்த செயலை செய்தது விஜய்க்கு குற்றமா? ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 24 காவல் மரணங்கள் நடைபெற்றுள்ளன. எடப்பாடியின் ஆட்சிக்காலத்தில் 2016 -2021 தமிழ்நாட்டில் 478 கஸ்டடியல் மரணங்கள் நடைபெற்றுள்ளன. இது தென்னிந்தியாவிலேய மிகவும் அதிகமாகும். இந்த சம்பங்களில் எந்த காவல்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் எவ்வளவு சம்பவங்கள் ரிப்போர்ட் ஆகி உள்ளன. அதற்கு எவ்வளவு ஊடக அட்டென்ஷன் கிடைத்தது. விஜய் தூங்கிக் கொண்டிருந்தாரா அப்போது?. ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆகிய இரு சம்பவங்கள் மட்டும் தான் ஊடகங்களின் கவனத்தை பெற்றன. அதை தாண்டி 478 கஸ்டடியல் மரணங்கள் நடைபெற்றுள்ளன. இந்த சம்பவங்கள் குறித்து மேஜிஸ்திரேட் விசாரணைகள் நடைபெற்றுள்ளன. கைது நடவடிக்கைகளும் நடைபெற்றுள்ளன. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் எந்த சம்பவத்திலும், குற்றச் செயலில் ஈடுபட்ட காவல்துறையினர் தண்டிக்கப்படவில்லை. எடப்பாடி தண்டித்தாரா?
மண்டபத்தில் உட்கார்ந்து 4 அரசியல் வியூக வகுப்பாளர்கள் எழுதி தருகிறார்கள் என்றால்? அவர்களிடம் இதுவரை எவ்வளவு கஸ்டடியல் மரணங்கள் நடைபெற்றுள்ளன என்று கேட்கக்கூட விஜய்க்கு அரசியல் அறிவு இல்லையா? கக்கன், காமராஜர், கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் ஆட்சிக்காலத்திலும், கஸ்டடியல் மரணங்கள் நடைபெற்றுள்ளன. எடப்பாடியின் ஆட்சியில் மட்டும் 478 மரணங்கள் நடைபெற்றுள்ளன. அதேவேளையில் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் 24 கஸ்டடியல் மரணங்கள் நடைபெற்றுள்ளன. ஒரு பிரச்சினையை அணுகக்கூடிய பொதுத்தலைவராக, முதலமைச்சராக நான்தான் வருவேன் என்று கனவு காணக்கூடிய நடிகர் விஜய், இந்த கேள்வியை வசனம் எழுதி தருகிற 4 அரசியல் வியூக வகுப்பாளர்களிடம் கேட்டிருக்கலாம் அல்லவா?
கஸ்டடியல் மரணங்கள் என்பது காமராஜர் காலம் முதல் இருந்து வருகிறது. உ.பி.யில் சாதி, மதம் பார்த்து புல்டோசர்களை வைத்து இடித்துக் கொன்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் உங்களை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் எப்படிபட்ட ஒரு தீர்வை கொடுக்க வேண்டும். தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், 24 குடும்பங்களுக்கும் சாரி கேளுங்கள், அவர்களுக்கு நிவாரணம் கொடுங்கள் என்று சொல்கிறார். அது நியாயமான கோரிக்கை. முதலமைச்சர் அது குறித்து பரிசீலிக்கட்டும். சரி எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் கொல்லப்பட்ட 478 பேர் குடும்பங்களுக்கு யார் நிதி கொடுப்பார்கள்? ஏன் அதை கேட்க மறுக்கிறீர்கள்?
காரணம் எடப்பாடி மீது குற்றம்சாட்டாமல் அதிமுகவின் வாக்குகளை வாங்கி, அந்த கட்சியை அழித்து, பாஜக வர வேண்டும் என நினைக்கிறீர்கள். அதிமுகவை அழித்து நீங்க வர வேண்டும் என நினைக்கிறீர்கள். அப்போது இது என்ன அரசியல்? முதலமைச்சர் வேட்பாளராக வர வேண்டும் நினைக்கும் விஜய், வசனம் எழுதித் தருபவர்களிடம் இந்த கேள்வியை கூட கேட்டு பதில் வாங்க முடியவில்லை. அப்போது இந்த பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வை தர முடியும்.
சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறை சரியாக விசாரிக்காது என்பதால் நாங்கள் சிபிஐ விசாரணை கோரி வழக்கு போடுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும்போது, எப்படி ஸ்டாலின் சிபிஐ விசாரணையை எதிர்த்து கேட்டார் என்று சொல்கிறீர்கள். அப்போது அதிலும் பொய் சொல்கிறீர்களா? அப்போது அரசியலில் உங்களுக்கு என்ன தெரிகிறது? சினிமாவில் நடித்தால் மட்டும் போதாது அரசியலையும் படியுங்கள். கதை வசனம் எழுதித் தருவதை வசன நடையோடு பேசினால் மட்டும் போதாது. அரசியல் வேறு, சினிமா வேறு. அஜித்குமார் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது. வழக்கை சிபிஐக்கு மாற்றப்பட்டு விட்டது. அரசு என்ன செய்யவில்லை என்று விஜய் கேட்க வேண்டும் தானே. டேவிட்சன் தேவாசிர்வாதம், உதயச்சந்திரன் ஆகியோர் என்னுடைய நண்பர்கள் தான். ஆனால் அவர்கள் மீது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர், அவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன் அல்லவா? ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை?
முதலமைச்சர் மீது குற்றம்சாட்டுகிறீர்கள் அல்லவா? அதனால் தான் சிபிஐ விசாரணைக்கு கொடுத்துள்ளார். அவர்கள் விசாரிக்கட்டும். போலீஸ் அதிகாரிகளை எப்.ஐ.ஆர் போடாமலேயே அஜித்குமாரை கூப்பிட்டு அடிக்க உத்தரவிட்டது யார்? எஸ்.பிக்கு தெரியவில்லை. ஐ.ஜியா? சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியா? அவருக்கு உத்தரவிட்டது உதயச்சந்திரனா? அல்லது அவர் மீது பொய்யான குற்றச்சாட்டா? இவை எல்லாம் விசாரணை வளையத்திற்குள் வர வேண்டாமா? உதயச்சந்திரனுக்கு சொன்னது யார் மத்திய அரசில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரி லதாவா? அல்லது உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் அவருடைய கணவரா? யார் சொன்னது? போராட்டத்தில் இவற்றை கேட்க எழுதி தரவில்லையா உங்களுடைய வசன கர்த்தாக்கள்.
ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் சிபிஐ இந்த வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிபிஐ விசாரணையின்போது, இந்த சங்கிலியில் உள்ள அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவருவார்கள் அல்லவா? அவர்கள் அனைவரிடமும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய தேவை உங்களிடம் உள்ளதே. ஏன் அதை செய்யவில்லை? அப்போது உங்களிடம் என்ன அடிப்படை புரிதல் உள்ளது?
முதல் போராட்டமே சொத்தையாக இருந்தால் மக்களுக்கு எப்படி உங்கள் மேல் நம்பிக்கை வரும். முதல் போராட்டத்தில் பேசுவதற்கு கன்டென்ட் வேண்டாமா? நீங்கள் கேள்வி எழுப்பினால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு செல்லும். அப்படி பட்ட வாய்ப்பை பயன்படுத்தாமல் ஏன் வீணடித்தீர்கள்? விஜய் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் செயல்பாடுகள் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ரசிகர்கள். அவர்களுக்கு கஸ்டடியல் மரணம் என்றால் என்ன என்று தெரியாது. இங்கே வந்தால் விஜயை பார்க்கலாம். நேரடியாக மாவட்ட செயலாளர்களே விஜயை பார்க்க முடியாது. ரசிகர்களை வர சொன்னால் எங்கே வேண்டும் என்றாலும் வருவார்கள்.
இதைவிட அதிகமான கூட்டம் பவன் கல்யாணுக்கு வந்தது. நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். இன்னொரு பவன் கல்யாணாக விஜய் மாறினால், அவர் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. பவன் கல்யாணாக மாறி நிற்கலாம். சங்கி போன்று வேஷம் போடலாம். விஜய் களத்திற்கு வந்து போராட தொடங்கியது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த போராட்டத்தை அவர் சரியாக பயன்படுத்தவில்லை. ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.