spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைராமதாசை அன்புமணி எதிர்க்க வேண்டும்! விஜய்க்கு போகும் பாமக வாக்குகள்! பத்திரிகையாளர் மணி பேட்டி!

ராமதாசை அன்புமணி எதிர்க்க வேண்டும்! விஜய்க்கு போகும் பாமக வாக்குகள்! பத்திரிகையாளர் மணி பேட்டி!

-

- Advertisement -

மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதலால் பாமக அரசியல் ரீதியாக அழிந்துவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து கட்சிக்கு முடிவுரை எழுதி விட்டதாகவும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பிரபல செசேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமகவின் செயல் தலைவர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டிருக்கிறார். இது எதிர்பார்த்த ஒரு நடவடிக்கை தான். சமூகநீதி பேசிய ஒரு கட்சி, இன்றைக்கு எங்கே நிற்கிறது என்று பார்க்கிறபோது அயற்சியாக தான் இருக்கிறது. பாமகவை ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கட்சியாகத்தான் பார்க்கிறேன். கிட்டத்தட்ட தலித் மக்களுக்கு இணையான இடத்தில்தான் வன்னியர்களும் இருக்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளில் ராமதாசின் அரசியல் காரணமாக இடஒதுக்கீட்டால் அவர்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, பொறியாளர்களாக பலன் கிடைத்துள்ளது. சமூகத்தின் அனைத்து துறைகளிலும் அவர்கள் மேலே வந்திருக்கிறார்கள்.

பெரிய கட்சிகளில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் கலைஞர், ஜெயலலிதாவால் உறுதிப்படுத்தப்படுவதற்கு ராமதாசின் அரசியலும், பாமகவின் வளர்ச்சியும் உதவி இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக 2004ல் அன்புமணியை மத்திய அமைச்சர் ஆக்கியதும், ராமதாஸ் பாதை மாறிபோனார். இன்றைக்கு இங்கு வந்து நிற்கிறது. 2024 தேர்தலில் பாஜக உடன் அன்புமணி சென்றதில், ராமதாசுக்கு பிரச்சினை இல்லை. அவர் சொன்ன வழிமுறைகளை அன்புமணி கேட்கவில்லை என்பதுதான் பிரச்சினை. வளங்களை பிரித்துக்கொள்வதில் வந்த பிரச்சினை இது.

அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்கி இருப்பதன் மூலம் இது அரசியல் பிரச்சினையாக மாறிவிட்டது. அன்புமணி அரசியல் ரீதியாக சண்டையிட்டால் தப்பலாம். ஓபிஎஸ் போன்று நீதிமன்றத்திற்கு சென்றார் என்றால் தோற்றுவிடுவார். பாமகவில் நிர்வாக ரீதியாக நிறுவனர் தலையிட முடியாது. பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர், பொதுச்செயலாளருக்கு தான் அதிகாரம் உள்ளது என்று அன்புமணி ஆதரவு வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார். எனக்கு தெரிந்தவரை  அதுதான் உண்மை. எனவே பொதுக்குழுவை கூட்டி ராமதாசை, அன்புமணி நீக்கினார் என்றால் அன்புமணிக்கு ஓரளவு எதிர்காலம் இருக்கும்.

இன்னும் அப்பா என்று பார்த்துக் கொண்டிருப்பார் என்றால் அது கிடையாது அவருக்கு. ஒருவர் 2 படகுகளில் பயணம் செய்ய முடியாது. அரசியல் ரீதியாக ராமதாஸ், அன்புமணி ஆகியோரில் யாராவது ஒருவர் தான் நிற்க முடியும். வன்னியர் சங்கத்தினர், ராமதாசுடன் இருப்பதால் அன்புமணி தயங்கலாம். இனிமேல் அந்த தயக்கம் அன்புமணிக்கு இருக்கக்கூடாது. அன்புமணியை நீக்கும் வரை அந்த தயக்கம் நியாயமானது. வன்னியர் சமூகத்தில் அவர் ஒரு குல சாமியாக பார்க்கப்படுகிறார்.

இது அன்புமணிக்கு, வாழ்வா? சாவா? பிரச்சினை. அரசியல் ரீதியான மரியாதையை ராமதாசுக்கு, அன்புமணி கொடுத்தார் என்றால்? அவர் தோற்றுவிடுவார். ராமதாஸ் உங்களை பாமகவில் இருந்து நீக்குகிறபோது, அவரை பாமகவில் இருந்து நீக்குவதை தவிர உங்களுக்கு வேறு வாய்ப்பு இல்லை.  அன்புமணிக்கு தற்போது இருக்கும் ஒரே வாய்ப்பு பொதுக்குழுவை கூட்டி ராமதாசை நீக்குவது மட்டும். அதைவிட்டு அவர் அரசியல் செய்தால், ராமதாசின் கை ஓங்கிவிடும். எப்படி பார்த்தாலும் பாமக இரண்டாகிவிட்டது. இது பாமகவின் பேர வலிமையை குறைத்துவிடும். எதற்காக ராமதாஸ், மகனுடன் இந்த  பிரச்சினையை தொடங்கினாரோ அந்த நோக்கமே இன்றைக்கு முறியடிக்கப்பட்டிருக்கிறது.

வரக்கூடிய தேர்தலில் பாமக ஒன்றாக இருந்தால் அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய வெகுமதிகள், தற்போது பிரிந்த காரணத்தால் இவர்களுக்கு கிடைக்கப்போவது இல்லை. கட்சி எதற்காக அன்பு மணியிடம் போகக்கூடாது என்று ராமதாஸ் சொல்கிறார். காரணம் வெகுமதிகள். அப்பா-மகன் இடையிலான சண்டையில் அடுத்து வருவது மகள், மனைவி. இதன் மூலம் யார் வெற்றி பெற்றாலும் அதிகாரம் குடும்பத்திற்குள்ளே இருக்க வேண்டும் என்பதுதான்.

ராமதாசின் இயல்பு என்பது அவர் அரசியலில் எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர். ஆனால் அன்புமணி விவகாரத்தில் அவருடைய செயல்பாடுகள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்த எல்லைக்கு அவர் போவார் என்று நினைக்கவில்லை. அதற்கு காரணம் சமூக வலைதளங்களில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பரப்பப்படும் தகவல்கள். அதனை பரப்பியதில் அன்புமணியின் பங்கு இருக்கலாம் என ராமதாஸ் சந்தேகப்படுவதாக சொல்கிறார்கள்.  அவருடன் நெருக்கமானவர்கள் தான் அதை பரப்பியதாக தெரிகிறது. எல்லா பிரச்சினைக்கும் அந்த புள்ளியும் ஒரு காரணம்.

அப்பா, பிள்ளையாக இருந்தாலும் தனிமனித விவகாரங்களுக்குள் சென்றுவிட்டால், என்ன என்ன எல்லாம் நடந்துவிடும். அன்புமணி, ராமதாசை அரசியல் ரீதியாக தான் விமர்சித்தார். ஆனால் ராமதாஸ் குறித்து சமூக வலைதளங்களில் வருவது அவருடைய பிம்பத்தை சிதைக்கும் வேலையாகும். இந்த கோபத்தின் வெளிப்பாடகவே அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். ராமதாஸ் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பினால் இந்த பிரச்சினைக்கு தீர்வே கிடைக்காது.

ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் காரணமாக பாதிக்கப்பட போவது பாமகவின் வாக்கு வங்கிதான். பாமக இழந்த வாக்குகளை அன்புமணியால் திரும்ப பெற முடியாது. சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக இதுபோன்ற மோசமான காரியங்களில் ஒரு கட்சி ஈடுபடுகிறது என்றால், அதற்கான பிரதிபலனை அந்த கட்சி அனுபவிக்கும். ராமதாஸ், பாமகவின் வாக்குகள் அன்புமணியிடம் போகக்கூடாது என்று நினைக்கிறார். ஆனால் அந்த வாக்குகள் எல்லாம் பெரிய அளவில் விஜயிடம் போய்விட்டது.

பாஜகவிடமும் அந்த வாக்குகள் செல்கின்றன. வன்னியர் சமுதாயம், மற்ற சமுதாயங்களை விட பாஜக உடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. வன்னிய இளைஞர்கள் ஆர்எஸ்எஸ், பாஜக இயக்கத்திற்கு செல்வதாக ராமதாசே சொல்லி இருந்தார். தற்போது அது நடக்கும். பாமகவினுடைய ஒரு சதவீத வாக்குகள் விஜய்க்கு செல்கிறது. மற்றொருன்று நீண்ட காலத்தில் பாஜகவுக்கு செல்லும். கொஞ்சம் திமுக, அதிமுகவுக்கு செல்லும். அரசியல் ரீதியாக பாமக முடிந்துவிட்டது. தந்தை – மகன் இருவரும் சேர்ந்து பாமகவுக்கு கொல்லிவைத்து விட்டார்கள். இதுதான் இன்றைய எதார்த்தம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ