பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டிருப்பதன் மூலம் தந்தை – மகன் இடையிலான சிக்கல் மேலும் தீவிரமடைந்துள்ளதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.

பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டிருப்பதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் சுமன் கவி, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்கி மருத்துவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது அன்புமணியின், எதேச்சதிகாரமான போக்கிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கடிவாளமாகும். கட்சி தன் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களை உடன் வைத்துக்கொண்டு ராமதாசுக்கு செயல்பட முடியாத அளவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்தார். மருத்துவர் ராமதாஸ் தான் இந்த கட்சியை உருவாக்கினார் என்கிற அடிப்படை புரிதல் இல்லாமல், அவருடைய விருப்பத்திற்கு மாறாக மிகத் தீவிரமாக அன்புமணி இயங்கினார். அதனால்தான் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவர் பொறுப்பை வழங்கினார். அப்போதும் அன்புமணி நீதிமன்றத்திற்கு சென்றார். ஆனால் உட்கட்சி விவகாரம் என்கிற அளவில் சொல்லப்பட்டது.
இன்றைக்கு உட்கட்சி விவகாரம் என்பதை தாண்டி ஒரு நடைமுறையை பின்பற்றி உள்ளனர். அன்புமணி தரப்பில் திலகபாமா, இது குறித்து தங்களுக்கு கவலை இல்லை என்று சொல்லியுள்ளார். பாமக சட்ட விதிகள் 30ன் படி கட்சியின் நிறுவனருக்கு சிறப்பு அதிகாரம் இருக்கிறது என்று ராமதாஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அன்புமணியை நீக்குவதற்கு முன்பாக, அவர் மீது 16 குற்றச்சாட்டுகளை கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு சுமத்தி பதில் அளிக்க சொன்னது. ஆனால் அது குறித்து அன்புமணி எந்த கவலையும் படவில்லை. அப்போது அன்புமணி நீக்கப்பட்ட நடவடிக்கை என்பது ஓப்பீட்டளவில், கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீசை மதிக்காமல் செயல்படும்போது, அது சட்டப்படி வேலை செய்யும். இந்த விவகாரத்தை அடுத்தபடியாக நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றால் கடும் போட்டியாக அமைந்து விடும். ஒட்டுமொத்தத்தில் அன்புமணி நீக்கப்பட்ட நடவடிக்கை கட்சிக்குள் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
பாமகவில் தந்தை, மகன் இடையிலான மோதல் என்பது உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. பிரம்மாஸ்திரமாக பாமகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டிருக்கிறார். பாமகவுக்கு 5 சதவீத வாக்குகள் இருப்பதாக மார்தட்டி கொண்டிருந்த நிலையில், ஏற்கனவே கட்சி 2 சதவீதத்திற்கு கீழாக போய்விட்டதாக பாமகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் குறறம் சாட்டுகின்றனர். அதை தாண்டி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் பிரச்சினை என்பது, பாமகவின் வாக்கு வங்கியை எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது மோடி, அமித்ஷா மேலே இருக்கிறார்கள். நான் எதை வேண்டுமானாலும் எதிர் கொள்வேன் என்று சொல்கிற அன்புமணிக்கு கிடைத்த அடியாகும். இனி அவர் விருப்பப்படி செயல்பட முடியாது. இன்றைக்கு வடமாவட்டங்களில் பெரும்பாலானோர் விஜய் பேக்டருக்கு செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். எனவே பாமகவின் அடிப்படை வாக்கு வங்கி, விஜயின் பக்கம் கரைந்து போவதற்கான வாய்ப்புகள் கண்கூடாக தெரிகிறது. இந்த பிளவு என்பது விஜயை பலப்படுத்ததான் செய்யும்.
மருத்துவர் ராமதாஸ்க்கு இருக்கும் அரசியல் அனுபவத்தில், திமுக கூட்டணி வெற்றிபெறலாம் என நினைக்கிறார். எனவே அந்த பக்கம் போகலாம் என்று நினைக்கிறார். அதேநேரத்தில் அன்புமணிக்கு வழக்குகள் உள்ளன. அன்புமணி சிறை செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் தான் பாஜக உடன் கூட்டணி அமைக்க கால்களை பிடித்து அன்புமணி கெஞ்சினார் என்று ராமதாஸ் சொன்னார். ராமதாசை பொறுத்தவரை கட்சிக்கு உயிர் கொடுப்பதற்கான வேலையை செய்கிறார். அன்புமணியை பொறுத்தவரை சொகுசு வாழ்க்கையில் இருந்து இறங்காமல் வாழ்ந்துவிட வேண்டும் என்று நினைக்கிறார். அந்த புள்ளியில் இருந்துதான் அன்புமணி செயல்படுகிறார். இந்த விவகாரம் அடுத்த கட்டமாக நீதிமன்றத்திற்கு செல்லும். நாளை ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் அதிகரித்து தனி அணி அமைத்தாலும், மக்கள் ராமதாசை ஆதரிப்பார்கள். அன்புமணி சொகுசாக இருக்கிறார் என்பதை மக்கள் அறிகிறார்கள். மேலும் விஜய், பக்கம் அவர்கள் செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது கட்சிகளை பிளப்பதில் பாஜக அடிநாதமாக செயல்படுகிறது என்பது தெரிகிறது, இவ்வாறு அவர் தெரித்தார்.