Homeசெய்திகள்கட்டுரைமனதை கட்டுப்படுத்துவோம் - மாற்றம் முன்னேற்றம் – 17

மனதை கட்டுப்படுத்துவோம் – மாற்றம் முன்னேற்றம் – 17

-

17. மனதை கட்டுப்படுத்துவோம் – என்.கே.மூர்த்தி 

மனதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சுலபமான வேலை. நான் கூட இதற்கு முன்பு நூறு முறை கட்டுப்படுத்தி இருக்கிறேன் என்று வேடிக்கையாக சொல்வார்கள்.

உண்மையில் மனதை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சுலபமானது தான். ஆனால் மனதை கட்டுப்படுத்துவதற்கு முன்பு நாம் தீர்க்கமான முடிவிற்கு வர வேண்டும்.

மனதை கட்டுப்படுத்தியே தீருவேன்

நான் மனதை கட்டுப்படுத்தியே தீருவேன் என்கிற நிலைக்கு வரவேண்டும். அப்பொழுது தான் மனதை கட்டுப்படுத்த முடியும்.

முடியாது என்பது முட்டாள்களின் சொத்து, அதை நாம் ஏன் பயன்படுத்த வேண்டும். இந்த உலகம் வெற்றி பெற்றவர்களை வைத்து தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. வெற்றி பெற்றவர்களை மட்டுமே வரலாறு பதிவு செய்து கொள்கிறது. நாம் வெற்றி பெறுவதற்கு அடித்தளமாக இருப்பது மனதை கட்டுப்படுத்துவது தான்.

மனோதத்துவ நிபுணர் வில்லியம் ஜேம்ஸ் சொல்கிறார். உன் வாழ்க்கையின் முடிவைப் பற்றி முழுமையான சிந்தனை இருந்தால் நினைத்ததை அடையலாம் என்கிறார். நாம் என்னவாக ஆக வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவுதான் முக்கியம். பணக்காரனாக வேண்டும் என்று நினைத்தால் குபேரனாகலாம். படித்தவனாக வேண்டும் என்று நினைத்தால் பெரிய மேதையாகலாம். அரசியல்வாதியாக வேண்டும் என்று நினைத்தால் தலைவராக வளர்ந்து நிற்கலாம். முடிவு தான் முக்கியம்.

William James

மனதை வென்றவன் வாழ்க்கையை சுலபமாக வென்று விடுவான் என்பார்கள். மனதை கட்டுப்படுத்த தெரியாதவர்கள் அல்லது முயற்சி செய்யாதவர்கள் மோசமான அல்லது சுமாரான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார்கள்.

மனதை கட்டுப்படுத்துவதற்கு ஞானிகள் நிறைய வழிமுறைகளை சொல்லிக்கொடுத்து இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தியான முறையை வலியுறுத்தி இருக்கிறார்கள்.

ஜப்பானிய மொழியில் தியானத்திற்கு சாசென் (Zazen) என்று பெயர். இதன் அர்த்தம் வெறுமென அமர்ந்திருத்தல் அல்லது காத்திருத்தல் என்கிறார்கள். அமர்ந்திருக்கும் போது மனதை வெளியே அலைய விடாமல் நாம் என்ன நோக்கத்தை தேர்வு செய்திருக்கிறோமோ அல்லது நாம் அடைய விரும்பும் லட்சியம் எதுவோ அதனை நினைத்துக்கொள்ள வேண்டும். இந்த தியான முறையை அரை மணி நேரம் குறையாமல் ஐந்து முறைக்கு மேல் செய்து வந்தால் வெற்றி நிச்சயம்.

வெறுமென அமர்ந்திருத்தல் அல்லது காத்திருத்தல்

தியானத்தை அதிகாலை, இடை காலை, மதியம், பிற்பகல், இரவு என்று தொடர்ந்து விடாமல் செய்து வந்தால் மனதை நமது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

மனிதர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது மனதை அடக்குவது தான்.

தீராத வயிற்றுவலிக்கு மருத்துவரிடம் சென்ற நோயாளி ஒருவர் இந்த மருந்து, மாத்திரைகளை எப்படி சாப்பிட வேண்டுமென்று கேட்டார். நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை தான்.

அது என்ன நிபந்தனை டாக்டர்?

மருத்துவர் – அது ஒன்றும் இல்லை, இந்த மருந்துகளை சாப்பிடும் போது குரங்கை மட்டும் நினைத்துக் கொள்ளக்கூடாது என்றார்.

மாத்திரையை தொடும் போதெல்லாம் குரங்கு நினைவுக்கு வந்து விடுகிறது

அவ்வளவுதான், மாத்திரையை தொடும் போதெல்லாம் குரங்கு நினைவுக்கு வந்து விடுகிறது.

நமது மனம் அவ்வளவு மோசமானது. அதனை முறையாக கட்டுப்படுத்தி விட்டால் உலகத்தையே வென்று விடலாம்.

தொடர்ந்து இந்த நூலில் சொல்லி கொடுக்கப்பட்டுள்ள நடைமுறை விதிகளை பின்பற்றி வாருங்கள். வெற்றி நிச்சயம்!

                                                                                                                      தொடரும்…

MUST READ