தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட வலையை கண்டு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாட்டில் நடிகர் விஜயின் ஆற்றிய உரை குறித்தும், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக அவர் முன்வைத்த விமர்சனங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- மதுரையில் தவெகா-வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் கூட்டணி தொடர்பாக பரவிய தகவல்களுக்கு அடுத்தக்கட்டத்திற்கு வந்து விளக்கம் அளித்துள்ளனர். பாஜக உடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி கிடையாது என்று தெளிவுபடுத்தியுள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் கடைசி நேரத்தில் வந்து சேர்ந்துகொள்ளலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு நிலவியது. அந்த யூகத்திற்கு தற்போதைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். சினிமாக்காரர்கள் முட்டாள் என்றும், அரசியல்வாதிகள் புத்திசாலிகள் போன்றும் ஒரு விமர்சனம் வரும், அதை நம்பாதீர்கள் என்று தொண்ர்களிடம் சொல்லி அனுப்பியுள்ளார். மார்க்கெட் போன பிறகு அடைக்கலம் தேடி வருபவன் நான் அல்ல என்று விஜய் சொல்கிறார். என்னைப் பொருத்தவரை அவர் சீமானை குறிப்பிடுவதாக தான் நினைக்கிறேன். கொஞ்சம் நாட்களுக்கு முன்பு சீமான், விஜயை விமர்சித்திருந்த நிலையில் அதற்கு பதிலடியாக தான் இதை பார்க்க வேண்டும். எனவே சிலருக்கு மறைமுகாவும், சிலருக்கு நேரடியாகவும் விஜய் சில பதில்களை சொல்லியுள்ளார்.
நம்மை நம்பி வருபவர்களுக்கு கூட்டணியில் இடம் தருவோம் என்று விஜய் சொல்கிறார். விஜயை நம்பி ஒருவரும் வரவில்லை என்று சிலர் விமர்சிக்கின்றனர். ஏன் வர வேண்டும்? வேட்புமனுத் தாக்கல் தொடங்கிவிட்டதா? கூட்டணியில் தொகுதி பங்கீடு நடைபெற்று விட்டதா? எனவே டிசம்பர் மாதத்திற்கு பிறகுதான் யார் கூட்டணியில் யார் இருக்கிறார் என்று தெரியவரும். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிக்க, அக்கட்சியில் உள்ள எம்.பிக்கள் சிலரே முயற்சித்து வருகிறார்கள். திமுக மீதான தாக்குதலை விஜய் வெளிப்படையாக பேசியுள்ளார். இது இடி முழக்கம்தான். இது போர் முழக்கமாக மாறும் என்று சொல்லியுள்ளார். அப்போது உங்களை ஒரு வினாடி கூட தூங்க விடாது என்று சொல்வதன் மூலம் போட்டி திமுக – தவெக இடையே என்று தான் சொல்லியுள்ளார். அடுத்தகட்டமாக முதன் முறையாக அதிமுகவை விமர்சிக்கவும், அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்கான வேலையையும் செய்துள்ளார். அதேவேளையில் எதாவது நடந்தால் விஜயும், அதிமுகவும் சேர்ந்துவிடுவார்களா? என்கிற கேள்வி உயிர்ப்புடன்தான் இருந்து வருகிறது.
அதிமுக தொண்டர்கள் வேதனையில் இருக்கின்றனர் என்று விஜய் திட்டமிட்டு வார்த்தையை பயன்படுத்துகிறார். இதை பாஜக செய்துகொண்டிருந்தது. ஆனால் விஜய் இன்றைக்கு போட்டிருக்கும் தூண்டிலுக்கு பலன் இருக்குமா? என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி வேதனையில் வெம்பி தவிக்கிற அதிமுக தொண்டர்களுக்கு 2026 தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்று தெரியும் என விஜய் சொல்கிறார். அப்போது என்னை ஆதரியுங்கள் என்று சொல்கிறார். சினிமா என்று சொல்கிறபோது விஜய்க்கு, விஜயகாந்தை தவிர்த்துவிட்டு நேரடியாக எம்ஜிஆரை சொல்கிற தகுதி கிடையாது. காரணம் எம்ஜிஆர்-ல் அறிமுகப்படுத்தப்பட்டவரோ, வளர்க்கப்பட்டவரோ விஜய் அல்ல. ஆனால் விஜயகாந்தால்தான் தன் மகன் இவ்வளவு உயரத்துக்கு வந்தார் என்று விஜயின் தந்தை பலமுறை சொல்லியுள்ளார். எனவே எம்ஜிஆரை சொன்னது முழுக்க முழுக்க ஓட்டு வேட்டைதான். ஒட்டுமொத்தமாக இன்றைக்கு அரசியல்வாதி விஜயின் இன்னொரு பரிணாமம் வெளிப்பட்டுள்ளது. தவெக மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கபடதாரி ஸ்டாலின் அங்கிள் அவர்களே என்று விஜய் சொல்லியுள்ளார். திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் திமுகவை தன்னுடைய எதிரி என்று அழுத்தம் திருத்தமாக ஒவ்வொரு நிமிடமாக விஜய் சொல்ல நினைக்கிறார்.
ஊழல் செய்துவிட்டு, பயத்தின் காரணமாக பாஜக உடன் கூட்டணி வைக்கிறார்கள். அந்த அவசியம் நமக்கு இல்லை என்று விஜய் விமர்சித்துள்ளார். இன்னும் சில மாதங்கள் கழித்து அந்த ஊழல் செய்த அதிமுகவுடன் விஜய் கூட்டணி வைத்தால், அதை பொதுமக்கள் ஏற்பார்களா? எனவே தனித்து அல்லது விஜய் தலைமையில் கூட்டணி அமைப்பது என்று முடிவுக்கு வந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. விஜயின் தலைமை என்று சொல்கிறபோதே பிரதான கட்சிகளை எல்லாம் நாம் விட்டுவிடலாம். அதற்கான வாய்ப்புகள் குறைவு. காங்கிரஸ், விஜய் கூட்டணியில் இடம்பெறுவது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. திமுக அதை எந்த அளவுக்கு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு சில தடுப்பு வேலைகளை செய்கிறார்கள். அல்லது அரசியல் சில்மிஷம் செய்ய நினைக்கிற காங்கிரஸ் எம்.பிக்கள் சிலரை, காங்கிரஸ் மேலிடம் அனுமதிக்கிறதா? அல்லது முளையிலேயே கிள்ளி எறிகிறதா? என்று பார்க்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தானே போட்டியிடுவதாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று விஜய் சொல்கிறார். சிறிய சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், 175 தொகுதிகளில்தான் போட்டியிட முடியும். அவர்களில் குறைந்தபட்சம் 150 பேர் புதுமுகங்கள்தான். அதனால் எனக்காக வாக்களியுங்கள். அப்படி வெற்றி பெறும் நபர் உங்களில் ஒருவராக இருப்பார் என்று சொல்கிறார்.
இன்றைய மாநாட்டில் விஜய் வெளிப்படுத்திய வார்த்தைகள் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஒரு எச்சரிக்கை. விஜய் அவர் பாட்டிற்கு பேசிவிட்டு போகிறார் என்று சொன்னால் எடப்பாடி பழனிசாமி தன்னை தானே ஏமாற்றி கொள்கிறார் என்றுதான் அர்த்தம். ஒன்றுபட்ட அதிமுக என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். காரணம் அதனுடைய பலம் என்ன என்று தெரிந்ததால் தான் சொல்கிறேன். எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா என அனைவருக்கும் தனிப்பட்ட விருப்பு, வெருப்புகள் இருந்தாலும் அவற்றை தள்ளி வைத்துவிட்டு, பெருந்தன்மையோடு அதிமுகவை ஒன்றுபடுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதுதான், அதிமுக அரசியலை கவனித்த பத்திரிகையாளராக சொல்கிறேன். நீங்கள் சண்டையிட்டு கொண்டிருப்பதால்தான், உங்களுடைய பலவீனத்தை பயன்படுத்தி முதலில் பாஜக வந்து கூட்டணிக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அடுத்து அதிமுக வாக்கு வங்கியை குறிவைத்து மிகப்பெரிய பிரபலம் வந்துள்ளார். நீங்கள் கட்சியை எவ்வளவு பலமாக வைத்துள்ளீர்காளோ அவ்வளவு சேதாரத்தை தவிர்க்கலாம். எடப்பாடிதான் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தன்னுடைய பிடிவாதத்தை அவர் தளர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட வலையை கண்டு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.