spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கலைஞர் தந்த சொத்துரிமை! 

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கலைஞர் தந்த சொத்துரிமை! 

-

- Advertisement -

வழக்கறிஞர் அ.அருள்மொழி

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கலைஞர் தந்த சொத்துரிமை! 

பெண்களுக்குப் பிறந்த வீடு புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் உண்டு. ஆனால், சொந்தமாக எந்த வீடும் கிடையாது என்பதுதான் நடைமுறை. எல்லா நாட்டிலும் மதங்களிலும் இதே நிலைதான் இருந்தது. சட்ட மொழியில், ஸ்டேட் (STATE) என்ற சொல்லுக்கு நிலையானது என்று பொருள். அதனால்தான், ஒருவரது பொருளாதாரத் தகுதியை ஸ்டேட்டஸ் (status) என்கிறோம். அத்தகைய நிலையான ஒரு சொத்து ஒருவரின் தனிப்பட்ட உரிமையுடையதாக மாறும்போது, அது அவரது எஸ்டேட் (ESTATE) எனப்படும்.

we-r-hiring

அந்த சொத்தைக் குறித்து அதன் உரிமையாளர் எழுதிவைக்கும் ஏற்பாடு, டெஸ்டேட் (TESTATE) எனப்படும். அவ்வாறு எழுதப்பட்ட உயிலின்படி அவரது சொத்துகள் யாருக்குக் கொடுக்கப்பட்டதோ அவருக்குச் சென்று சேரும். அந்த உரிமையாளர் தன் சொத்தைப் பற்றி எதுவும் எழுதிவைக்காமல் இறந்துவிட்டால், அது இன்டஸ்டேட் (INTESTATE) எனப்படும். அப்போது அவரது சொத்துகள், அந்த உரிமையாளர் எந்த மதத்தைச் சேர்ந்தவரோ அந்தச் சட்டத்தின்படி அவரது வாரிசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும்.

உலகமே ஆண்களின் எஸ்டேட் ஆகத்தான் இருக்கிறது என்பதைப் பெண்களின் சொத்துநிலை மற்றும் சமூக அந்தஸ்து குறித்து ஐநா சபையின் அறிக்கை கூறுகிறது. உலகின் வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில்கூடப் பெண்கள் சொத்துரிமை அற்றவர்களாக இருந்தார்கள் என்றால், பெண்ணாகப் பிறப்பதே பாவம் என்ற கருத்துடைய இந்திய இந்து சமூகத்தின் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கும்? அடுத்த வேளை உணவிற்குத் தந்தையையோ, கணவனையோ அல்லது மகனையோ சார்த்திருக்க வேண்டும் என்பதே பெண்களின் நிலை. உணவுக்கும் உடைக்கும் ஒரு பாதுகாப்பான வசிப்பிடத்திற்கும்கூட வழியற்றவர்களாகப் பெண்கள் இருந்தால்தான், அவர்கள் ஆண்களுக்கு அடங்கி, ஒடுங்கி நடப்பார்கள் என்ற எண்ணம் இப்போதும்கூட சமூகத்தில் நிலவுவதை நினைவில் கொண்டால் இந்த உண்மை புரியும்.

இந்தச் சமூக அமைப்பில் ஓர் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு சட்டத்தை 13.2.1989 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள், சட்டமன்றத்தில் ஒரு சட்ட வரைவாக முன்வைத்தார். அந்தச் சட்டம்தான் மூதாதையர் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமையுண்டு என்று அறிவித்த இந்து வாரிசுரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 1989 The Hindu Succession (Tamil Nadu Amendment) Act, 1989.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கலைஞர் தந்த சொத்துரிமை! 

அந்தச்  சட்டத்தின் சிறப்பைப் பற்றி முதலமைச்சர் கலைஞர் கூறும்போது, இது திடீரென்று திட்டமிடப்பட்டதல்ல; 1929ஆம் ஆண்டு, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் சௌந்தரபாண்டியனார் தலைமையில் வரப்பட்ட தீர்மானமான ‘பெண்களுக்கும் ஆண்களைப் போல சொத்தில் சம பங்கு வேண்டும்’ என்பதை அறுபது ஆண்டுக்குப் பிறகு சட்டமாக்குகிறோம் என்று பெருமிதத்துடன் கூறினார். பெரியார் அவர்களால் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டத்தின் தனித்தன்மை யாதெனில், மூதாதையர் சொத்தைப் பிரிக்கும்பொழுது, மகனுக்கு என்ன பங்கு உண்டோ அதே பங்கு மகளுக்கும் கிடைக்கும் என்பதுதான். ‘இன்னொரு வீட்டுக்குப் போகிறவள் என்ற அடைமொழியோடு, பிறந்த வீட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்துப் பெண்களுக்கு மறுக்கப்பட்டுவந்த அடிப்படை உரிமையை இந்த ஒரே சட்டத்தின்மூலம் பெண்களின் பிறப்புரிமையாக்கிய பெருமை கலைஞர் அவர்களின் சாதனைகளிலேயே முதன்மையானது.

இந்த அறிவிப்பு செய்தித்தாள்களில் வந்தபோது தமிழ்நாட்டுப் பெண்கள் நம்ப முடியாமல் திகைத்தார்கள். இது உண்மையா? என் கொள்ளுத்தாத்தா சொத்தில் எனக்குப் பங்கிருக்கிறதா? அப்படியானால் நானும் என் அண்ணன் தம்பியைப்போல் பரம்பரைச் சொத்தின் பங்காளியா! என்ற வியப்பு, மகிழ்ச்சி ஒருபுறம்; இது நடக்குமா, நடக்க விடுவார்களா? என்ற சந்தேகம் இன்னொரு புறம். அவர்களது சந்தேகங்களையெல்லாம் தீர்த்து, தமிழ்நாட்டின் சட்டப்பேரவை 6.5.1989 அன்று அந்த மசோதாவை நிறைவேற்றியது. குடியரசுத்தலைவரின் இசைவைப் பெற்று,1990ஆம் ஆண்டில் முழுச் சட்டவடிவம் பெற்றது.

கலைஞர் அவர்கள் நிறைவேற்றிய இந்தச் சட்டமானது இந்து வாரிசு உரிமைச் சட்டத்தின் பிரிவு 29ல், ஓர் இந்து குடும்பச் சொத்தில் பங்காளி உரிமை உடைய ஓர் ஆண் இறக்கும்போது, அவரது மகளும் மகனைப்போலவே அனைத்து உரிமைகளையும் பெற்ற பங்காளியாகிறார் (Coparcener). ஒரு மகனாக இருந்தால் அவருக்கு என்னென்ன உரிமையும் கடமையும் உண்டோ, அவை அனைத்தும் பெண்ணுக்கும் உண்டு என்று சேர்க்கப்பட்டது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கலைஞர் தந்த சொத்துரிமை! 

மேலும், ஒரு பரம்பரைச் சொத்து பாகப்பிரிவினை செய்யப்படும்போது அந்தச் சொத்தில் உரிமை உடைய ஒரு மகனோ அல்லது மகளோ இறந்து போயிருந்தால் அப்படி இறந்துபோன மகன் அல்லது மகளுடைய மகள்களுக்கும் அதே உரிமை உண்டு. இவற்றைத் தவிர ஒரு பெண்ணுடைய பெயரில் வாங்கப்பட்ட அல்லது தந்தை தாய் சொத்தில் ஒரு பெண்ணுக்குக் கிடைத்த சொத்துகள் அப்பெண்ணின் தனி உரிமைச் சொத்துகளாகும் என்று தமிழ்நாடு அரசின் சட்டம் அறிவித்தது.

இந்தச் சட்டம் 1990ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தாலும் அதன் பயன் 1989 மார்ச் 25ஆம் தேதி முதல் வழங்கப்பட்டதால் இன்றுவரை அதனை 1989 சட்டம் என்றே பலர் குறிப்பிடுகின்றனர். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த உடன், பெண்கள் பலர் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் கலைஞர் கொண்டுவந்த திருத்தப்படி தனது தந்தை அல்லது அண்ணன் தம்பியரிடம் தங்கள் பங்கைக் கேட்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

பெண்களின் உள்ளம் மகிழ்ச்சியில் நிறைந்த அதே நேரத்தில், தந்தைகளும் அண்ணன் தம்பிகளும் வேறு விதமாகக் கவலைப்படத் தொடங்கினார்கள். ஏற்கெனவே, திருமணத்தின்போது பெண்ணுக்கு அளிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு, வரதட்சனையாகக் கொடுத்த பொருள்கள், பணம், சீர் வரிசைச் செலவுகள் – இவை போக, சொத்தில் வேறு பங்கு கொடுக்க வேண்டுமா? அப்படியானால் ஆண் வாரிசுகளுக்கு என்ன மிஞ்சும்? என்ற கவலை அவர்களைச் சூழ்ந்துகொண்டது.

அவர்களது கவலைக்கான தீர்வும் கலைஞரின் அனுபவ அறிவால் இந்த திருத்தச் சட்டத்திலேயே சேர்க்கப்பட்டிருந்தது. அதாவது, இச்சட்டத்தின் பயன் 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். அதன்பின் திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்குத்தான் இச்சட்டத்தின் பலன் கிடைக்கும். திருமணம் செய்யாவிட்டாலும் உரிமை உண்டு. எனவே, ஏற்கெனவே பெரும் பணம் செலவுசெய்து, நகைகளும் வரதட்சணையும் கொடுத்தவர்கள் மேலும் பாதிக்கப்பட, மார்ச் 1989 அறிமுகமான மாட்டார்கள்.

சட்டம் முதல் தங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்பவர்கள் தங்கள் சொத்தையும் பங்கிடவேண்டிய தேவையை உணர்ந்து, அதற்கேற்ப முடிவு செய்வதற்கு இந்தத் தேதி நிர்ணயம் உதவியாக இருக்கும் என்பதே முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கருத்து. பெண்களின் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்; பெற்றோர் கவலையையும் மனத்தில் கொள்ள வேண்டும் என்ற முதிர்ந்த சமூகப் பார்வையின் பதிவு அது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடன், சமூக நீதித் தத்துவத்தின் அடிப்படையில் இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்கள் அல்லது சனாதனத்தின் அடிப்படையில் எதிர்ப்பவர் என இரு பிரிவுகளும் விவாதங்கள் தொடங்கின. திராவிடர் கழக மகளிரணி 29.4.1990 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழாவில் கலைஞர் அவர்களுக்கு “மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர்” என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியது. அதே நேரத்தில், பெரும் சட்ட வல்லுநர்கள் அரசின் முடிவைப் பற்றியும் அந்தத் திருத்தம் சரியா என்றும் செல்லுமா என்றும் ஆராயத் தொடங்கினார்கள்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கலைஞர் தந்த சொத்துரிமை! 

சில ஆங்கில ஏடுகளில் அத்திருத்தம் பெரிய அளவில் பயன் தராதென்றும் மகளுக்குப் பயன்படும் ஆனால், மனைவிக்குப் பங்கு குறைந்துவிடும். என்றும் நாள் கணக்கில் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள் வெளியாயின் இதற்கு ஓராண்டு முன்பு, ஆந்திர மாநிலத்தில் இத்தகையதொரு திருத்தச் சட்டம் வந்தபோது, அதற்கு இவ்வளவு எதிர்ப்பில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அந்த விமர்சனங்களில் இன்னொரு கேள்வியும் உள்ளடங்கி இருந்தது. ‘இந்து வாரிசுரிமை’ (Hindu Succession rights) என்பது ரிஷிகளால் உருவாக்கப்பட்டது. மாபெரும் சாஸ்திர மேதைகளால் வியாக்கியானம் செய்யப்பட்டது. அந்தச் சட்டத்தைத் திருத்த இவர் யார்? என்பதே அந்தக் கேள்வி. சொத்துரிமை பெறுவதற்குப் பெண்களுக்குத் தகுதி இல்லை என்று வேதகாலம் முதற்கொண்டு மேல்வருணத்து அறிஞர்களால் உருவாக்கப்பட்ட விதிமுறைகளைக் கால்வருணத்தில் பிறந்த ஒருவர் மாற்றி அமைப்பதா என்ற ஆதிக்க உள்நோக்கங்களை மறைத்துக்கொண்டு சட்டரீதியான வாதங்களை அவர்கள் முன்வைத்தார்கள்.

அதே நேரத்தில், பலர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தார்கள். இரு வேறு கோணங்களில் உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லாது என்று சில வழக்குகளும், 1989 மார்ச் 25-க்குப் பிறகு திருமணம் செய்தவர்களுக்கு மட்டும்தான் இந்த உரிமையா? அதற்கு முன்பே திருமணம் செய்ததால் எங்களுக்கு மூதாதையர் சொத்தில் உரிமையை மறுக்கலாமா என்று கேட்டுச் சில வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், எந்த வழக்கிலும் இந்த திருத்தச் சட்டத்திற்குத் தடை விதிக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசு, சட்டம் இயற்றி 15 ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய முற்போக்குக் கூட்டணியின் (காங்கிரஸ் தலைமையிலான) அரசு, இந்தியா முழுமைக்குமான இந்து வாரிசுரிமைத் திருத்தச் சட்ட வரைவை 2004ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்தச் சட்டம் குடியரசுத் தலைவரின் இசைவைப் பெற்று, 2005ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு 1989ல் முன்னெடுத்த திருத்தங்கள் 2005ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுமையும் உள்ள பெண்களுக்குக் கிடைத்தன.

இதேபோல் வெவ்வேறு மாநிலங்களில் இந்து வாரிசுரிமைச் சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை அனைத்தையும் எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டிருந்த பல்வேறு வழக்குகளும் மேல்முறையீடுகளும் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றாக எடுத்து விசாரிக்கப்பட்டன. மிக ஆழமான வாதங்களை அனைத்துத் தரப்பினரும் முன்வைத்தனர். விசாரணையை நடத்திய மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் நாள், வினிதா சர்மா எதிர் ராகேஷ் சர்மா’ என்ற வழக்கில் ஓர் அதிரடித் தீர்ப்பை வழங்கியது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கலைஞர் தந்த சொத்துரிமை! 

அத்தீர்ப்பில் அனைத்து இந்து வாரிசுரிமைத் திருத்தச் சட்டங்களும் செல்லும் என்று அறிவித்தது. அது மட்டுமன்றி தமிழ்நாடு அரசு திருத்தச் சட்டத்தில் 1989 மார்ச் 25-க்கு முன்னால் திருமணம் செய்த பெண்களுக்குப் பொருந்தாது என்று இருந்ததை மாற்றி, பரம்பரைச் சொத்தில் பெண்களுக்குள்ள உரிமையானது 1956ஆம் ஆண்டு முதலே நடைமுறைக்கு வரும் என்றும் அதற்கு திருமணத் தேதி தடையல்ல என்றும் அறிவித்தது.

இப்படியாக 1989 முதல் தொடங்கிய சட்டப் போராட்டங்கள் 2015ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டன. கலைஞர் உருவாக்கிய பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டம் 1956ஆம் ஆண்டு முதல் பிறந்த அனைத்துப் பெண்களுக்கும் செல்லத்தக்கது என்று மேலும் ஒரு சிறப்பைக் கூட்டியது.

கலைஞர் அவர்கள் கொண்டுவந்த சொத்துரிமைச் சட்டத்திற்கு முன் இந்து சட்டத்தின் கீழ் பெண்களுக்கு என்ன உரிமை இருந்தது? அது எப்போது சட்டமானது? அந்தச் சட்டம் கொடுத்த உரிமைக்கும் கலைஞர் உருவாக்கிய 1989ஆம் ஆண்டு சட்டத்திற்கும் என்ன வேறுபாடு? இச்சட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் என்ன? என்ற கேள்விகளுக்கான விடையைக் காண முதலில் பெண்களின் உயர்நிலை அல்லது சமநிலை வீழ்ச்சியுற்ற வரலாற்றை அறிய வேண்டும்.

மனிதகுல வரலாற்றில் பெண்ணின் தலைமைத்துவம் மாறி ஆண் தலைமையில் சமூகம் அமையத் தொடங்கிய காலகட்டம்தான் குடும்பம், தனிச்சொத்து இரண்டும் இணைந்து உருவான காலம் என்றார் மானுட ஆய்வாளர் எங்கெல்ஸ். பெண்ணின் மீதான அடக்குமுறை, குடும்பம் என்ற அமைப்போடு பின்னிக்கிடக்கிறது என்பதைப் பார்க்கும்போது எங்கல்ஸ் முன்வைத்த, குடும்பம், தனிச்சொத்து, பெண்ணடிமை என்ற கூட்டமைப்பை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்தக் கட்டமைப்புதான் ஆணாதிக்கத்தின் கருவியாக இருக்கிறது.

அதன் விரிவுதான் சமூகம், மொழி, பண்பாடு, மதம் என ஒவ்வொரு வட்டமாக விரிந்துகொண்டே இருக்கின்றது. இந்த வளையங்களைத் தாண்டி பெண் பறந்துவிடாமல் அவள் சிறகுகளை அழகாகக் கத்தரிக்கும் வேலையைத்தான் மதங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. தனக்கென்று ஒரு சொத்தோ வருவாயோ இருந்துவிட்டால், அடிமையாக வாழப் பெண்கள் உடன்பட மாட்டார்கள். எனவே, உணவுக்கும் உடைக்கும் பாதுகாப்புக்கும் அவள் ஓர் ஆணை நம்பி இருக்கவேண்டிய நிலையை மதச்சட்டங்கள் உறுதிசெய்தன.

பொதுவாக, மதங்களும் அவற்றின் புனித நூல்களும் பெண்ணை அடிமை நிலையில் வைத்திருப்பதை முதன்மையான கடமையாகக் கொண்டிருந்தாலும், இசுலாமியப் பெண்களுக்கு வாரிசு அடிப்படையில் சொத்துரிமை உண்டு என்று இசுலாமியர்களின் மத நூலான குரானில் எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்தவப் பெண்களுக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை சொத்தில் வாரிசுரிமை கிடையாது. இந்தியாவில் கிறிஸ்தவப் பெண்களுக்கான சொத்துரிமை முதன் முதலில் 1925ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின்படி வழங்கப்பட்டது.

ஆனால் இந்தியாவில், குறிப்பாக இந்து மத, சனாதன தர்ம சாஸ்திர சட்டத்தின் (Hindu Law) கீழ் வரக்கூடிய பெரும்பான்மையான பெண்களுக்குச் சொத்துரிமை காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், பழைய பாரம்பரியத்தைக் குறை சொல்லிவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு சில சமூக, சட்ட ஆய்வாளர்கள் வேதகாலத்தில் பெண்கள் சம உரிமையுடன் வாழ்ந்தார்கள் என்றும் அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் இருந்தன என்றும் நிறுவ முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், அவர்களால் வேதங்களில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை. அவர்களால் அதிகபட்சமாகச் சொல்ல முடிவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஒரு பெண்ணுக்கு திருமணத்தின்போது அன்பளிப்பாக வழங்கப்படும். சீதனப் பொருட்களே அவளது சொத்து. எனவேதான் அது சீதனா என்றழைக்கப்பட்டது. அது சொத்துரிமையாகுமா? திருமணத்தின்போது தந்தை மனது வைத்து என்ன கொடுக்கிறாரோ அதுவே சீதனம். அது தங்கம்-வெள்ளியாகவும் இருக்கலாம். தகரப்பெட்டியும் ஓலைப் பாயுமாகவும் இருக்கலாம். அதைத் தவிர அசையும், அசையாத சொத்து எதிலும் அவள் பங்கு கேட்க முடியாது.

இதுதான் இந்துப் பெண்ணின் சொத்துரிமை என்பதை உறுதிசெய்வதற்கு ஒரு உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உதவுகிறது. திரு மார்க்கண்டேய கட்ஜூ அவர்கள் தனது தீர்ப்பு ஒன்றில், கீழ்வர்ணத்துப் பெண்களுக்குச் சொத்து என்பது அவர்களுக்குத் திருமணம் செய்யும்போது வழங்கப்படும் அன்பளிப்புகளும் சீதனமும்தான் என்றும், அப்பெண்களுக்கு அவர்களது சீதனப்பொருள்மீது உள்ள உரிமை போல, மேல்வர்ணத்துப் பெண்களுக்கு உரிமை இருப்பதாக ஸ்மிருதிகளில் கூறப்படவில்லை என்றாலும், கீழ்வர்ணத்தாருக்கு உள்ள அந்த உரிமையானது மேல்வருணத்துப் பெண்களுக்கும் பொருந்தும் என்ற ஒரு வியாக்கியானத்தைப் பயன்படுத்தினார்.

அவர் தீர்ப்பு சொன்ன அந்த வழக்கிற்கும் இந்தக் கருத்திற்கும் தொடர்பில்லை. அந்த வழக்கு ஓர் அரசுப் பணிக்கான தகுதிகள் பற்றியது. அந்தத் தீர்ப்பில் நீதிபதி வலிந்து தன் கருத்தை உள்நுழைப்பதற்கு மீமாம்சா விளக்கம் என்ற பெயரில் பெண்கள் சொத்துரிமை குறித்து ஸ்மிருதிகள் என்ன சொல்கின்றன. அதனை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்று விளக்கினார். (ரஜ்பிர்சிங் தலால் -எதிர் சௌதாரி தேவிலால் (2008) 9 SCC 284. Rajbir Singh Dalal Vs Chaudhari Devilal Lal University Siras and Anonymous).

எவ்வளவு தேடினாலும் வேதங்களிலோ அல்லது ஸ்மிருதிகளிலோ ஓர் ஆணுக்கு இருப்பதைப்போல பெண்ணுக்குச் சொத்துரிமை உண்டு என்று எங்குமே கூறப்படவில்லை. ஒரு தந்தையிடம் இரண்டு வீடுகளும் ஒரு பரந்த நிலப்பரப்பும் இருக்கலாம். ஆனால், அவர் தன் மகளுக்கு அவற்றில் ஒரு சிறு பங்கையாவது கொடுக்க வேண்டும் என்று ஸ்மிருதிகள் சொல்லவில்லை. மாறாக, ஒரு தந்தையானவர் தன் விருப்பத்திற்கு ஏற்பத் தன் மகளுக்கு வழங்கும் சீதனப் பொருட்களை அவளது சொத்து என்றும் அந்த சீதனத்தின்மீது அவள் கணவனுக்கோ, அவர் உறவினர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை என்று கூறியதைத்தான் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்ததாகச் சாதிக்கிறார்கள்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கலைஞர் தந்த சொத்துரிமை! 

உரிமை இவ்வாறு வேதகாலம் முதல் மறுக்கப்பட்ட பெண்ணின் நிலையை சாஸ்திரங்கள் மேலும் வலுவற்றதாக்கின. பெண்ணின் பிறப்பே பாவம் என்றும், அவள் பெற்றவர்களுக்குப் பாரம் என்றும், பெண்ணைப் பெற்றதற்காகவே அவள் தந்தை தலைகுனிந்தே ஆக வேண்டும் என்றும் புராணக் கதைகள் உருவாக்கப்பட்டன. ஆணின் வாரிசை அதுவும் ஆண் வாரிசைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே ஒரு பெண்ணின் பிறப்பும் வாழ்வும் இருக்கிறது என்ற கருத்தாக்கத்தை இந்து சாஸ்திரங்கள் உருவாக்கின. ஆண் பிள்ளை பெறாத மனைவியைக் கணவன் விலக்கி வைக்கலாம் என்று மனுஸ்மிருதி கூறுகிறது.

மேலும், பருவம் அடைவதற்கு முன்பே பெண் குழந்தையைத் திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும். கணவன் இறந்துவிட்டால் அவளைக் கணவனின் சிதையிலேயே போட்டு எரித்துவிட வேண்டும் என்ற கொடூரமான விதிகள் பின்பற்றப்பட்டன. இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்பக்கூட வலுவற்றவர்களாகப் பெண்கள் இருந்தார்கள். குழந்தைத் திருமணத்தைத் தடுக்க டாக்டர் ஹர்பிலாஸ் சார்தா, உடன்கட்டை ஏறுவதைத் தடுக்க ராஜாராம்மோகன்ராய் ஆகிய சீர்திருத்தவாதிகள் போராடிச் சட்டங்கள் உருவாகச் செய்தார்கள். ஆனாலும் பெண்களின் வாழ்நிலை எந்த உரிமையும் அற்று, ஓர் ஆணின் உணவுத்தேவை, உடல்பசி மற்றும் வாரிசு உருவாக்கல் என்ற மூன்று தேவைகளை நிறைவேற்றும் அடிமை இயந்திரமாகவே பெண்கள் நடத்தப்பட்டார்கள்.

இதனை மாற்றுவதற்கு இந்தியாவில் நடந்த முதல் முயற்சி தந்தை பெரியார் நடத்திய சுயமரியாதை மாநாடுகளே ஆகும். பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்ற உரிமைக்குரலை 1925ஆம் ஆண்டு முதல் எழுப்பியவர் தந்தை பெரியார். அதற்காகத் தொடர்ந்து குடி அரசு ஏட்டில் எழுதினார். பல பெண்ணுரிமைப் போராளிகள், சிந்தனையாளர்கள் குடிஅரசு ஏட்டில் எழுதினார்கள். சுயமரியாதை இயக்க மாநாடுகளில் பெண்கள் தலைமை ஏற்றார்கள், கொடி ஏற்றினார்கள், சிறப்புரை ஆற்றினார்கள். மகளிர் மாநாடு என்றே தனி மாநாடுகள் நடைபெற்றன. ஒவ்வொரு மாநாட்டிலும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சமமான சொத்துரிமை அளிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கல்வி, வேலை, திருமண உரிமை, மறுமண உரிமை, விவாகரத்து உரிமை என அவர்கள் பேசாத பெண்ணியக் கருத்து எதுவுமே இல்லை.

அதே காலகட்டத்தில், ஒடுக்கப்பட்டோர் மேம்பாட்டுக்காகப் போராடிய பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள், இந்துப் பெண்களின் சொத்துரிமை குறித்து சட்டப்படியான விவாதங்களை முன்னெடுத்தார். இந்தியாவின் தெற்கில் தந்தை பெரியாரின் சமூகப்புரட்சி இயக்கமும், வடக்கில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் போராட்டங்களும் சீர்திருத்தச் சிந்தனைகளும் பேரலையாகப் பரவியது. அதன் விளைவாக இந்துப் பெண்கள் சொத்துரிமைக்கான முதல் சட்டம் ஆங்கிலேயர்களால் 1937ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.

அந்தச் சட்டத்தில், ஓர் இந்துக் கணவர் தனது சொத்தைக் குறித்து உயில் எதுவும் எழுதாமல் இறந்துவிட்டால், அவரது விதவை மனைவியோ அல்லது மனைவிகளோ தன் மகன்களோடு சமமாக ஒரு பங்கைப் பெறமுடியும். அதைப்போல் அவரது விதவை மருமகளும் பெறமுடியும். ஆனால், இறந்துபோனவரின் மகளுக்கு அந்த உரிமை இல்லை. மேலும் விதவை மனைவியோ அல்லது மனைவிகளோ அந்தச் சொத்தை விற்கவோ மாற்றவோ முடியாது. அவர்களது உரிமை ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது (Limited Estate). அப்பெண்களுக்கு விவசாய நிலங்களில் பங்கு கேட்க உரிமை இல்லை என்று நீதிமன்றங்கள் விளக்கம் கூறின.

1937ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொண்டுவந்த இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் வந்த பிறகுதான் வேதங்கள்/ஸ்மிருதிகளின் ஆதிக்கம் குறைந்து, ஒரு பெண்ணுக்குத் தனிப்பட்ட வாரிசு முறையிலோ உயில் வழியாகவோ அல்லது அவளது உழைப்பிலோ வாங்கிய அனைத்து வகைச் சொத்துகளும் அந்தப் பெண்ணின் தனிப்பட்ட உரிமையானது. 1937-க்குப் பிறகு 1956 வரையில் பெண்களுக்குத் தந்தையின் சொத்தில் முழு உரிமையுடன் சமபங்கு கொடுக்கக்கூடிய எந்தச் சட்டமும் வரவில்லை.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - கலைஞர் தந்த சொத்துரிமை! 

பெண்களுக்குச் சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை, திருமண ரத்துரிமை ஆகியவற்றை உள்ளடக்கி, 1950ஆம் அண்டு, அப்போதைய இந்திய சட்ட அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் அவர்கள் முன்னெடுத்த ‘இந்து வரையறைச் சட்டம்’ (Hindu Cocle BIII) இந்திய நாடாளுமன்றத்தில் சனாதனவாதிகளால் முறியடிக்கப்பட்டது. எனவே, அவர் தன் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, தன் வேதனையை வெளிப்படுத்தினார்.

அதன் பின்பு, டாக்டர் அம்பேத்கரின் முயற்சிகளுக்கு ஆதரவான குரல்கள் அதிகரித்தன. அதனால், பிரதமர் நேரு அவர்கள் 1956ஆம் ஆண்டு, இந்து வாரிசுரிமைச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். அந்தச் சட்டத்தின்படி, ஓர் இந்து ஆண் உயில் எழுதாமல் இறந்துவிட்டால் அவரது சொத்தில் அவரது மனைவி, மகன், மகள் அனைவரும் சமமான பங்கைப் பெறுவார்கள். பரம்பரைச் சொத்தைப் பொறுத்தவரை தந்தையும் மகனும் மட்டுமே சம பங்கு பெறுவார்கள். பின், தந்தையின் பங்கில் மட்டுமே மனைவி மகன் மகள் மூவரும் பங்கு பெறுவார்கள் என்ற மாற்றம் ஏற்பட்டது. இப்படி எந்தச் சட்டம் வந்தாலும் மூதாதையர் சொத்தில் பெண்ணுக்குப் பங்கு இல்லை என்பது மாற்ற முடியாத சமூக விதியாகவே மாறியது.

ஆண்டவனால் எழுதப்பட்டது என்று சொல்லப்பட்ட எத்தனையோ விதிகளை மாற்றியமைத்த பெருமை உடைய திராவிட இயக்கம்தான் இந்த நிலையையும் மாற்றியது. திராவிட முன்னேற்றக் கழகம் 1967ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தவுடன் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பேரறிஞர் அண்ணா அவர்கள், சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட வடிவம் கொடுத்தார். அவருக்குப் பின் முதல்வர் பொறுப்பை ஏற்ற கலைஞர் அவர்களின் ஆட்சிக்காதில் பெண்கள் முன்னேற்றத்திற்கான ஏராளமான சட்டங்களும்,திட்டங்களும் உருவாக்கப்பட்டன.

பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அன்னை நாகம்மையார் நினைவாக மகளிர் இலவசப் பட்டப் படிப்பு திட்டம் மூலம் அனைத்து ஏழை நடுத்தரக் குடும்பப் பெண்களுக்கு இளங்கலைப் பட்டப் படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவாக மகப்பேறு நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது. அரசுப் பணிகளில் பெண்களுக்கு முப்பது விழுக்காடு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெண்கள் காவல் துறையில் காவலர்களாகப் பணியமர்த்தப்பட்டார்கள். தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் பெண்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

சுயதொழில் செய்ய விரும்பும் பெண்களுக்கு, ஆட்டோ ரிக்ஷா வாங்வதற்கு நிதி வழங்கப்பட்டது. பெண்களின் தொழில் வளர்ச்சிக்காகவும் தொழில் மற்றும் விவசாய பெண்களுக்கெனத் தனியாகத் தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டன. வளர்ச்சிக்காகவும் மகளிர் சுயஉதவிக் குழுக்களைத் தொடங்கியவரும் கலைஞர் அவர்கள்தான்.

மேலும், பெண்ணுரிமைக்காகப் போராடிய மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார், அன்னை மணியம்மையார், சத்தியவாணி முத்து அம்மையார் ஆகியோர் பெயர்களில் பெண்களுக்கான சிறப்பு நலத்திட்டங்களைத் தமிழக அரசின்மூலம் சாதித்துக் காட்டியவர் கலைஞர். தொழில் முனைவோராக உருவான பெண்களுக்குப் பொருளாதார உதவி, தொழில் வளாகங்களில் தொழில் மனைகள் ஒதுக்கீடு, மீனவ மகளிருக்குக் கூட்டுறவுச் சங்கங்கள், பெண்களே நடத்தும் நியாய விலைக்கடைகள், சிறுதொழில் நடத்தும் பெண்களுக்குக் கடன் உதவித் திட்டம் என்று துறைதோறும் பெண்ணுரிமையை நிலைநிறுத்திய தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற சாதனைச் சரித்திரம் படைத்தவர் கலைஞர்.

இந்தப் பின்னணியில்தான் சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாக மூன்றாம் முறையாகக் கலைஞர் அவர்கள் முதல்வராகப் பதவியேற்ற உடன் 1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் நாள் அறிமுகப்படுத்திய பெண்களின் சொத்துரிமைச் சட்டம், ஒரு வரலாற்றுப் புரட்சியானது. வழக்குகளை எதிர்கொண்டு 11.08.2023 அன்று வினிதா சர்மா எதிர் ராகேஷ் சர்மா என்ற வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தில் முழுமையான அங்கீகாரத்தைப் பெற்றது, கலைஞர் உருவாக்கிய இந்து வாரிசுரிமை தமிழ்நாடு திருத்தச் சட்டம், 1989, இது திராவிட இயக்க வரலாற்றில் மிகப்பெரிய சாதனை மட்டுமல்ல, இந்துப் பெண்களின் சொத்துரிமை வரலாற்றில் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய பங்களிப்பாகும்.

‘தையல் சொல் கேளேல்’ என்ற பழைய ஆத்திசூடியை மாற்றி, பெண்ணொடு ஆண் நிகர்’ என்று புதிய ஆத்திசூடி படைத்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அந்த நிலையை அடைவதற்குத் தமிழ்நாட்டுப் பெண்களின் கைகளில் கல்வி எனும் தகுதியையும், சொத்தில் சம பங்கு என்ற உரிமையையும் பெற்றுக்கொடுத்தவர் நம் சமூக நீதிக் காவலர் கலைஞர் என்பதைப் பெண்ணுலகம் நினைவில் கொள்ள வேண்டும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதியை அர்த்தமுள்ளதாக்கும் திராவிட மாடல்!

MUST READ