விடுதலை இராசேந்திரன்

75 ஆண்டுக்கால தி.மு.க.வின் அரசியல் பயணம் மிகவும் தனித்துவமானது. இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சிக்கும் இப்படி ஒரு பயணம் இருந்தது இல்லை. 1949ஆம் ஆண்டில், பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திராவிட முன்னேற்றக் கழகம், பெரியாரின் சமுதாயக் கொள்கைகளையும் தன்னுடன் ஏற்றுக்கொண்டுதான் பிரிந்தது. ‘திராவிட முன்னேற்றக் கழகமும் திராவிடர் கழகமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்படும்’ என்றார் அண்ணா.

ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம், தன்னை ஒரு மதச்சார்பற்ற கட்சியாக, தொடர்ச்சியாக அடையாளப்படுத்தி வந்தது. முதன்முதலாக இந்தியாவில் சட்டமன்றத்தில் பதவி ஏற்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள், கடவுள் பேரால் உறுதிமொழி எடுக்க வேண்டாம் மனசாட்சியின் வழி எடுக்கலாம் என்பதை இந்திய அரசியலுக்கு அறிமுகப்படுத்தியது, திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
பார்ப்பன ஆதிக்க அரசியலில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு, பார்ப்பனர் அல்லாதார் அமைச்சரவையை தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதன்முதலாக அமைத்த பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதற்குப் பிறகு, தொடர்ச்சியாகப் பார்ப்பனர் அல்லாத அமைச்சரவைதான் இப்போதும் அமைக்கப்பட்டுவருகிறது.
சமூக நீதியின் முன்னத்தி ஏர்!
75 ஆண்டுக்கால அரசியல் வரலாறு கொண்ட கட்சிகளாக இன்றைக்கு காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும்தான் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சி ஒரு காலத்தில், பார்ப்பன – பனியாக்கள் ஆதிக்கத்தில் இருந்தது. சமூக நீதி. இடஒதுக்கீட்டை மறுத்துவந்தது. அதற்காகத்தான் பெரியார் அக்கட்சியில் இருந்து விலகினார். இன்றைக்கு காங்கிரஸினுடைய தலைமை முழுமையாக இடஒதுக்கீட்டைப் பேசுகிறது. மாநில உரிமைகள் பற்றிப் பேசுகிறது. பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. ஆக, திராவிடர் இயக்கத்தினுடைய கொள்கையைத்தான் இன்றைக்கு காங்கிரஸ் பேசத் தொடங்கி இருக்கிறது.

வர்க்கப் புரட்சியின் வழியாக அனைத்து மாற்றங்களையும் செய்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சி, ஒரு காலத்தில் சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, மதவாத எதிர்ப்புக்கு முன்னுரிமை கொடுக்காமல் இருந்த நிலையை இன்றைக்கு மாற்றிக்கொண்டு, இந்துத்துவ அரசியலை எதிர்க்கவேண்டிய ஒரு கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு, திராவிட இயக்கம் பேசிய கருத்துகளை இன்று மீண்டும் பேசவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ‘சாதி எதிர்ப்பில் நாங்கள்தான் முன்னணியில் இருக்கிறோம்’ என்று சொல்லக்கூடிய நிலையை, இன்றைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் எட்டியிருக்கின்றன. அது, திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றியாகவே நாம் பார்க்க வேண்டும்.
நீதி மறுக்கப்பட்டோருக்கே முன்னுரிமை!
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ஒரு கதையைக் கூறினார். “ஒரு புல்லாங்குழல் தரையில் கிடக்கிறது, அதற்கு மூன்று சிறுவர்கள் உரிமை கோருகிறார்கள். ஒரு குழந்தை, இந்தப் புல்லாங்குழலை எனக்கு மட்டுமே வாசிக்கத் தெரியும், எனக்குத் தருவதுதான் சரி என்று கேட்கிறது. மற்றொரு குழந்தை, என்னிடம் விளையாடுவதற்கு எந்தப் பொருளும் கிடையாது. வாங்கித் தரும் நிலையில் எனது பெற்றோரும் இல்லை. எனக்குத் தாருங்கள் என்று கேட்கிறது. மூன்றாவது குழந்தை, இந்தப் புல்லாங்குழலை நானே எனது உழைப்பில் உருவாக்கி தவற விட்டுவிட்டேன், எனக்குத்தான் தர வேண்டும் என்று கேட்கிறது. இந்த மூன்று குழந்தைகளும் தங்களுக்கான நீதியைப் பேசுகின்றன. மூன்றிலும் நியாயம் இருக்கிறது. ஆனால், இதை யாருக்கு வழங்குவது என்பதை எப்படி முடிவெடுப்பது?” என்ற கேள்வியோடு அமர்த்தியா சென் முடித்துக்கொள்கிறார். திராவிடர் இயக்கம் இதை எப்படித் தீர்மானிக்கும்?
மூன்று குழந்தைகளின் சமூகப் பின்னணியை ஆராயும், காலம் காலமாகப் புல்லாங்குழலை வாசிக்கத் தெரிந்த குழந்தையைவிட அதை வாசிக்கத் தடை போட்டிருந்த சமூகப் பின்னணியில் இருந்து எந்தக் குழந்தை வந்ததோ, அந்தக் குழந்தைக்கே முன்னுரிமை என்பதே திராவிடர் இயக்கத்தின் பார்வையாக இருக்கும்.
நீதி மறுக்கப்பட்ட சமூகங்கள். உலகம் முழுவதும் இருக்கின்றன. ஆனால், பிறப்பின் அடிப்படையில் சாதிய ஏற்றத்தாழ்வு கட்டமைப்போடு, நீதியை வழங்க மறுக்கப்பட்ட சமூகம் இது. இதை எதிர்த்துப் பிறந்ததுதான் திராவிடர் இயக்கம்’. நீதிக்கட்சி தனது ஆட்சிக்காலத்தில், வகுப்புவாரி பிரதிநிதித்துவம், பெண்களுக்கு வாக்குரிமை, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கல்வி என்று தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனால், இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ளும் வலிமை, பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு இருந்தால் மட்டுமே அதன் பயன்களை அவர்களால் எட்டிப் பிடிக்க முடியும்,என்று சமூகநீதிப் பார்வை அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்தது.

இந்த நகர்வுக்கு முதன்மையாக சாதித் தடைகள் தகர்க்கப்பட வேண்டும், பெண்களுக்கு அதிகாரமளிக்கப்பட வேண்டும். கல்வி கட்டமைப்பிலிருந்து பல நூற்றாண்டுக்காலம் பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களும் பெண்களும் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். எனவே, திராவிடர் இயக்கம் வர்ணாசிரம சமூகத்தை மாற்றி அமைக்க கல்விப் புரட்சியை ஆயுதம் ஆக்கியது. கல்விக்கான திட்டங்களை உருவாக்குவதோடு அது முடிவடைவதில்லை; கல்விக் கட்டமைப்புக்குள் புறக்கணிக்கப்பட்ட சாதிகளையும் பெண்களையும் அழைத்து வரவேண்டும். அதற்காகவே இடஒதுக்கீடு, கட்டணமில்லா கல்வி, உதவித்தொகை, கட்டணமில்லா பாடப்புத்தகம், சீருடை, கட்டணமில்லா பேருந்துப் பயணம், சத்துணவு. இப்போது காலைச் சிற்றுண்டி என்று அடர்த்தியான திட்டங்கள் வழியாக உரிமை மறுக்கப்பட்ட சமூகத்தை இன்று சுயமரியாதையுடன் கம்பீரமாக்கி இருக்கிறது, திராவிட மாடல் ஆட்சி.
வெறும் திட்டமல்ல, சமூக முதலீடு!
காலைச் சிற்றுண்டி திட்டத்தை ‘சமூக முதலீடு’ என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகச் சரியாக மதிப்பீடு செய்துள்ளார். நிதி முதலீடுகள் வழியாகத் தங்களை வளப்படுத்திக்கொள்ளும் பணம் படைத்தவர்களையும் தொழிலதிபர்களையும் பார்க்கிறோம். இதற்கு மாறானது சமூக முதலீடு, நிதி மூலதனம் இதற்குத் தேவையில்லை; பிறந்த ஜாதியே மூலதனம். தனக்குக் கீழ் பெரும்பான்னை சமூகத்தை ஜாதி குழுக்களாகப் பிரித்து, சுயமரியாதையைப் பறித்து, அதற்கான விதிகளையும் உருவாக்கி இயங்கவைக்கும் அதிகாரம் கொண்டது, சமூக முதலீடு,
நிதி முதலீட்டைவிட கூடுதல் அதிகாரம் படைத்தது சாதி அதிகாரம். ‘பிராமணியம்’ பிறப்பை சமூக முதலீடாக்கியது; தங்களுக்குள் வலிமையான உறவுகளைக் கட்டமைத்தது. ஏனைய சமூகத்தினரை அடக்கியாளும் உரிமைகளை அந்த மூலதனத்தின் வழியாகப் பறித்துக்கொண்டது. இதற்கு சமுகவியலில், “உறுதிப்பட்ட சமுக முதலீடு’ (Bonding Social Capital) என்று பெயர். இந்த சாதிய முதலீட்டாளர்களின் சமூகச் சுரண்டல்களைத் தகர்க்க வந்ததுதான் திராவிடர் இயக்கம். பாதிக்கப்பட்ட வெவ்வேறு ஜாதிகள் தனித் தனி குழுக்களாகப் பிரிந்து, சிதறுண்டு கிடந்தார்கள். சிதறுண்டவர்களை ஒருங்கிணைந்த சமூகமாக அணிதிரட்டும் முயற்சிகளில் திராவிடர் இயக்கம் களம் இறங்கியது. இந்தக் குழுக்கள் வலிமையற்றவை. இதற்கு சமூகவியல் (Bridging Social Capital) என்று பெயர் சூட்டியது. இவர்களை ‘திராவிடர்’ என்ற அடையாளத்திற்குள் அணி திரட்டியது.

மருத்துவக் கல்லூரி மேல் பட்டப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அகில இந்திய இடஒதுக்கீட்டை ஒன்றிய ஆட்சி மறுத்தபோது, தமிழ்நாடு முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அந்த உரிமையை மீட்டெடுத்து, அனைத்து மாநில பிற்படுத்தப்பட்டோருக்கும் வழங்கினார். இந்த வழக்கில் தீர்ப்பு எழுதிய உச்ச நீதிமன்றம், சமூக நீதி கோட்பாடுகளுக்கு அறிவியல் விளக்கங்களைத் தனது தீர்ப்பில் பதிவுசெய்திருக்கிறது. பிறவி ஆதிக்கத்திற்கு உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பில் சூட்டிய பெயர், ‘கலாச்சார மூலதனம்’ (Culture Capital).
கலாச்சார முதலீட்டுக்கு எதிரான சுயமரியாதை இயக்கம் பேசிய ‘சமூக நீதி’ என்ற சொல்லுக்குள் அரசியல் நீதி, பொருளாதார நீதி, பெண்களுக்கான நீதிகளும் அடங்கியுள்ளன. இடஒதுக்கீடு என்ற எல்லையோடு அதை சுருக்கிவிட முடியாது.
அரசியல் நீதிக்காக, மாநில உரிமைக்காகப் போராடுகிறது, திராவிட மாடல் ஆட்சி, ஆளுநர்களின் மாநில உரிமைப் பறிப்புகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று, அவர்களுடைய தலையீடுகளில் இருந்து சட்டமன்ற உரிமைகளை மீட்டெடுத்தது, திராவிட மாடல் ஆட்சி. இந்த உரிமை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது; இது அரசியல் நீதி,
மாநில உரிமைகளை ஆய்வுசெய்து அறிக்கை தருவதற்கு, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஒரு குழு அமைத்துள்ளது.
தமிழ்நாடு கட்டமைத்த சமூக நீதிக்கான கல்விக் கட்டமைப்பை சீர்குலைப்பதற்கு ஒன்றிய ஆட்சியின் தேசிய கல்விக்கொள்கையை திராவிட மாடல் ஆட்சி ஏற்க மறுத்தது. தமிழ்நாட்டுக்கான கல்விக் கொள்கையைத் தனியாக அறிவித்துள்ளது. மாநிலங்களைத் தவிர்த்துவிட்டு இந்தியாவின் இறையாண்மை இல்லை என்ற உரிமையைத் தொடர்ந்து அடையாளப்படுத்திவருகிற தமிழ்நாடு முதலமைச்சர், தேசிய முக்கியத்துவம் நிறைந்த பிரச்சினைகளில் மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டி கருத்தொற்றுமையை உருவாக்கிவருகிறார்.
திராவிட மாடலின் பெண்ணியப் பார்வை!
பெண்களுக்கான நீதி வழங்கும் திட்டங்களில் பெண்களின் அதிகாரமும் இணைந்து நிற்கிறது. பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு திருமணம் செய்து கொண்டால், ‘தாலிக்குத் தங்கம்’ என்ற ஒரு திட்டம் அமலில் இருந்தது. பத்தாம் வகுப்பு திருமணம் என்ற எல்லையோடு ஒரு பெண்ணின் வாழ்க்கை நிறைவடைந்துவிடக் கூடாது என்ற பார்வையோடு, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்திற்கு மாற்றாக, அவர்களை கல்லூரி சேர்க்கைக்கு அழைத்துச்சென்று ஊக்குவிக்கும் விதமாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். மிகச் சிறந்த பெண்ணிய நீதிப் பார்வை இது.

பெண்கள் உரிமைக்கான திட்டங்களில் ‘திராவிட மாடல்’ ஆட்சி அனைத்து பெண்களுக்கும் உரிமையை வழங்குகிறது. அனைத்து பெண்களும் சமூகத்தில் உரிமை மறுக்கப்பட்டவர்கள் என்பது திராவிட இயக்கத்தின் பார்வை. அதன் காரணமாகவே விடியல் பயணம் அனைத்து பெண்களுக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது.
அர்த்தமுள்ளதாகும் சமூக நீதி!
கல்வி, வேலை உரிமைகளில் திணிக்கப்பட்ட சாதியப் பாகுபாடுகளை சமன்செய்யும் திட்டமே இடஒதுக்கீடு. மாறாக, சாதிய இருத்தலை உறுதியாக்குவது அதன் நோக்கம் அல்ல!
சாதிகளுக்கு இடையான சமத்துவமின்மையை நேர்செய்ய என்ன செய்ய வேண்டும்? சமத்துவத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் (substantial Equality). இதுவும் உச்ச நீதிமன்றமே பயன்படுத்திய சொல்லாடல்தான். சமத்துவத்தை அர்த்தப்படுத்துவது, கல்வியை முடக்கிவிடாமல் அதற்கான திட்டங்கள் திட்டமிடப்படுகின்றன. அதன்படி தமிழ்நாடு கல்வித் துறை கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய இல்லம் தேடி கல்வி, வெளிநாடுகளுக்கு பயிலச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களின் முழுக் கல்விச்செலவு மற்றும் முதல் பயணச் செலவை அரசு ஏற்பது, உட்கட்டமைப்பு, கல்வித் தரம், மாணவர்களின் தேவைகளை அறிந்திட பள்ளி மேலாண்மை குழுக்கள், பள்ளி செல்லாப் பிள்ளைகளைக் கண்டறிய செயலி, சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு நிதி, 1 முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் இயக்கம், பயிற்சித் தாள்களுடன்கூடிய பயிற்சிப் புத்தகங்கள், கற்பிக்கும் திறன் மற்றும் அணுகுமுறைகளை மேம்படுத்த கணித ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி, உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறை உற்றுநோக்கு செயலி போன்றவை சமூக நீதியை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கான செயல்திட்டங்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்ற 136 மாணவ மாணவிகள் சிறப்புவாய்ந்த ஐஐடி, என்ஐடி, என்ஐஏடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதற்காகப் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தேர்வுகள் எழுதுவதற்கான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. தேர்வு மய்யம் வரை அவர்கள் அழைத்துச்செல்லப்படுகிறார்கள். கலந்தாய்வில் பங்கேற்பதற்கு அவர்கள் தயார் செய்யப்படுகின்றனர். உளவியல்ரீதியாக அவர்களுக்கு தன்னம்பிக்கை கவுன்சிலிங் வழங்கப்படுகிறது. பட்டியலின, பழங்குடி மாணவர்கள் வெளிநாடு சென்று உயர்கல்வி கற்பதற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், நடப்பு ஆண்டுக்கு 190 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இப்படிப் பல்வேறு துறைகளில் நிகழ்ந்த திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளால் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு ஒன்றிய அரசே பாராட்டுகளைத் தெரிவித்திருக்கிறது. இவ்வளவு சாதனைகளும் ஒன்றிய ஆட்சியின் மோசமான பொருளாதாரக் கொள்கை மற்றும் மாநிலங்களுக்கான நிதி மறுப்புக்கு மத்தியில் நிகழ்ந்தவை ஆகும்.

தடையாக நிற்கும் ஒன்றிய அரசு!
முதன் முதலில், தி.மு.க. ஆட்சிக்கு வந்த காலத்தில், சோசியலிச பொருளாதாரக் கொள்கை நிலவியது. 1990-க்குப் பிறகு இது தலைகீழாக மாற்றப்பட்டு, உலகமயமாக்கல் கொள்கை வந்தது. உலகம் முழுதும் இந்தக் கொள்கைதான் இப்போது நிலைபெற்றிருக்கிறது. தாராள பொருளாதாரம் என்று இது நீட்சி அடைந்து, அரசுத் துறைகளை வளர்த்தெடுக்காமல் தனியார் முதலீடுகளை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
கலைஞர் முதல்வராக வந்த காலத்தில், சோசலிசக் கொள்கைகளை அமல்படுத்தினார். பேருந்துகளை அரசுடைமையாக்கினார். நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டுவந்தார், பண்ணையார் பிடியிலிருந்து குத்தகை விவசாயிகளை விடுவிக்கும் சட்டத்தைக் கொண்டுவந்தார். கை ரிக்ஷா ஒழிப்பு, குடிசை மாற்று வாரியம், கண்ணொளி வழங்கும் திட்டம் என அடுக்கடுக்கான திட்டங்களை உருவாக்கி இந்தியாவுக்கே வழிகாட்டினார். கலைஞர். 1990-க்குப் பிறகு தனியார்மயமாக்கலின் கதவுகளை இந்தியப் பொருளாதாரம் திறந்துவிட்டது. இந்த மாற்றத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞரும் சரி, இப்போது ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சரி, இந்தக் கட்டமைப்பின் கீழ்தான் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சிக்கு கொள்கைகளை, திட்டங்களை வகுத்துச் செயல்படவேண்டியிருக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம் இப்போது கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஏற்றுமதியில் இந்தியா கடும் பின்னடைவைச் சந்திக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் வேகமாக முதலீடுகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்த ஆண்டு மட்டும், கடந்த மூன்று மாதங்களில் ரூ.2 இலட்சம் கோடிகளை அந்நிய நாடுகள் திரும்பப் பெற்றுவிட்டன. கடந்த ஆண்டைவிட, இது 1200 விழுக்காடு அதிகம். (தகவல்: ஆங்கில ‘தி இந்து’ நாளேடு செப்-4)
தொழில் முதலீடு செய்ய வரும் பல நாடுகள் வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளுக்கே முன்னுரிமை தருகிறார்கள். காரணம், தொழிலாளர்களுடைய ஊதியம் இங்கே மிகவும் குறைவு. ஆனாலும் இந்தியாவில் புதிய முதலீடுகள் செய்வதற்கான ஊதியம் குறைந்த உழைப்பாளர்கள் சந்தை இருந்தாலும், பல நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வருவதில்லை. சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை இதை தெளிவாக விளக்குகிறது. அந்த அறிக்கைக்கு, லூகாஸ் முரண்பாடு (Lucas Paradys) என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

மதவாத நாடாக இந்தியாவை மாற்றத் துடிக்கும் ஒன்றிய ஆட்சி, அதற்குத் தடையாக நிற்கும் ஜனநாயகத்தையும் ஜனநாயக நிறுவனங்களையும் சீர்குலைப்பதையே முதன்மையாக இலக்காகக் கொண்டு செயல்படுவது ஒரு காரணம். சீனாவுக்கு இணையாக இந்தியா வளர்ந்துவருகிறது என்ற கூற்றுகளையும் இந்த அறிக்கை மறுக்கிறது.
ஒன்றிய ஆட்சியின் இந்தப் பொருளாதார பின்னடைவுகள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் சேர்ந்து பாதிக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது மட்டுமன்றி தமிழ்நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய நிதிப் பங்கீடுகளையும் நிதி உரிமைகளையும் ஒன்றிய அரசு திட்டமிட்டு வழங்க மறுக்கிறது என்பது மற்றொரு தடை.
வழிகாட்டுகிறது தமிழ்நாடு!
இந்தியாவில் இருந்து வெளியேறும் இந்த முதலீடுகளின் வாய்ப்புகளை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நாடு, வியட்நாம். அதற்கு மேற்குறிப்பிட்ட ஆய்வறிக்கை கூறும் காரணங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
வியட்நாம் நாட்டில் பெண்களுடைய கல்விக்கும் பெண்களுடைய சுகாதாரத்திற்கும் முன்னுரிமை தரப்படுவதோடு, உழைப்புத் துறையிலும் பெண்கள் மிக அதிக அளவில் பங்கேற்கச் செய்கிறார்கள்.
‘பெரும் அளவிலான கல்வி, சுகாதார பாதுகாப்பு மற்றும் வேலை பங்கேற்பு ஒன்றோடோன்று இணைந்து, மனித மூலதன வளர்ச்சிக்கான வட்டத்தை உருவாக்குகிறது’ என்கிறார், பிரவுன் பல்கலைக்கழக பொருளாதார நிபுணர் ஓடட் கலோர். (பிரன்ட்லைன் ஆக31-2025)
திராவிட மாடல் ஆட்சியில் தற்போது மேற்கொள்ளப்படும், பெண்களுக்கான உரிமைத் திட்டங்கள், எதிர்காலத்தில் நாட்டின் சமூகப் பொருளாதார முதலீடாக மாறும் என்பதற்கு வியட்நாம் ஒரு மிகச்சிறந்த உதாரணம். சமகால தாராளமயமாதல் என்ற முதலாளித்துவ பொருளாதார கொள்கைகளுக்கு இடையே ஒரு ஆட்சி மக்கள் நலத்திட்டங்களை எப்படி நிறைவேற்றலாம் என்பதற்கு, திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய ஆளுமைத்திறன் தமிழ்நாட்டை திரும்பிப்பார்க்கச் செய்கிறது.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி சாதனை நாயகர் கலைஞர்!


