அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சி
இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள இரட்டை ஆட்சி அமைப்பு அமெரிக்க இரட்டை ஆட்சி அமைப்புக்கு வேறு ஒரு வகையிலும் மாறுபட்டுள்ளது. அமெரிக்காவில் கூட்டரசு மற்றும் மாகாண அரசியல் சாசனங்களுக்கிடையேயான தொடர்பு நெருக்கமானதல்ல. கூட்டரசு மற்றும் மாகாண அரசுகளுக்கிடையேயான தொடர்புகளை திரு.பிரைஸ் பின்வருமாறு விளக்குகிறார்:
“மத்திய அல்லது தேசிய அரசையும் மாகாண அரசுகளையும் ஒரே தரையில் கட்டப்பட்டுள்ள சிறிய கட்டடத்தோடும் ஒரு பெரிய கட்டடத்தோடும் ஒப்பிடலாம். அவை ஒரே தரையில் கட்டப்பட்டிருந்தாலும் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவைதான்”

அவை வேறுபாடானவைதான். ஆனால் மாகாண அரசுகள் கூட்டரசிலிருந்து எவ்வளவு தூரம் வேறுபட்டிருக்கின்றன? பின்வரும் விஷயங்கள் இந்த வேறுபாடுகளை விளக்கும்:
- குடியரசு ஆட்சி முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு ஒவ்வொரு மாகாணமும் தனது அரசியல் சாசனத்தை உருவாக்கிக் கொள்ளலாம்.
- தேசிய அரசின் தலையீடின்றி ஒவ்வொரு மாகாணத்தவர்களும் தங்கள் அரசியல் சாசனத்தைத் திருத்தும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
மேலும் பிரைஸின் சொற்களில் கூறுவதென்றால்:
“ஒவ்வொரு மாகாணமும் (அமெரிக்காவில்) தனக்கென்று அரசியல் சாசனத்தைக் கொண்டுள்ளதால் பரஸ்பர நன்மையால் பிணைக்கப்பட்ட சுதந்திர மாகாணமாக அது திகழ்கிறது. மாகாணத்தின் எல்லா சட்டமன்ற, நிர்வாக, நீதிமன்ற அதிகாரங்களும் அதன் அரசியல் சாசனத்தால் உருவானவை, அதற்குக் கட்டுப்பட்டவை”.
உத்தேச இந்திய அரசியல் சாசனம் அதை ஏற்றுக்கொள்ள வில்லை. எந்த மாநிலமும் (எப்படி இருப்பினும் 1 பிரிவில் உள்ளவை) தங்களுக்கென்று ஓர் அரசியல் சாசனததை உருவாக்க முடியாது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஒரே அரசியல் சாசனத்தின் கீழ்தான் செயல்பட வேண்டும், அதற்கு வெளியேயிருந்து செயல்பட முடியாது.
அமெரிக்கக் கூட்டரசுக்கும் உருவாக்கப்படவுள்ள இந்தியக் கூட்டரசுக்கும் இடையேயான வேறுபாடுகளை இதுகாறும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். கொண்டு வரப்படவுள்ள இந்திய கூட்டரசில் மேலும் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. அமெரிக்கக் கூட்டரசு மட்டுமின்றி மற்ற எல்லா கூட்டரசிலிருந்தும் இது எவ்வாறு மாறுபட்டதென்பதை அவை குறிக்கின்றன. அமெரிக்கக் கூட்டரசு அமைப்பு உட்பட எல்லாக் கூட்டரசு அமைப்பு முறைகளும் ஒரு இறுக்கமானக் கூட்டமைப்பு என்ற சட்டகத்துக்குள் அடைக்கப்பட்டுள்ளன. எந்தச் சூழ்நிலையிலும் அதன் வடிவத்தையோ, உருவத்தையோ மாற்ற முடியாது. அது ஒருபோதும் ஒற்றையரசு முறையாக செயல்பட முடியாது. ஆனால் அதே நேரத்தில் சூழ்நிலைகளைப் பொருத்து, வரைவு அரசியல் சாசனம் ஒற்றையரசு அல்லது கூட்டாட்சியின் அரசியல் சட்டமாகச் செயல்படமுடியும். சாதாரண காலங்களில் அது ஒரு கூட்டாட்சி முறையில் செயல்பட வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் போர்க்காலங்களில் அது ஒரு ஒற்றையரசின் அரசியல் சாசனமாகச் செயல்பட வகை செய்யப்பட்டுள்ளது. உறுப்பு 275 இல் செய்யப் பட்டுள்ள ஏற்பாட்டின்படி குடியரசுத் தலைவர் அதிகாரபூர்வ பிரகடனத்தை வெளியிட்டவுடன் காட்சி முற்றிலும் மாறிவிடுவதுடன் நாடு ஒற்றையரசு முறைக்கு மாறிவிடுகிறது.பிரகடனத்தின்படி ஒன்றிய அரசு விரும்பினால் பின்வரும் உரிமைகளை எடுத்துக்கொள்ள முடியும் (1) மாநிலப் பட்டியலிலுள்ள பொருள் எதிலும் சட்டமியற்றும் அதிகாரம் (2) மாநில அரசுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளில் நிர்வாகம் சம்பந்தமாக எப்படிச் செயல்படவேண்டும் என்று உத்திரவிடும் அதிகாரம் (3) எந்தவொரு ஒரு அதிகாரிக்காவது, எந்த ஒரு காரணத்துக்காவது சட்ட உரிமை அளிக்கும் அதிகாரம். (4) அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள நிதி சம்பந்தமான ஏற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் அதிகாரம். இந்த மாதிரி ஒற்றை அரசாக மாறும் அதிகாரத்தை வேறு எந்தக் கூட்டாட்சியும் பெற்றிருக்கவில்லை. இவை, நமக்குத் தெரிந்த கூட்டாட்சி அமைப்புகளுக்கும் வரைவு அரசியல் சாசனத்தில் முன் மொழியப்பட்டுள்ள கூட்டாட்சி அமைப்புக்கும் இடையேயுள்ள வேறுபாடு ஆகும்.
இந்தியக் கூட்டாட்சி அமைப்புக்கும் மற்ற கூட்டாட்சி அமைப்புகளுக்குமிடையேயான வேறுபாடுகள் இவை மட்டுமல்ல. கூட்டாட்சி முறை திறமையாக இயங்கும் அரசல்ல என்று கூறப்படாவிட்டாலும் அது ஒரு பலவீனமான அரசு என்று கருதப்படுகிறது. அது இரண்டு பலவீனங்களைக் கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. கூட்டரசு அமைப்புமுறையில் இது உள்ளார்ந்த ஒன்றாக உள்ளது என்பதில் எந்த விதக் கருத்து வேற்றுமையும் இருக்க முடியாது. ஒரு கூட்டாட்சி அமைப்பு முறையின் அரசியல் சட்டம் எழுத்து வடிவத்தில்தான் இருக்கமுடியும். எழுத்து வடிவத்தில் இருக்கும் அரசியல் சாசனம் வளைந்து கொடுக்காத அரசியல் சாசனமாகத்தான் இருக்க முடியும். கூட்டாட்சி அமைப்பு முறை என்பது அரசியல் சாசன சட்டத்தின்படி, கூட்டரசுக்கும் மாகாண அரசுகளுக்கும் இடையே இறையாண்மையை பிரிப்பதுதான். இதன் விளைவுகள் இரண்டு. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறையில் கூட்டாட்சி தலையிடுவது, அதேபோன்று கூட்டரசுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் மாநில அரசாங்கங்கள் தலையிடுவது. அரசியல் சாசானத்தை மீறுவதாகும். இந்த அரசியல் சாசன மீறல் நீதித்துறையால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டிய, நீதிமன்ற விசாரணைக்குட்பட்ட விஷயமாகும் கூட்டாட்சிக் கோட்பாட்டின் தன்மை இவ்வாறுள்ளதால் கூட்டாட்சி அரசியல் சாசனம், சட்டத்தை அதிகமாக சார்த்துள்ளது என்ற குற்றச்சாட்டியிருத்து தப்ப முடியாது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சாசனத்தில் இந்தக் குறைபாடுகளைத் தெளிவாகக் காண முடிகிறது.

பிந்தைய கட்டத்தில் கூட்டாட்சி முறையைப் பின்பற்றிய நாடுகள், அளவுக்கு அதிகமாக சட்டத்தைச் சார்ந்திருக்கும் தன்மையையும் மற்றும் அதன் இறுக்கமான தன்மையையும் குறைப்பதற்கு முன்றுள்ளன. இதுசம்பந்தமாக ஆள்திரேலியாவின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதற்காக ஆஸ்திரேலிய அரசியல் சாசனம் பின்வரும் வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது:
- கூட்டாட்சி மற்றும் மாநில அரசாங்கங்களுக்குப் பொதுவான துறைகளில் கூட்டாட்சியின் நாடாளுமன்றத்துக்கு சட்டம் இயற்ற அதிக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் தனிப்பட்டமுறையில் சட்டமியற்றும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
- அரசியல் சாசனத்தில் தாற்காலிகமாக இடம்பெற்றிருக்கும் சில விதிகளை “நாடாளுமன்றம் வேறுவிதமாக தீர்மானிக்கும் வரையில், அவை செல்லுபடியாவதற்கு” வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அரசியல் சாசனத்தின்படி ஆஸ்திரேலிய நாடாளுமன்றம் பல நடவடிக்கைகளை எடுக்கமுடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அமெரிக்கக் காங்கிரசுக்கு இந்தத் தகுதி அளிக்கப்படவில்லை. இப்படிச் செயல்பட வேண்டுமென்றால், அமெரிக்க அரசாங்கம் உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துவதற்கு கோட்பாட்டைத் தயாரிப்பதில் அதற்குள்ள திறமையையும் கூர் மதியையும் பொறுத்துள்ளது இது.
- சட்டத்தை அதிக அளவில் சார்ந்திருக்கும் தன்மையையும் மற்றும் நெளிவு சுளிவற்ற தன்மையையும் குறைப்பதற்கு, ஆஸ்திரேலிய திட்டத்தை ஆஸ்திரேலியாவை விட அதிக அளவில் வரைவு அரசியல் சட்டம் பின்பற்றியுள்ளது. சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்ற பொதுவான பட்டியல், ஆஸ்திரேலிய அரசியல் சட்டத்தில் உள்ளதைப் போன்று நீண்டதாகவுள்ளது. ஆஸ்திரேலிய அரசியல் சட்டத்தின்படி கூட்டரசுக்கும், மாநிலஅரசாங்களுக்கும் பொதுவான விஷயங்கள் 39 ஆக உள்ளன. வரைவு அரசியல் சாசனப்படி இது 37 ஆக உள்ளன. ஆஸ்திரேலிய அரசியல் சாசனத்தைப் பின்பற்றி வரைவு அரசியல் சாசனத்தில் தற்காலிகமாக செயல்படும் விதிகள் ஆறு உள்ளன. அந்த ஏற்பாடுகளை எந்த நிமிடத்திலும் தேவைக்கு ஏற்ற வகையங்களாக நாடாளுமன்றத்தால் மாற்ற முடியும் தனிப்பட்ட சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அரசியல் சாசனத்தை விட வரைவு அரசியல் சாசனம் பெரும் முன்னேற்றம் பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். ஆஸ்திரேலிய அரசியல் சாசனத்தில் நாடாளுமன்றத்துக்குச் சட்டம் இயற்றும் தனிப்பட்ட அதிகாரம் 3 விஷயங்களுக்கு மட்டுமே விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்திய நாடாளுமன்றத்துக்கு இந்த தனிப்பட்ட அதிகாரம் வரைவு அரசியல் சாசனத்தின்படி 91 விஷயங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் வரைவு அரசியல் சாசனம் கூட்டாட்சி முறையில் அதிக அளவில் நெளிவு சுளிவுகளைக் கொண்டுள்ளது. அதன் இயற்கையான இறுக்கம் குறைந்துள்ளது.
வரைவு அரசியல் சாசனம் ஆஸ்திரேலியா அரசியல் சாசனத்தைப் பின்பற்றுகிறது அல்லது அதிக அளவில் பின்பற்றுகிறது என்று கூறினால் மட்டும் போதாது. கூட்டாட்சி முறையில் இயற்கையாக உள்ள இறுக்கத்தையும், சட்டத்தை அதிக அளவில் சார்ந்திருக்கும் தன்மையையும் குறைக்க அதில் புதிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. இது சிறப்பானது என்பதுடன் வேறு எங்கும் காணப்படாததாகும்.
முதலாவது, சாதாரண காலங்களில் மாநிலங்களுக்கு மட்டுமே என்று ஒதுக்கப்பட்ட துறைகளில் நாடாளுமன்றம் சட்டம் இயற்றுவதற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம். 226,227 மற்றும் 229 ஆவது உறுப்புகளைத்தான் நான் குறிப்பிடுகிறேன். 226 ஆவது விதியின் படி, மாநிலப் பட்டியலில் உள்ள ஒரு விஷயம் மாநிலத்திற்கு அக்கறை உள்ள விஷயம் என்பதிலிருந்து அது தேசிய முக்கியத்துவம் பெறும்போது, நாடாளுமன்றம் அது குறித்துச் சட்டம் இயற்றலாம். ஆனால் இதற்கு, இந்த அதிகாரத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று மேல் அவையில் 2/3 பங்கு பெரும்பான்மையுடன் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். தேசிய நெருக்கடி நிலையின்போது இம்மாதிரி அதிகாரம் உறுப்பு 227 ஆய் நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்படுகிறது. 229 ஆவது உறுப்பின்படி மாநிலங்கள் ஏற்றுக்கொண்டால், இதே அதிகாரத்தை நாடாளுமன்றம் செயல்படுத்த முடியும். கடைசியாக குறிப்பிட்டுள்ள ஏற்பாடு ஆஸ்திரேலிய அரசியல் சாசனத்தில் காணப்பட்டாலும் முதல் இரண்டு வழிவகைகளும் நமது வரைவு அரசியல்சாசனத்திற்கே உரிய சிறப்பம்சங்களாகும்.
அரசியல் சாசனத்தில் மாறுதல் செய்வத்துகான வழிவகைகள் அதன் இறுக்கத்தையும், சட்டத்தைப் பெருமளவு சார்ந்திருக்கும் தன்மையையும் தவிர்க்க இரண்டாவது வழிமுறையாக ஏற்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசியல் சாசன உறுப்புகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கின்றன (அ) மாநில மற்றும் மத்திய அரசுகளின் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் பங்கீடு,(ஆ) நாடாளுமன்றத்தின் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் (இ) நீதிமன்றங்களின் அதிகாரம் ஆகியவை சம்பந்தமான உறுப்புகள் ஒரு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற எல்லா விதிகளும் மற்றொரு பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இரண்டாவது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள உறுப்புகள் அரசியல் சாசனத்தில் பெரும்பகுதி சம்பந்தப்பட்டவை. இரு பங்குப் பெரும்பான்மை மூலம் அதாவது அவைக்கு வருகை தந்துள்ள உறுப்பினர்களில் வாக்களிப்பில் 2/3 பங்கு பெரும்பான்மை மற்றும் ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களின் பெரும்பான்மை மூலம் இந்த உறுப்புகளுக்குத் திருத்தம் கொண்டுவர முடியும். இந்த உறுப்புகளுக்கான திருத்தங்கள் மாநிலங்களால் ஏற்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. முதல் பிரிவி குறிப்பிட்ட உறுப்புகளுக்கு மட்டுமே மாநிலங்கள் அந்த திருத்தங்களை ஏற்று உறுதி செய்ய வேண்டுமென்ற கூடுதல் பாதுகாப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டத்தை பெருமளவு சார்ந்திருக்கும் தன்மை, மற்றும் மாற்ற இயலாதத் தன்மை போன்ற குறைபாடுகளால் இந்திய கூட்டாட்சி பாதிக்கப்படாது என்று நிச்சயமாகக் கூறலாம். அதன் குறிப்பிடத்தக்க அம்சமே அது ஒரு வளைந்துக் கொடுக்கக்கூடிய அரசியல் சாசனம் என்பதுதான்.
மற்ற கூட்டாட்சிகளிலிருந்து இந்தியக் கூட்டாய பிரித்துக் காட்டக்கூடிய வேறு ஒரு சிறப்பம்சமும் உள்ளது. பிரிக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையிலான இரட்டை அரசியலமைப்பு கூட்டாட்சியில், ஒவ்வொரு அரசும் தனிப்பட்ட சட்ட, ஆட்சி, நீதித்துறை அதிகாரங்களை கொண்டுள்ளதால், ஆட்சித்துறை மற்றும் நீதித்துறையில் மாறுபட்ட சட்டங்கள் உருவாகக்கூடும். ஒரு கட்டம் வரையில் இதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. வட்டாரத் தேவைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்ப அரசாங்க அதிகாரத்தைப் பயன்படுத்தும் முயற்சி என்று இதை வரவேற்கக் கூடும். ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும்போது இந்த வேறுபாடுகள் குழப்பத்தை உண்டாக்கக்கூடும். பல கூட்டாட்சி நாடுகளில் இவ்விதக் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. ஒன்றியத்தில் இருபது மாகாணங்கள் இணைந்திருந்தால் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, குடும்ப உறவுகள், ஒப்பந்தங்கள், குற்றம், குற்றவியல், எடைகளும் அளவுகளும், காசோலைகள், வங்கி மற்றும் வர்த்தகம், நியாயம் பெறும் வழிமுறைகள், நிர்வாக நடைமுறைகள் ஆகிய பல்வேறு துறைகளில் இருபது விதச் சட்டங்களைச் சந்திக்கவேண்டியிருக்கும். இந்த நிலை மாநிலத்தைப் பலவீனப்படுத்துவதுடன் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு செல்பவர்கள், ஒரு மாநிலத்தில் சட்டப்படியாக உள்ள விஷயங்கள் மற்ற மாநிலங்களில் சட்டவிரோதமாக இருப்பதைக் கண்டு மனம் உடைந்து போவார்கள். நாட்டின் ஒற்றுமையை சீராக வைத்துக் கொள்ள தேவைப்படும் எல்லா அடிப்படை விஷயங்களிலும் ஒரே சீரான தன்மையை உருவாக்கவும் அதே நேரத்தில் இந்தியா ஒரு கூட்டரசாக விளங்கவும், வழிமுறைகள் மற்றும் நடைமுறைகளை வரைவு அரசியல் சட்டம் ஏற்படுத்தியுள்ளது. வரைவு அரசியல் சாசனம் மேற்கொண்டுள்ள வழிமுறைகள் மூன்று. அவை வருமாறு:
(1) ஒரே நீதித்துறை
(2) ஒரே மாதிரியான அடிப்படைச் சட்டங்கள், குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டங்கள்
(3) முக்கியமான ஆட்சிப் பதவி இடங்களை நிருவகிக்க ஒரு அகில இந்திய ஆட்சிப் பணித்துறை.
ஒரு கூட்டாட்சியில் இயற்கையாகவே உள்ள இரட்டை ஆட்சி அமைப்பு முறையின் தர்க்கரீதியின் விளைவுகளே, இரட்டை நிதித்துறை, இரட்டைத்தொகுப்புச் சட்டங்கள், இரட்டை ஆட்சித் துறை ஆகியவைகள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கூட்டரசின் நிதித்துறையும் மாகாணங்களின் நீதித்துறையும் தனித்தனியாகவே இயங்குகின்றன. இந்தியா ஓர் இரட்டை ஆட்சி அமைப்புடன் இருந்தாலும், இரட்டை நீதித்துறை கிடையாது. உயர்நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களும் ஒன்றிணைந்த நீதித்துறையாக இயங்கும். அரசியல் சாசனச் சட்டம், உரிமையியல் சட்டம் அல்லது குற்றவியல் சட்டம் ஆகியவைகளின் அடிப்படையில் எழும் எல்லா வழக்குகளையும் விசாரணை செய்து தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை அவை பெற்றிருக்கும். எல்லாவித பரிகார நடவடிக்கைகளிலும் வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதற்காகவே இந்த ஏற்பாடுகள். இதைப் போன்ற நிலை ஓரளவு கனடா நாட்டில் உள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் நிலை கிட்டத்தட்ட இதே போன்றதுதான்.
நகர மற்றும் சமூக வாழ்வின் அடிப்படையான சட்டங்களின் ஒருமுகத் தன்மையை உறுதிப்படுத்தக் கவனம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மிக முக்கியமான சட்டத் தொகுப்புகளான குற்ற விசாரணை முறையியல் சட்டம், உரிமையியல் சட்டம், சாட்சிச் சட்டம், சொத்து மாற்றுச் சட்டம், திருமணச் சட்டம், விவாகரத்துச் சட்டம், வாரிசுரிமைச் சட்டம் முதலியவை பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏனெனில் கூட்டரசு முறைக்குப் பாதகமின்றி இதன் மூலம் அந்தச் சட்டங்களை ஒரே சீரான முறையில் செயல்படுத்த முடியும்.
கூட்டாட்சி முறையில் இயல்பாக உள்ள இரட்டை ஆட்சி முறையைத் தொடர்ந்து கூட்டரசுகளின் இரட்டை நிருவாகத்துறைகளும் செயல்படுகின்றன. எல்லாக் கூட்டரசு நாடுகளிலும் கூட்டரசின் நிர்வாகத்துறையும் மாகாணத்தின் நிர்வாகத்துதையும் தனித் தனியாகச் செயல்படுகின்றன. இந்தியக் கூட்டரசு இரட்டை ஆட்சியமைப்பைக் கொண்டிருந்தாலும், ஒரு விதிவிலக்குடன் இரட்டை நிருவாகத்துறைகள் செயல்படும் நிர்வாகத் தரத்தைச் சீராக வைத்துக் கொள்ளும் நோக்குடன், சில பதவி இடங்கள் கேத்திரமானவை என்று கருதப்படுகின்றன. மிகவும் பரந்து விரிந்து கிடக்கும் நிருவாக எந்திரத்தில் இந்தப் பதவிகளைச் சுட்டிக் காட்டுவது அவ்வளவு எளிதல்ல. இந்தக் கேந்திரமான பதவி இடங்களுக்கு நியமிக்கப்படும் அரசு அதிகாரிகளின் திறமையைப் பொருத்தே நிர்வாகத்தின் தரம் இருக்கும் என்பதில் ஐயப்பாடு இருக்கமுடியாது. நல்ல காலமாக நாடு முழுவதுக்கும் பொதுவான ஒரு நிரவாக எந்திரத்தை கடந்த காலத்திலிருந்து நாம் பெற்றுள்ளோம். எனவே எந்தப் பதவி இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். மாநிலங்கள் தங்கள் நிர்வாகப் பணிகளுக்கான வழிவகைகளை உருவாக்க தடை எதுவுமின்றி அகில இந்திய அடிப்படையில் பொதுவான தகுதிகளுடனும், ஒரே மாதிரியான ஊதியத்துடனும் கூடிய, அகில இந்திய நிர்வாக அதிகாரிகள் மட்டுமே இந்தியா முழுவதிலுமுள்ள இந்தக் கேந்திரமான பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.
இதுதான் நாம் கொண்டு வரவுள்ள கூட்டாட்சியின் சிறப்பு அம்சங்களாகும். விமர்சகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.
இந்த வரைவு அரசியல் சாசனத்தில் எந்தப் புதுமையும் இல்லை என்றும் 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்திலிருந்து பாதிக்குமேல் எடுத்தாளப்பட்டுள்ளதாகவும் மற்ற பகுதிகள் பல்வேறு நாட்டு அரசியல் சாசனங்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுயமானவை எனச் சொல்லக்கூடியவை மிகவும் குறைவு எனச் சொல்லப்படுகிறது.
உலக வரலாற்றில் இந்தக் காலகட்டத்தில் தயாரிக்கப்படும் எந்த அரசியல் சாசனத்திலாவது புதிதாக ஏதாவது இருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பத்தான் வேண்டும். எழுத்து வடிவிலான முதல் அரசியல் சாசனம் தயாரிக்கப்பட்டு நூறாண்டுகளுக்கு மேற்பட்ட காலம் உருண்டோடி விட்டது. அதைத் தொடர்ந்து பல நாடுகள் தங்கள் அரசியல் சாசனத்தை எழுத்து வடிவில் மாற்றிக் கொண்டுள்ளன. ஓர் அரசியல் சாசனத்தின் நோக்கமும், வீச்சும் என்ன என்பது வெகு காலத்துக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதேபோன்று ஓர் அரசியல் சாசனத்தின் அடிப்படைகள் யாவை என்பதையும் உலக நாடுகள் ஏற்றுக் கொண்டு விட்டுள்ளன. இவ்விதக் காரணங்களால் எல்லா அரசியல் சாசனங்களின் முக்கியப் பகுதிகளும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க முடியும். இவ்வளவு காலம் கடந்து உருவாக்கப்படும் புதிய அரசியல் சாசனம் ஒன்றில் ஏதாவது புதிதாக இருக்குமென்றால், அரசியல் சாசனங்களில் பொதுவாகக் காணப்படும் குறைகளை நீக்குவதற்கான மாற்று வழிகளும், அந்தக் குறிப்பிட்ட நாட்டின் தேவைகளைத் திருப்தி செய்யும் வழிமுறைகளும்தான் என்று கூற வேண்டும். இந்த அரசியல் சாசனத்தைச் சரியாகப் படித்துப் புரிந்து கொள்ளாதவர்களே இது வெளிநாட்டு அரசியல் சாசனங்களின் அப்பட்டமான நகல் என்று குறை கூறுகிறார்கள் என்று நிச்சயமாகக் கூறுவேன். இந்த வரைவு அரசியல் சாசனத்தில் உள்ள புதிய அம்சங்களை எடுத்து விளக்கியுள்ளேன். மற்ற அரசியல் சாசனங்களைப் படித்த, விருப்பு வெறுப்பின்றி இந்த விஷயத்தைப் பரிசீலிக்கத் தயாராக உள்ளவர்கள், வேறு அரசியல் சாசனங்களிலிருந்து கண்மூடித்தனமாக எடுத்த பல பகுதிகளைக் கொண்டு இந்த அரசியல் சாசனம் தயாரிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொள்வார்கள்.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் பெரும்பாலான விதிகள் வரைவுச் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுக்கு நான் மன்னிப்புக் கோரப்போவதில்லை. வேறு ஒன்றிலிருந்து எடுத்துக் கையாளுவதில் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. அது திருட்டுத்தனமான கையாடல் அல்ல. ஓர் அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் யாருடைய தனி உரிமையாகவும் இருக்க முடியாது. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட விதிகள் பெரும்பாலும் ஆட்சி முறை சம்பந்தமான விவரங்கள் என்பதை வருத்தத்துடன் கூறிக் கொள்கிறேன். ஆட்சி முறை சம்பந்தமான விவரங்களை அரசியல்சாசனத்தில் சேர்ப்பதை வரைவுக் குழு தவிர்த்திருக்க வேண்டுமென்றே விரும்புகிறேன். அவை சேர்க்கப்பட்டதன் நியாயத்தை எடுத்துக்காட்ட இதைக் கூறத்தான் வேண்டும். கிரேக்க வரலாற்று ஆசிரியர் குரோட் இவ்வாறு கூறுகிறார்:
“விடுதலை பெற்று அமைதியான சூழ்நிலைக்குத் திரும்பிய பிறகு ஓர் அரசாங்கம் எடுக்க வேண்டிய அவசியமான நட வடிக்கை இதுதான். அரசியல் சாசனப் பண்பாட்டை பெரும்பான்மை சமுதாயத்தினரிடம் மட்டுமன்றி சமுதாயம் முழுவதற்குமே ஊட்டுவது அவசியம். ஏனெனில் வலிமை பெற்ற கண்மூடித்தனமாகச் செயல்படும் ஒரு சிறுபான்மைக் குழு தனக்கு வெற்றிபெறும் சக்தி இல்லாததால், சுதந்திர அமைப்புகள் செயல்படுவதை சாத்தியமற்றதாக ஆக்கிவிடும்”
அரசியல் சாசனப் பண்பாடு என்பதை திருகுரோட் இவ்வாறு விளக்குகிறார்: ‘அரசியல் சாசனத்தின் பல்வேறு நடைமுறைகளின் பிரகாரமும், அதற்குட்பட்டும் உள்ள அதிகாரத்துக்குக் கீழ்ப்படிய வைக்கும் அரசியல் சாசன நடைமுறைகள் மீதான அசைக்க முடியாத மதிப்பும் மரியாதையுமாகும்; அத்துடன் திட்டவட்டமான சட்ட திட்டங்களுக்குட்பட்டு மனந்திறந்து கருத்துக்களை வெளியிடும் பழக்கமும், அதிகார வர்க்கத்தின் எல்லாப் பொதுநல நடவடிக்கைகளைக் குறித்த தங்குதடையற்ற விமர்சனமும், அத்துடன் கட்சி பாகுபாடுகளினால் மனம் கசந்திருக்கும் ஒவ்வொரு குடிமகனிடமும் அரசியல் சாசனத்தின் மீதான நம்பிக்கையும், மரியாதையும் தான் கொண்டுள்ளதை விடக் குறைந்திருக்காது என்ற முழு நம்பிக்கையும் தான் அரசியல் சாசனப் பயன்பாடு ஆகும்.”
ஒரு ஜனநாயக அரசியல் சாசனம் அமைதியான முறையில் செயல்பட அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்பதன் அவசியத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டாலும், அதனுடன் பின்னிப் பிணைந்துள்ள இரு விஷயங்களைப் பொதுவாக ஏற்க மறுக்கிறார்கள். ஆட்சி நிர்வாக அமைப்புமுறை, அரசியல் அமைப்பு முறைக்கு மிக நெருங்கிய தொடர்புடையது. அரசியல் சாசன முறையை மாற்றாது, ஆட்சி நிர்வாக அமைப்பு முறையை மாற்றுவதன் மூலம் அரசியல் சாசனத்தின் அடிப்படைக்கு எதிரான, முரண்பாடான நிலையை உருவாக்கி அரசியல் சாசனத்தை செயலிழக்கச் செய்ய முடியும் என்று அரசியல் சாசனப் பண்பாடு போதுமான அளவுக்கு அதிகமாக இருப்பதை மக்கள் உணரும்போது, நிர்வாக அமைப்பு விவரங்களை அரசியல் சாசனத்திலிருந்து நீக்கி விட்டு சட்டமன்றத்தின் தீர்மானத்துக்கு விட்டுவிட முடியும். ஆனால் அரசியல் சாசன பண்பாடு என்பது இயற்கையாக உள்ள ஒரு மனப்பாங்கல்ல. அதுவளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நமது மக்கள் அதை இனிதான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும். முக்கியமாக ஜனநாயகமற்ற இந்திய மண்ணில் ஜனநாயகம் ஒரு மேற்பூச்சாகவே உள்ளது.
இந்தச் சூழ்நிலைகளில் எவ்வகை நிர்வாக அமைப்புகளை உருவாக்குவது என்பதை சட்டமன்றத்தின் தீர்மானத்துக்கு விட்டு விடுவது புத்திசாலித்தனமாக இருக்காது. அவை அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டுள்ளதற்கான நியாயம் இதுதான்.
பண்டைய இந்திய அரசின் நடைமுறைகளை வரைவு அரசியல் சாசனத்தின் எந்தப் பகுதியும் பிரதிபலிக்கவில்லை என்று மற்றொரு குற்றச்சாட்டும் உள்ளது. பண்டைய இந்து தேசத்தில் வழக்கத்திலிருந்த அரசியல் நடைமுறைகள் போன்று புதிய அரசியல் சாசனம் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், மேலைநாட்டுக் கோட்பாடுகளை எடுத்தாள்வதற்குப் பதிலாக கிராமப் பஞ்சாயத்து மற்றும் வட்டாரப் பஞ்சாயத்துகளின் அடிப்படையில் புதிய அர சியல் சாசனம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது. வேறு சிலர் மிகத் தீவிரமானக் கருத்துக்களை கொண்டுள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் எதையும் அவர்கள் விரும்பவில்லை. இந்தியா பல கிராமக் குடியரசுகளைக் கொண்டிருந்தால் போதும் என்பது அவர்கள் கருத்து. இந்தியக் கிராமச் சமுதாயத்தின் மீது இந்திய அறிவு ஜீவிகளுக்குள்ள பற்றுதல் பரிதாபத்துக்குரியதாக இல்லாவிடினும், நிச்சயமாக அளவிடற் கரியதுதான்!
வெளிஉறவுகள் ஏதுமன்றி, அனேகமாக தனித்து நின்று தங்களுக்குத் தேவைப்பட்டதைத் தாங்களே தயாரித்துக் கொண்டு, சிறுசிறு குடியரசுகளாக அவை விளங்கின என்று திரு.மெட்காபின் Metcalfc பெரும் புகழாரமே இதற்குக் காரணம் எனலாம். தனித்தனிச் சிறு குடியரசுகளாகத் திகழ்ந்த இந்தக் கிராமச் சமுதாயங்களே, மெட்காபின் கருத்துப்படி, அவை எதிர்கொண்ட புரட்சிகள் மற்றும் மாற்றங்களுக்கிடையே அவற்றைச் சிதைவுண்டு அழித்து போகாமல் காப்பாற்றியது எனலாம். கிராம மக்களின் மகிழ்ச்சிக்கும் சுதந்திரம் மற்றும் சார்பற்ற நிலைக்கும் பேருதவியாக அவை இருந்தன. எல்லாம் அழிந்து சிதைந்து போனாலும் கிராம சமுதாயம் மட்டும் தலைதூக்கி நின்றது. கிராம சமுதாயத்தில் பெருமிதம் கொள்ளும் பலர் நாட்டின் விதியை நிர்ணயிப்பதில் அவை என்ன பங்காற்றியது என்பதைக் குறித்து அக்கறை கொள்வதில்லை அது ஏன்? நாட்டின் விதியைக் குறித்து அவற்றின் பங்கை மெட்காப் பின்வருமாறு விவரிக்கிறார்:
“சாம்ராஜ்யங்கள் ஒவ்வொன்றாக வீழ்கின்றன. புரட்சிகளைத் தொடர்ந்து புரட்சிகள் வெற்றி பெறுகின்றன. இந்துக்கள், பதான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், சீக்கியர்கள், ஆங்கிலேயர்கள் முதலானோர் ஒவ்வொருவராக எஜமானர்களாகின்றனர். ஆனால் கிராம சமுதாயங்கள் மாற்றங்களின்றி அசைவற்றிருக்கின்றன. குழப்ப காலங்களில் அவை ஆயுதமேந்தித் தம்மைக் காத்துக்கொண்டன. எதிரிகளின் படைகள் நாட்டின் வழியாகச் செல்கின்றன, கிராம சமுதாயங்கள் தங்கள் கன்று காலிகளுடன் நான்கு சுவர்களுக்கிடையே அடைபட்டுக்கொண்டு எதிரிகளின் கோபத்தைக் கிளறாமல், அவர்கள் கடந்து செல்வதை அனுமதிக்கின்றன.”
தங்கள் நாட்டு வரலாற்றில் கிராம சமதாயங்களின் பங்கு இதுதான். இதை அறிந்துகொண்ட பிறகும், பெருமை கொள்ள என்ன இருக்கிறது. வாழ்க்கைச் சுழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களிலிருந்து பிழைத்து வந்துள்ளனர் என்பது உண்மைதான். அவர்கள் அழிவிலிருந்து தப்பி விட்டனர் என்பது மட்டும் ஓர் அரிய விஷயமாகாது. எந்த நிலையில் அவர்கள் அழிவிலிருந்து தப்பித்தனர் என்பதே கேள்வி. நிச்சயமாக மிகவும் கீழான, சுயநலத்தினால்தான் இதைச் சாதிக்க முடிந்தது. இந்திய நாட்டின் அழிவிற்கு இந்தக் கிராமக் குடியரசுகளே பொறுப்பு என நான் கருதுகிறேன். பிராந்தியவாதம் மற்றும் சாதிப்போக்குகளைக் கண்டிப்பவர்கள் கிராமங்களைத் தூக்கிப் பிடிப்பவர்களாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. வட்டாரவாதத்தின் சாக்கடைத் தொட்டியாகவும், அறியாமை நிறைந்த இருள் குகையாகவும் குறுகிய மனப்பான்மை மற்றும் சாதி ஆதிக்கத்தின் பிறப்பிடமாகவும் உள்ளதுதானே கிராமம்? எனவேதான் கிராமத்தை ஒதுக்கிவிட்டு அரசியல் சாசனம் தனி மனிதனைத் தன் அடிப்படை அலகாக வைத்துக் கொண்டுள்ளது.
தொடரும்…
“அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்”- டாக்டர். அம்பேத்கர்


