“அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்”- டாக்டர். அம்பேத்கர்
தலைவர் அவர்களே, வரைவுக் குழுவினரால் இறுதி செய்யப்பட்ட வரைவு அரசியல் சாசனத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் என முன் மொழிகிறேன்.
1947 ஆகஸ்டு 29ம் நாளன்று அரசியல் நிர்ணயசபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் வரைவுக்குழு நியமிக்கப்பட்டது.

ஒன்றிய அதிகாரக்குழு, ஒன்றிய அரசியல் சாசனக்குழு, மாகாண அரசியல் சாசனக்குழு மற்றும் அடிப்படை உரிமைகள் சிறுபான்மையினர், பழங்குடியினர் பிராந்தியங்கள் குறித்த ஆலோசனைக்குழு முதலான பல்வேறு குழுக்களது அறிக்கைகளின் அடிப்படையில் அரசியல் நிர்ணயசபை மேற்கொண்ட முடிவுகளுக்கேற்ப அரசியல் சாசனத்தைத் தயாரிக்கும் பணி, வரைவுக் குழுவுக்கு அளிக்கப்பட்டது. சில விஷயங்களில், 1935 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டத்தின் விதிகளைப் பின்பற்ற வேண்டுமென்று அரசியல் நிர்ணய சபை பணித்தது. வரைவுக்குழு செய்துள்ள மாற்றங்களை, 1948 பிப்ரவரி 21 ஆம் தேதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். இந்த மாற்றங்களைத் தவிர, அதற்களிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை உள்ள படியே வரைவுக்குழு நிறைவேற்றியுள்ளது என நம்புகிறேன்.
வரைவுக்குழு உருவாக்கியுள்ள வரைவு அரசியல் சாசனம் ஓர் சக்தி மிக்க ஆவணம் எனக் கூறலாம். அது 315 உறுப்புகளையும் (Articles) 8 அட்ட வணைகளையும் (Schedules) கொண்டுள்ளது.
- அரசியல் நிர்ணயசபை விவாதங்கள் (இனி அ.நி.ச. விவாதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. 1948 நவம்பர் 4, பக்கம் 31.-44)
இந்திய வரைவு அரசியல் சாசனத்தைப் போன்று, அளவில் இத்தனைப் பெரிதாக இல்லை என்பது மறுக்க முடியாதது. கவனத்தைப் பெரிதும் ஈர்க்கின்ற இந்த வரைவு அரசியல் சாசனத்தின் சிறப்பம்சங்களை அதை முழுவதும் படிக்காதவர்களால் அறிந்துகொள்வது சாத்தியமில்லை.
கடந்த எட்டு மாதங்களாக வரைவு அரசியல் சாசனம் (Draft Constitution) மக்கள் முன் விவாதத்திற்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த இடைக்காலத்தில் நண்பர்கள், விமர்சகர்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோர் இதில் கண்டுள்ள விதிகளைக் குறித்த தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க போதுமான அவகாசம் இருந்தது. அரசியல் சாசனத்தின் உறுப்புகளைப் பற்றிய தவறான கருத்துகள் மற்றும் உறுப்புகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாததன் அடிப் படையில் சில விமர்சனங்கள் எழுத்துள்ளன என்று என்னால் நிச்சயமாகக் கூறமுடியும். ஆனால் அந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தாக வேண்டும்.
இந்த இரண்டு காரணங்களுக்காக, இத்தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் வேளையில் அரசியல் சாசனத்தின் சிறப்பம்சங்களை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதுடன் அதன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளித்தாக வேண்டும்.
நான் இதைத் தொடங்குவதற்கு முன்பு அரசியல் நிர்ணய சபை நியமித்துள்ள மூன்று குழுக்களின் அறிக்கைகளை சபையின் முன்னால் வைக்க விரும்புகிறேன். அவை, 1. தலைமை ஆணையர்கள் மாகாணங்கள் பற்றிய குழுவின் அறிக்கை. 2.ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்குமிடையேயான நிதிநிலை உறவுகள் பற்றிய சிறப்புக் குழுவின் அறிக்கை, மற்றும் 3. பழங்குடியினர் பிரதேசங்கள் பற்றிய ஆலோசனைக்குழுவின் அறிக்கை அவையிலுள்ள உறுப்பினர்களுக்கு அவற்றின் நகல்கள் அளிக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ள உரிய காலத்தில் அவை வழங்கப்படவில்லை.
இந்த அறிக்கைகள் மற்றும் அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வரவுக் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டுள்ளதால் சம்பிரதாய முறையில் அவற்றை இந்த அவைக்கு அளிப்பது சரியானதாக இருக்கும்.
முக்கியமான கேள்வியைப் பார்ப்போம். அரசியல் சாசனத்தைப் பயிலும் மாணவர் ஒருவரிடம் இந்த அரசியல் சாசனத்தை அளித்தால், நிச்சயமாக அவர் இரண்டு கேள்வியை எழுப்புவார்: அரசியல் சாசனம் எத்தகைய அரசை முன்வைக்கிறது? இரண்டாவதாக அரசியல் சாசனம் எப்படிபட்டதாக இருக்கும்? ஏனெனில் இந்த இரண்டு முக்கிய விஷயங்களையும் ஒவ்வொரு அரசியல் சாசனமும் உள்ளடக்கியுள்ளது. இந்த இரண்டு கேள்விகளில் முதலாவதிலிருந்து ஆரம்பிக்கிறேன்.
இந்திய ஒன்றியத்தின் தலைவராகக் குடியாகத் தலைவர் விளங்குவார் என்று வரைவு அரசியல் சாசனம் குறிப்பிடுகிறது. குடியரசுத் தலைவர் என அழைக்கப்படும் முறை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபரை நினைவுப்படுத்துகிறது. குடியரசுத் தலைவர் என்ற பெயரில் இருக்கும் ஒற்றுமையைத் தவிர அமெரிக்க அரசுமுறைக்கும் நமது வரைவு அரசியல் சாசனம் குறிப்பிடும் இந்திய அரசு முறைக்கும் எந்த விதப் பொதுத்தன்மையும் கிடையாது. அமெரிக்க ஆட்சிமுறை அதிபர் ஆட்சி முறை எனப்படும். நமது வரைவு அரசியல் சாசனத்தில் கொடுக்கப் பட்டுள்ளதோ நாடாளுமன்ற அரசமைப்பாகும். இந்த இரண்டும் அடிப்படையில் வேறுபாடுடையவை.
அமெரிக்க அதிபர் முறையில் ஆட்சித் துறையின் முக்கியத் தலைவராக அதிபர் விளங்குகிறார். ஆட்சித்துறை அவர் பொறுப்பில் இருக்கும். வரைவு அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள இடம், இங்கிலாந்து அரசியல் சாசனப்படி அரசருக்கு அளிக்கப்பட்டுள்ள இடத்தைப் போன்றதாகும். அவர் குடியரசின் தலைவர் ஆவார்; ஆனால் ஆட்சித்துறையின் தலைவராக இருக்க மாட்டார். அவர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். ஆனால் நாட்டை ஆள்வதில்லை. அவர் நாட்டின் சின்னமாக விளங்குகிறார். நாட்டின் முடிவுகள் அறிவிக்கப்படும் வழிமுறைச் சடங்குகளின் முத்திரை போன்றதுதான் ஆட்சித்துறையில் அவருடைய இடம், அமெரிக்க அரசியல் சாசனப்படி பல்வேறு துறைகளை நிருவகிக்கும் அமைச்சர்கள் அதிபரின் கீழ் உள்ளனர். அதே போன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் கீழும் பல்வேறு துறைகளை நிருவகிக்கும் அமைச்சர்கள் இருப்பார்கள். இங்கும் கூட இரண்டுக்கும் இடையே அடிப்படையான வேறுபாடு உள்ளது. தமது அமைச்சர்கள் அளிக்கும் ஆலோசனை எதையும் அமெரிக்க அதிபர் கேட்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இந்தியக் குடியரசுத் தலைவர், பொதுவாக தமது அமைச்சர்களின் ஆலோசனைகளைக் கேட்டாக வேண்டும். அவர்கள் ஆலோசனைக்கு மாறாக அவரால் எதையும் செய்ய முடியாது.அவர்கள் ஆலோசனையின்றி அவர் எதையும் செய்ய முடியாது. தமது அமைச்சரை அமெரிக்க அதிபர் எந்த நேரத்திலும் பதவியிலிருந்து விலக்கமுடியும். ஆனால் நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக்குப் பெரும்பான்மையிருக்கும் வரை இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் கிடையாது.
ஆட்சித் துறையும் சட்டமன்றமும் தனித்தனியாகச் செயல்படுவதின் அடிப்படையில் அமெரிக்க அதிபர் ஆட்சி முறை செயல்படுகிறது. எனவே அதிபரும் அவரது அமைச்சரவை சகாக்களும் காங்கிரசின் உறுப்பினர்களாக இருப்பதில்லை. இந்தக் கோட்பாட்டை வரைவு அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்திய ஒன்றியத்தின் அரசியல் சாசனப்படி அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சர்களாக முடியும். நாடாளுமன்றத்திலுள்ள மற்ற உறுப்பினர்களுக்குள்ள உரிமைகளே அமைச்சர்களுக்கும் இருக்கும். அதாவது நாடாளுமன்றத்தில் அமர்ந்து விவாதங்களில் பங்கு கொள்வது, வாக்களிப்பது போன்றவையாகும். நிச்சயமாக இந்த இருவகை அரசுகளும் ஜனநாயக அரசுகள்தாம். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்பது எளிய செயலல்ல. ஒரு ஜனநாயக ஆட்சி நிர்வாகம் இரண்டு நிபந்தனைகளுக்குட்பட வேண்டும்: (1) அது ஒரு நிலையான ஆட்சி நிர்வாகமாக (Ex-ecutive) இருக்க வேண்டும். (2) அது ஒரு பொறுப்புள்ள ஆட்சி நிர்வாகமாக இருக்கவேண்டும். இரண்டு வரையிலும் சம அளவில் இயங்கும் ஆட்சி நிர்வாகத்தை உருவாக்குவது துரதிர்ஷ்டவசமாக சாத்தியமில்லாமலிருக்கிறது. அதிக உறுதியுடன் (Stuble)இருக்கும் முறையோ அல்லது அதிகப் பொறுப்புள்ள (Responsible)ஆனால் அதிக நிலையற்ற ஒரு முறையோதான் உருவாகிறது. அமெரிக்க மற்றும் சுவிட்சர்லாந்து முறைகள் அதிக நிலையானத் தன்மை கொண்டவை. ஆனால் அதிகப் பொறுப்புள்ளவை அல்ல. ஆனால் பிரிட்டிஷ் முறை அதிகப் பொறுப்புள்ளதாக இருந்தாலும், அதிக நிலையானத் தன்மை கொண்டதல்ல, இதற்கான காரணம் எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதே. அமெரிக்க ஆட்சி நிர்வாகம் நாடாளுமன்றம் சார்ந்த அதிகார அமைப்பல்ல. எனவே அது நாடாளுமன்ற பெரும்பான்மையைச் சார்ந்து செயல்படவேண்டிய அவசியமில்லை.
ஆனால் பிரிட்டிஷ் நிர்வாக முறை நாடாளுமன்றம் சார்ந்த முறையாகையால் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பொறுத்து அது செயல்படுகிறது. நாடாளுமன்றம் சாராத ஆட்சி நிர்வாக முறையாக அமெரிக்க நிர்வாக முறை இருப்பதால் அமெரிக்க காங்கிரஸ் ஆட்சி நிர்வாகத் துறையை நீக்கிவிட முடியாது. நாடாளுமன்றத்தால் தேரந்தெடுக்கப்பட்ட அரசு, பெரும்பான்மையினரின் நம்பிக்கையை இழந்தவுடன் பதவியைத் துறக்க வேண்டும். நாடாளுமன்றத்தை சாராமல் இயங்கும் ஆட்சி நிர்வாகம் நாடாளுமன்றத்திற்கு அதிக அளவில் பொறுப்பாக நடந்து கொள்வதில்லை. ஆனால் நாடாளுமன்றத்தைச் சார்ந்து இயங்கும் ஆட்சி நிர்வாகம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவைப்படுவதால் அதிகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத்தைச் சார்ந்து இயங்கும் ஆட்சி நிர்வாகத்தை நாடாளுமன்றம் சாராத ஆட்சி நிர்வாகத்தை விட அதிகப் பொறுப்புடன் நடந்து கொள்ளும் என்ற வேறுபாடு இருப்பதுடன், அதன் செயல்பாடுகளை மதிப்பீடு செய்யும் கால அளவிலும் அதைச் செயல்படுத்தும் முறையிலும் வேறுபாடு உள்ளது. அமெரிக்காவில் இயங்கி வருவது போன்ற நாடாளுமன்றம் சாராத முறையில், ஆட்சி நிர்வாகத்தின் பொறுப்புகள் நிறைவேற்றப்பட்டதைக் குறித்து ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவிற்குப் பிறகு மதிப்பீடு செய்யப்படுகிறது. அது இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அது வாக்காளர்களால் நிறைவேற்றப்படுகிறது. நாடாளுமன்ற முறை செயல்பட்டு வரும் இங்கிலாந்து நாட்டில் ஆட்சித்துறையின் பணிகள் தினந்தோறும் மற்றும் குறிப்பிட்ட காலத்தில் மதிப்பீடு செய்யப்படுகிறது. கேள்விகள், தீர்மானங்கள், நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள், ஒத்திவைப்புத் தீர்மானங்கள், உரைகளின் மீதான விவாதங்கள் ஆகியவைகள் மூலம் அன்றாடம் மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஒரு காலக்கெடுவில் நடைபெறும் மதிப்பீடு ஐந்தாண்டுகளுக்கோ அதற்கு முன்போ நடைபெறும் தேர்தல் மூலம் நிறைவேற்றப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் செய்யப்படும் மதிப்பீட்டை விட, பொறுப்புகள் நிறைவேற்றப்பட்டதை அன்றாடம் மதிப்பீடு செய்யும் முறையே இந்தியா போன்ற நாட்டில் மிகவும் பயனுள்ளதும் அவசியமானதும் என்று கருதப்பட்டது. இது அமெரிக்க முறையில் கிடையாது. நாடாளுமன்றத்தைச் சார்ந்து இயங்கும் ஆட்சித் துறையை சிபாரிசு செய்துள்ள வரைவு அரசியல் சாசனம், ஆட்சித்துறையின் நிலையானத் தன்மையை விட அதன் அதிகப் பொறுப்புள்ள தன்மையையே விரும்புகிறது.
வரைவு அரசியல் சாசனப்படியான ஆட்சி அமைப்பு முறையைப் பற்றி இதுவரை விளக்கம் அளித்துள்ளேன். இப்பொழுது வேறு ஒரு முக்கியப் பிரச்சினையான அரசியல் சாசனம் எவ்வாறு இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
இரண்டு வகையான அரசியல் சாசனங்கள் வரலாற்றில் பிரதானமாக இடம்பெற்று உள்ளன. அதாவது அவை ஒற்றை அரசியல் சாசனம் அல்லது கூட்டரசுக்கான (Federal) அரசியல் சாசனம் எனப்படும். ஒற்றை அரசுக்கான அரசியல் சாசனத்தின் இரண்டு முக்கிய தன்மைகள்: (1)மத்திய ஆட்சியின் மிக உயர்ந்த நிலை. (2) துணை சுய ஆட்சி அமைப்புகள் இல்லாதிருத்தல். மாறாக, கூட்டாட்சி அரசின் அரசியல் சாசனத்தில் (1) மத்திய ஆட்சி அமைப்பு முறையுடன் துணை சுய ஆட்சி அமைப்பு முறையும் இணைந்திருத்தல் (2) ஒவ்வொன்றும் அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள களத்தில் சர்வ சுதந்திரத்துடன் செயல்படுவது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், கூட்டாட்சி என்பது ஒரு இரட்டை ஆட்சி அமைப்பு முறையாகும். இரட்டை ஆட்சி முறையை நிறுவ வகை செய்வதால் வரைவு அரசியல் சாசனம் ஒரு கூட்டரசு அரசியல் சாசனம் என்றாகிறது, அரசியல் சாசனம் வகைசெய்துள்ள இரட்டை ஆட்சி முறையால் மத்தியில் ஒன்றியமும் பிராந்தியத்தில் மாநிலங்களும், அரசியல் சாசனம் அவைகளுக்கு ஒதுக்கியுள்ள களங்களில் அதிகாரம் செலுத்தும் இறையாண்மை உடையானவாக இருக்கும். இந்த இரட்டை ஆட்சி அமைப்பு என்பது அமெரிக்க அரசியல் சாசனத்தைப் போன்றது. அமெரிக்க அரசியல் அமைப்பு முறையும் இரட்டை ஆட்சி அமைப்பு முறைதான். அதில் ஒன்று கூட்டாட்சியாகவும் மற்றவை மாகாணங்களின் அரசுகளும் ஆகும். அவை வரைவு அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கு ஒப்பாகும். அமெரிக்க அரசியல் சாசனப்படியான கூட்டாட்சி, மாகாணங்களின் ஒரு கூட்டு ஒப்பந்த அமைப்பு அல்ல. அதேபோன்று மாகாணங்களின் நிர்வாக அமைப்புகள் ஒன்றிய அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. இதே போன்று இந்திய அரசும் மாநிலங்களின் கூட்டு ஒப்பந்த அமைப்பு அல்ல. மாநிலங்களின் நிர்வாக அமைப்புகளும் மத்திய ஒன்றிய அரசை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. ஆயினும், இத்துடன் இந்திய மற்றும் அமெரிக்க அரசியல் சாசனங்களுக் கிடையேயான ஒற்றுமை முடிந்து விடுகிறது. இந்த இரண்டுக்கும் இடையேயான ஒற்றுமைகளை விட வேற்றுமைகள் மிகவும் அடிப்படையானவை என்பதுடன் நன்கு புலப்படக் கூடியவையும் ஆகும்.
அமெரிக்கக் கூட்டரசு மற்றும் இந்தியக் கூட்டரசுகளுக்கிடையேயான வேற்றுமைகள் முக்கியமாக இரண்டாகும். அமெரிக்காவில் இந்த இரட்டை ஆட்சி அமைப்பு முறையுடன் இரட்டைக் குடியுரிமையும் வழக்கத்தில் உள்ளது. அமெரிக்காவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் குடியுரிமை உள்ளது. ஆனால் மாகாணத்தின் குடியுரிமையும் இருக்கிறது. இரட்டைக்குடியுரிமையினால் ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்க அரசியல் சாசனத்தின் பதினான்காவது திருத்தம் எளிதாக்குகிறது. அதன்படி அமெரிக்கக் குடிமகனுக்குள்ள உரிமைகளை, சலுகைகளை, சட்டப் பாதுகாப்புகளை மாகாணங்கள் ரத்து செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திரு.வில்லியம் ஆண்டர்சன் குறிப்பிட்டபடி வாக்களிப்பது, அரசு பதவிகள் போன்ற அரசியல் விஷயங்களில் மாகாணங்கள் தங்கள் குடிமகன்களுக்கு சலுகையளிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் இந்தச் சலுகைகள் மேலும் அதிகமாகிறது. ஒரு மாகாண அரசுப் பணியில், அல்லது உள்ளூர் அரசுப்பணிகளில் சேர வேண்டுமென்றால் ஒருவன் உள்ளூர்வாசி யாகவோ, அந்த மாகாணக் குடிமகனாகவோ இருக்க வேண்டும். சட்டம், மருத்துவம் போன்ற பொதுநலத் தொழில்களை நடத்த உரிமம் பெறுவதற்கு மாகாணத்தில் குடியிருப்பதோ குடியுரிமையைப் பெற்றிருப்பதோ அவசியம். மதுபானம் மற்றும் பங்குப் பத்திர விற்பனை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இவை பொருந்தும்.
ஒவ்வொரு மாகாணமும் தனது ஆட்சிப் பரப்பில் சில உரிமைகளைக் கொண்டுள்ளது. அதைத் தனது குடிமக்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்துகிறது. காட்டுமிருகங்கள் மற்றும் மீன்வளத் துறைகள் மாகாணங்களுக்கு உரியவை. தனது குடிமக்களுக்கு விதிக்கப்படும் கட்டணத்தைவிட பிற மாகாண மக்களுக்கு வேட்டையாடவும், மீன்பிடிக்கவும் அதிகக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனது பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பிற மாகாணத்து மாணவர்கள் சேர்ந்து படிக்க அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நெருக்கடியான நிலைமைகளில் அன்றி வேறு சந்தர்பங்களில் பிற மாகாணத்தவர்கள் மருத்துவமனைகளிலும், ஆதரவற்றோர்கள் விடுதிகளிலும் அனுமதிக்கப்படுவதில்லை.
சுருக்கமாகக் கூறுவதென்றால் தனது குடிமகன்களுக்கு அல்லது தனது மாகாணத்தில் குடியிருப்பவர்களுக்கு ஒரு மாகாணம் பல உரிமைகளை வழங்க முடியும். சட்டப்படி பிற மாகாணத்தவர்களுக்கு சில உரிமைகளை வழங்க மறுக்கலாம் அல்லது தனது மாகாணத்தவர்களைவிட அதிகமான நிபந்தனைகளை விதிக்கலாம். ஒரு மாகாணத்தின் குடியுரிமை பெற்றவர்களுக்கு அளிக்கப்படும் இந்தச் சிறப்புச்சலுகைகள் அந்த மாகாணத்தின் குடியுரிமைக்கான சிறப்புச் சலுகைகளாகும். இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் ஒரு மாகாணத்தின் குடியுரிமை பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் இடையேயான முக்கிய வேற்றுமைகளைக் காண முடியும். தற்காலிகமாகச் சிறிது காலமே தங்கியிருப்பவர்களுக்குச் சில குறைபாடுகளும் தடைகளும் உள்ளன.
நாம் அறிமுகப்படுத்தியுள்ள இந்திய அரசியல் சாசனம் ஒரே குடியுரிமை அளிக்கும் இரட்டை ஆட்சி அமைப்பு முறையிலானது, இந்தியா முழுவதற்குமாக ஒரே குடியுரிமையே இருக்கும். அது இந்தியக் குடியுரிமை எனப்படும். மாநிலக் குடியுரிமை கிடையாது. எந்த மாநிலத்தில் குடியிருந்தாலும் ஒவ்வொரு இந்தியனுக்கும் ஒரே வகையிலான உரிமைகள் இருக்கும்.
தொடரும்…
அதிகாரத்தை வழங்குவது எளிது. ஆனால் ஞானத்தை வழங்குவது தான் கடினம் – டாக்டர். அம்பேத்கர்


