“அதிகாரத்தை வழங்குவது எளிது. ஆனால் ஞானத்தை வழங்குவது தான் கடினம்” டாக்டா். அம்பேத்கர் உரை.
தலைவர் அவர்களே! தீா்மானம் குறித்து என்னைப் பேச அழைத்ததற்கு நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்றேன். உங்கள் அழைப்பு எனக்கு வியப்பு அளிக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். எனக்கு முன்னால் 20 அல்லது 22 பேர் இருப்பதால், என் முறை, அது வந்தால், நாளைதான் வரும் என்று நினைத்தேன். இன்று நான் எந்த தயாரிப்பும் இல்லாமல் வந்திருக்கிறேன்.

இந்த வகையான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முழு அறிக்கையை வெளியிட நான் விரும்பியதால் என்னைத் தயார்படுத்திக்கொள்ள நான் விரும்பியிருந்தேன். நீங்கள் 10 நிமிடம் எனக் கால நிர்ணயம் செய்திருக்கிறீர்கள். இந்த காலவரம்புக்குள் எங்களுக்கு முன்னால் வைக்கப்பட்டிருக்கும் தீர்மானத்திற்கு நான் எவ்வாறு நியாயம் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. எவ்வாறாயினும், இந்த விஷயத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை முடித்தவரை சில வார்த்தைகளில் சுருக்கிக் கூறுவதற்கு நான் என்னால் முடித்த அனைத்தையும் செய்வேன்.
தலைவர் அவர்களே, நேற்றிலிருந்து நடந்த விவாதங்களின் வெளிச்சத்தில் பார்த்தால், இந்தத் தீர்மானம் வெளிப்படையாகத் தன்னை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறது. ஒரு பகுதி சர்ச்சைக்குரியது, மற்றொரு பகுதி சர்ச்சையில்லாதது. இந்த தீர்மானத்தின் பத்திகள் (5) முதல் (7) வரை அடங்கிய பகுதி சர்ச்சையில்லாதது. இந்தப் பத்திகள் இந்த நாட்டின் எதிர்கால அரசியலமைப்பின் நோக்கங்களை முன்வைக்கின்றன.
ஒரு சோசலிஸ்ட் என்று புகழ்பெற்ற பண்டிட் ஜவஹர்லால் நேருவிடமிருந்து இப்படியொரு தீர்மானம் வந்திருக்கிறது. இது சர்ச்சைக்குரியது அல்ல என்றாலும், என் மனதுக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. தீர்மானத்தின் அந்தப் பகுதியின் அவர் செய்திருப்பதைவிட அவர் இன்னும் அதிகமாகச் செல்வார் என்று நான் எதிர்பார்த்தேன். வரலாற்றின் மாணவன் என்ற வகையில், தீர்மானத்தின் இந்தப் பகுதியை அதில் உள்ளடக்காமல் இருந்திருக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது.
தீர்மானத்தின் அந்த பகுதியை ஒருவர் படிக்கும்போது, இது பிரெஞ்சு அரசியலமைப்புச் சட்ட அவையால் அறிவிக்கப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தில் (Declaration of the Rights of Man) ஒன்றை நினைவூட்டுகிறது. 450 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அந்த மனித உரிமைப் பிரகடனமும், அதில் பொதிந்துள்ள கொள்கைகளும் தமது சிந்தனைப்போக்கின் ஒரு பகுதியாக மாறிவிட்டன என்று கூறுவது தவறில்லை. நாகரிகமடைந்த உலகின் ஒவ்வொரு பகுதியிலும் நவீன மனிதனின் சிந்தனைப்போக்கின் ஒரு பகுதியாக அது ஆகியிருப்பது மட்டுமின்றி மிகவும் மரபுவழிப்பட்டதும், தனது சிந்தனையிலும் சமூக அமைப்பிலும் பழமைத்தன்மை கொண்டதுமான நமது நாட்டிலும்கூட சிந்தனைப்போக்கின் அங்கமாக அது மாறிவிட்டது எனக் கூறினால் அதை எவரும் மறுக்கமாட்டார்கள்.
அந்தத் தீர்மானத்தை அதே வார்த்தைகளில் இங்கே திரும்பச் சொல்வது வீண் வேலையாகும். இந்தக் கோட்பாடுகள் நம் கண்ணோட்டத்தின் அமைதியான மாசற்ற பகுதியாக மாறிவிட்டன. எனவே நமது கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது என அறிவிப்பது தேவையற்றது. தீர்மானம் வேறுசில குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தீர்மானத்தின் இந்தப் பகுதி, சில உரிமைகளை விவரித்தாலும், தீர்வுகளைப் பற்றி பேசவில்லை என்பதை நான் காண்கிறேன். உரிமைகள் மீறப்படும்போது அதற்கான நிவாரணத்தைப் பெற மக்கள் முயல்கையில் அதற்கான தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் உரிமைகளால் எந்தப் பயனும் இருக்காது.
எந்த மனிதனுடையவும் உயிர், சுதந்திரம், உடைமைகள், சட்டரீதியான முறைகளின்படி அல்லாமல் வேறுவகையில் பறிக்கப்பட மாட்டா என்ற வழக்கப்படியான விதிமுறை கூட தீர்மானத்தில் இடம்பெறவில்லை. சட்டத்திற்கும் ஒழுங்குமுறைக்கும் உட்பட்டதாக இந்த அடிப்படை உரிமைகள் வகுக்கப்பட்டுள்ளன, சட்டம் எது ஒழுங்குமுறை எது என்பதை அந்த சமயத்தில் உள்ள நிர்வாகம் முடிவு செய்யும். ஒரு நிர்வாகம் ஒரு கண்ணோட்டத்தை கொண்டிருக்கும்போது, வேறு ஒரு நிர்வாகம் வேறொரு கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கலாம். அன்றுள்ள நிர்வாகத்திடம் இந்த விஷயம் விடப்பட்டாள். அடிப்படை உரிமைகள் பற்றிய திட்டவட்டமான நிலையை நாம் கறாராகத் தெரிந்து கொள்ள முடியாது. பொருளாதார, சமூக. அரசியல் நீதி பற்றி குறிப்பிடும் சில ஷரத்துகள் உள்ளன. இந்த தீர்மானத்திற்குப் பின்னால் யதார்த்தத்தன்மை மற்றும் நேர்மை இருக்குமாயின் – அதுபற்றி எனக்கு கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை – பொருளாதார, சமூக, அரசியல் நீதியை யதார்த்தமாக்குவதை அரசுக்குச் சாத்தியமாக்குவதற்கு சில வழிமுறைகள் இருக்க வேண்டுமென்பதைத் தீர்மானத்தை முன்மொழிந்தவரிடமிருந்து நான் எதிர்பார்த்தேன். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து, நாட்டில் சமூக, பொருளாதார நீதி நிலவுவதற்காக திட்டவட்டமான வழிமுறைகள் தீர்மானத்தில் இடம்பெற்றிருக்க வேண்டும்; தொழில்கள் தேசியமயமாக்கப்படுதல், நிலம் தேசியமயமாக்கப்படுதல் ஆகிய திட்டங்கள் தீர்மானத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும். சமூக, பொருளாதார, அரசியல் நீதியை வழங்க வேண்டுமென்று நம்பும் எந்த எதிர்கால அரசாங்கத்திற்கும், அதன் பொருளாதாரம் ஒரு சோஷலிசப்பொருளாதாரமாக இல்லை எனில், அது எவ்வாறு சாத்தியமாகும் என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, என்னைப் பொறுத்தவரை, இங்கு முன்மொழியப்படும் விஷயங்கள் தெளிவாக்கப்பட்டுள்ளது பற்றி எனக்கு ஆட்சேபம் எதுவும் இல்லையெனினும், இந்தத் தீர்மானம் என் மனத்திற்கு சிறிது ஏமாற்றமளிக்கிறது. எனினும், நான் வெளியிட்ட கருத்துக்களோடு, இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடத் தயாராக உள்ளேன்.
இப்பொழுது, தீர்மானத்தின் முதல் பாகத்திற்கு வருகிறேன். இது முதல் நான்கு பாராக்களைக் கொண்டுள்ளது. நான் கூறியது போல, இந்த அவையில் நடந்த விவாதத்திலிருந்து இது வாத பிரதிவாதத்திற்குரிய விஷயமாக ஆகிவிட்டது. இந்த சா்ச்சை “குடியரசு” என்ற வாா்த்தையை பயன்படுத்துவதை மையமாக கொண்டுள்ளது எனத் தோன்றுகிறது. ‘இறையாண்மை மக்களிடமிருந்து பெறப்படுகிறது’ என்று பாரா 4-ல் உள்ள வாக்கியத்தை மையமாக இது கொண்டுள்ளது. முஸ்லீம் லீக் வராமல் இருக்கும்போது இந்த மன்றம் இந்தத் தீா்மானத்தை பரிசீலிக்கத் துவங்குவது முறையற்றது என எனது நண்பர் டாக்டா் ஜெயகர் எழுப்பிய விஷயத்திலிருந்து இது எழுகிறது. இந்த மாபெரும் நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பின் எதிர்கால பரிணாம வளர்ச்சி மற்றும் அதன் இறுதி வடிவம் பற்றி எந்தவித மிகச்சிறிய ஐயப்பாடும் என மனதில் இல்லை. இன்று நாம் அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் பிளவுபட்டுள்ளோம் என்பதை நான் அறிவேன். நாம் போட்டி பூசல்களில் ஈடுபடும் பாசறைகளாக இருக்கிறோம். அத்தகைய ஒரு பாசறையின் தலைவர்களில் ஒருவனாக நான் இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்ளும் அளவுக்குச் சொல்லவும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால், இப்படியிருப்பினும், காலமும் சூழ்நிலையும் நன்கு அமையுமாயின் இந்த நாடு ஒரே நாடாகப் பரிணமிப்பதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதில் நான் முற்றிலும் உறுதியாக இருக்கிறேன். நம்மிடையே எத்தனை எத்தனையோ சாதிகளும் சமயக் கோட்பாடுகளும் இருப்பினும் நாம் ஒன்றுபட்ட மக்களாக ஆவோம் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. இந்தியாவைப் பிரிக்க வேண்டுமென்ற முஸ்லீம் லீக்கின் கிளர்ச்சி இருந்தபோதிலும், ஒரு நாள் முஸ்லீம்களிடைலேயே போதுமான தெளிவு ஏற்பட்டு, ஒன்றுபட்ட இந்தியாவே தங்களுக்கும் நல்லது என்று அவர்கள் சிந்திக்கத் துவங்குவர் என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் மயக்கமும் இல்லை.
இறுதிக் குறிக்கோளைப் பொறுத்தவரை நம்மில் யாருக்கும் எந்தக் கவலையும் இருக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நம்மில் யாருக்கும் ஐயம் இருக்க வேண்டியதில்லை. நமக்குள்ள சிக்கல் என்னவெனில் இன்று பல்வேறான முரண்பட்ட கூறுகள் கொண்ட நம் மக்களைப் பொதுவான முடிவை எடுக்கும்படிச் செய்து நம்மை ஒற்றுமைக்கு இட்டுச் செல்லும் பாதையில் முன்னேறச் செய்வது எவ்வாறு என்பதுதான். இறுதியான குறிக்கோளைப் பற்றியதல்ல; மாறாக, ஆரம்பம், பற்றியதே தமக்குள்ள சிக்கல். ஆகவே, மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, நம்மை விருப்பத்துக்குரிய நண்பர்களாக ஆக்குவதற்காக, ஒவ்வொரு கட்சியையும் ஒவ்வொரு பகுதியினரையும் அந்தப் பாதையில் அழைத்துச் செல்வதற்கு இணங்கச் செய்வதற்காகப் பெரும்பான்மைக் கட்சி, இன்று நம்முடன் இணைந்து வரத் தயாராக இல்லாதவர்களின் தப்பெண்ணங்களைச் சகித்துக் கொள்வது கூட மிகச் சிறந்த அரசியல் மேதமையாதலால், இந்த வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன். வெற்று முழக்கங்களை நாம் விட்டுவிடுவோம்; மக்களைப் பயமுறுத்தும் வார்த்தைகளை விட்டு விடுவோம். நமது எதிராளிகளின் தப்பெண்ணங்களுக்கு சலுகை கூட அளிப்போம்; அவர்களை உள்ளே அழைத்து வருவோம்; இதனால் நான் குறிப்பிட்ட பாதையில் முன்னேற அவர்கள் விருப்பமுடன் நம்முடன் சேர்ந்து கொள்வார்கள்; நாம் நீண்ட தூரம் பயணம் செய்தால், அது நிச்சயமாக ஒற்றுமைக்கு நம்மை அழைத்துச் செல்லும். எனவே, இந்த இடத்தில் இருந்து டாக்டர் ஜெயகரின் திருத்தத்தை ஆதரிக்கிறேனென்றால், சரியோ, தவறோ, நாம் எடுக்கும் நிலை சட்டப்படியான உரிமைகளுக்கு உகந்ததா, மே 16 ஆம் தேதி, டிசம்பர் 6 ஆம் தேதி அறிக்கையுடன் ஒத்துப்போகிறதா என்பதையெல்லாம் ஒருபக்கமாய் வைத்துவிடுவது அவசியம் என்பதை, நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம். இது சட்டப்படியான உரிமைகள் என்ற கட்டுக்கோப்பிற்கு உட்படுத்த முடியாத பெரிய விஷயமாகும். இது சட்டப்படியான பிரச்சினையே அல்ல. இந்த சட்டரீதியான பரிசீலனையை ஒதுக்கி வைத்துவிட்டு சில முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்; அதன் மூலம் நம்முடன் வரத்தயாராக இல்லாதவர்களும் வந்து சேர்வார்கள். அவர்கள் வருவதைச் சாத்தியமாக்குவோம். இதுதான் எனது வேண்டுகோள்.
இதுவரை நடைபெற்ற விவாதங்களில் இரு விஷயங்கள் என்னை மிகவும் ஈர்த்தன; அவற்றை ஒரு காகிதத்தில குறித்து வைத்துக் கொள்ளும் சிரமத்தை மேற்கொண்டேன். ஒரு விஷயம் இந்த அவையில் நேற்று எனது நண்பர் பீஹாரின் பிரதம மந்திரி பேசியதாகும். அவர் கேட்டார் ‘இந்த அரசியல் நிர்ணய சபைக்குள் முஸ்லீம் வருவதை இந்தத் தீா்மானம் எவ்வாறு தடுக்க முடியும்?’ இன்று எனது நண்பர் டாக்டர் ஷியாமப் பிரசாத் முகர்ஜி வேறொரு கேள்வியை எழுப்பினார். அதாவது ‘இந்தத் தீர்மானம் முரணாக உள்ளதா?’ இவை மிக முக்கியமான கேள்விகள் என்றும் அவற்றிற்குப் பதிலளிக்கப்பட வேண்டும். திட்டவட்டமாகப் பதிலளிக்கப்பட வேண்டும் என்றும் நான் நினைக்கிறேன். இந்தத் தீர்மானம் பலனை கொண்டுவரும் நோக்கம் கொண்டதா இல்லையா; ஆழமான கணிப்பின் அடிப்படையிலானதா, இது தற்செயலாக நிகழ்ந்ததா? இது எப்படியாயினும் முஸ்லீம் லீக்கை வெளியில் வைப்பதே அதன் விளைவாக இருக்கும் என்று கருதுகிறேன். இது சம்பந்தமாக, தீா்மானத்தின் மூன்றாவது பத்தியைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்; அது மிகக் கருத்தாழம் மிக்கதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும் என நினைக்கிறேன். பத்தி 3, இந்தியாவின் எதிர்கால அரசியல் சாசனத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவரின் நோக்கம் யாது என்பது எனக்குத் தெரியாது. இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின், தீர்மானத்தின் 3 ஆவது பத்தியின் வரையறைகளின்படி ஓர் அரசியல் சாசனத்தை வகுக்கும்படி அரசியல் நிர்ணயசபைக்கு ஓர் ஆணையிடுவது போன்று அது செய்ல்படும். பத்தி 3 என்ன கூறுகிறது? இந்த நாட்டில் இரு வெவ்வேறான ஆட்சி முறை இருக்கும் என்று பத்தி 3 கூறுகிறது; அடிநிலையில் சுயாட்சிஉரிமை பெற்ற மாகாணங்கள் அல்லது சமஸ்தானங்கள் அல்லது ஐக்கிய இந்தியாவில் சேர விரும்பும் மற்ற பிரதேசங்கள் இருக்கும். இந்த சுயாட்சிப் பகுதிகள் முழு அதிகாரங்கள் பெற்றிருக்கும். மத்திய அரசாங்கத்துக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்கள் போக எஞ்சியுள்ள அதிகாரங்கள் அவற்றிற்கு இருக்கும். மாகாண அரசாங்கங்களுக்கு மேலே ஓர் ஒன்றிய அரசாங்கம் இருக்கும்.
அது சில விஷயங்களில் சட்டமியற்றி அவற்றை அமுல்படுத்தும் மற்றும் நிர்வகிக்கும். தீா்மானத்தின் இந்தப் பகுதியை நான் படிக்கும்போது, அதாவது ஒன்றியத்திற்கும் மாகாணங்களுக்கும், இடையிலான அமைப்பு பற்றிய எந்தக் குறிப்பையும் என்னால் காண முடியலில்லை. அமைச்சரவைக்குழுவின் அறிக்கையின் வெளிச்சத்தில், அல்லது வாா்தா மாநாட்டில் காங்கிரஸ் நிறைவேற்றிய தீர்மானத்தின் பின்னணியில் இந்தப் பத்தியைப் படித்ததில் மாகாணங்களைக் குழுக்களாக ஆக்கும் கருந்து பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாதது பற்றி வியப்படைந்தேன். தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரை, மாகாணங்களைக் குழுக்களாக ஆக்கும் கருத்தை நான் விரும்பவில்லை. ஒன்றுபட்ட ஒரு பலமான மத்திய அமைப்பையே, 1935 இந்திய அரசாங்கச் சட்டப்படி நாம் ஏற்படுத்திய மத்திய அமைப்பை விட அதிகப் பலம் வாய்ந்த மத்திய அமைப்பையே நான் விரும்புகிறேன். ஆனால், இந்த அபிப்ராயங்கள், இந்த விருப்பங்கள் யதார்த்த நிலைமையில் எத்தகைய பிரதிபலிப்பையும் ஏற்படுத்தப் போவது இல்லை. ஒரு நீண்ட பாதையில் நாம் பயணம் செய்துள்ளோம். காங்கிரஸ்கட்சி அதற்கே தெரிந்த காரணங்களால், ஒரு பலமான மத்திய அமைப்பை உடைத்தெறிவதற்கு சம்மதித்துள்ளது. 150 ஆண்டு நிர்வாகத்தின் விளைவாக ஒரு பலமான மத்திய அமைப்பு அமைக்கப்பட்டது அது வியந்து பாராட்டக்கூடிய, கௌரவமான, பாதுகாப்பளிப்பதான ஓர் ஏற்படாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த நிலையைக் கைவிட்டு, ஒருபலமான மத்திய அமைப்பு நமக்கு வேண்டாமென்று சொல்லுகிறது; ஓர் இடைநிலையிலான அரசியல் அமைப்புமுறை, அதாவது ஒன்றிய அரசாங்கத்திற்கும் மாகாணங்களுக்குமிடையே ஒரு உப – கூட்டாட்சி அமைப்பு இருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்நிலைமையில் மாகாணங்களைக் குழுக்களாக அமைக்கும் கருந்து பற்றி எந்தக் குறிப்பும் 3 ஆவது பத்தியில் ஏன் இல்லை என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், முஸ்லீம் மற்றும் மாட்சிமை பொருந்திய மன்னர்பிரான் அரசாங்கமும், குழுக்களாகப் பிரிப்பது பற்றிய விதியின் வியாக்கியானம் பற்றி ஒருமித்த கருத்துக் கொண்டிருக்கவில்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பல்வேறு குழுக்களில் வைக்கப்பட்ட மாகாணங்கள் ஓா் ஒன்றியம் அல்லது உப – கூட்டாட்சி அமைப்பை ஏற்படுத்த ஒப்புக்கொண்டால், அந்த ஆலோசனை பற்றி காங்கிரசுக்கு எந்த ஆட்சேபமும் இருக்காது, குறைந்தபட்சம் அதனை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளும் என்றே எப்பொழுதும் எண்ணி வந்திருக்கிறேன். அது தவறு என்று காண்பிக்கப்பட்டால் அதைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். காங்கிர கட்சியின் சிந்தனையை நான் சரியாக விளக்கியிருக்கிறேன். நான் கேட்க விரும்பும் கேள்வி இதுதான்; மாகாணங்களின் ஒன்றியம் அல்லது மாகாணங்களைக் குழுக்களாக அமைக்கும் கருத்தை, இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தவரும் அவரது கட்சியும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போது, தீர்மானத்தில் ஏன் அவர் அதைக் குறிப்பிடவில்லை? ஒன்றியம் என்ற கருத்து தீர்மானத்தின் வாசகத்தில் ஏன் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது? இதற்கான விடையை என்னால் காணமுடியவில்லை. எனவே இந்த அவையில் பீஹார் பிரதம மந்திரியும் டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜியும் எழுப்பிய இரண்டு கேள்விகளுக்கு, அதாவது மே 16 அறிக்கைக்கு எவ்வாறு இந்தத் தீர்மானம் முரணாக இருக்கிறது அல்லது அரசியல் நிர்ணயசபையில் முஸ்லீம் லீக் நுழைவதை இந்தத் தீர்மானம் எவ்வாறு தடுக்கிறது என்ற கேள்விகளுக்குப் பதிலாகத் தான் நான் எனது கருத்துகளைக் கூறுகிறேன். தொடர்ந்து அவைக்கு வராமல் இருப்பதை, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பதை நியாயப்படுத்துவதற்கு முஸ்லீம் லீக் இத்தீர்மானத்தின் பத்தி 3ஐ சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும். இந்த விஷயம் பற்றி முடிவு எடுப்பதை ஒத்திப்போட வேண்டும் என்ற நமது நிலையை எனது நண்பர் டாக்டர் ஜெயகர் சட்டரீதியான முறையில் எடுத்துரைத்தார்; அவர் மனத்தைப் புண்படுத்தும் எண்ணம் எதும் எனக்கு இல்லை அவர் வாதத்தின் அடிப்படை இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறதா என்பதாகும். அரசியல் நிர்ணயசபை செயல்படுவது பற்றிய பகுதியை அமைச்சரவைக் குழு அறிக்கையிலிருந்து அவர் வாசித்தார். இந்தத் தீர்மானத்தைப் பற்றி முடிவு செய்வதற்கு இந்த அரசியல் நிர்ணயசபை கடைப்பிடிக்கும் செயல்முறை அந்த அறிக்கையில் வகுக்கப்பட்ட செயல்முறைக்கு முரணாக உள்ளது என்பது அவரது வாதம்.
இந்த விஷயத்தை வேறுமுறையில் நான் முன்வைக்க விரும்புகிறேன். உடனடியாக நேராகவே, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற உங்களுக்கு உரிமை இருக்கிறதா, இல்லையா என்பதைப் பரிசீலிக்கும்படி உங்களை நான் கேட்டுக் கொள்ளவில்லை இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு உரிமை இருக்கலாம் நான் கேள்வி இதுதான்; இவ்வாறு செய்வது அறிவுடமையாகுமா? அதிகாரம் என்பது ஒரு விஷயம்; அறிவுடமை என்பது முற்றிலும் வேறான விஷயம்; இந்த விஷயத்தை பின்கண்ட முறையில் பரிசீலிக்க வேண்டுமென விரும்புகிறேன்; அதாவது இது மதிநுட்பம் கொண்டதாக இருக்குமா? இது அரசியல் மேதமைத் தன்மை பெற்றதாக இருக்குமா? இந்தக் கட்டத்தில் இவ்வாறு செய்வது புத்திசாலித்தனம் ஆகுமா? இதற்கு நான் அளிக்கும் பதில் அது அறிவுடமையானதாக இருக்காது. காங்கிரசுக்கும் முஸ்லீம் லீக்கிற்குமிடையே உள்ள பிரச்சினைக்கும் தீர்வுகாண மேலும் ஒரு முயற்சி மேற்கொள்ளலாம் என்று யோசனை கூறுகிறேன். ஏனென்றால் இந்த விஷயம் மிகுந்த உயிர் நாடியானது; மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; ஒருகட்சியின் கௌரவம் அல்லது மற்றொரு கட்சியின் கௌரவம் என்ற அடிப்படையில் மட்டுமே இதற்குத் தீர்வுகாண முடியாது என நிச்சயமாக நம்புகிறேன். நாடுகளின் எதிர்காலங்களை முடிவு செய்யும்போது, நபர்களின் கௌரவம், தலைவர்களின் கெளரவம், கட்சிகளின் கௌரவம் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளக்கூடாது. நாட்டின் எதிர்காலம், அதன் குறிக்கோள்தான் முற்றிலுமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப் பட வேண்டும். அரசியல் நிர்ணயசபையின் நலனுக்கு அதுதான் உகந்தது. அப்போதுதான் அது முழுமையானதாக செயல்பட முடியும். முடிவுக்கு வரும்முன் முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அது பெற முடியும்; எனவே நான் டாக்டர் ஜெயகரின் திருத்தத்தை ஆதரிக்கிறேன்; நாம் அவசரப்பட்டுச் செயல்பட்டால் எதிர்காலத்தில் என்ன நிகழும் என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.
இந்த அவையைத் தன் பிடியில் வைத்திருக்கும் காங்கிரஸ் என்ன யுத்த தந்திரத்தை என்ன செயல் தந்திரத்தை மனதில் வைத்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இந்தப் பிரச்சினைக்கு அப்பாற்பட்ட ஒருவராக இருந்து சிந்தித்துப் பார்க்கும் போது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு தரப்பு இன்னொரு தரப்பிடம் சரண் அடைந்து விடவேண்டும் – இது முதல்வழி . இரண்டு தரப்பு பேசித் தீர்வுகாண்பது இரண்டாவது வழி. வெளிப்படையான யுத்தம் என்பது மூன்றாவது வழி அரசியலமைப்புச் சட்ட அவையில் இடம்பெற்று சில உறுப்பினா்கள் பேசுவதைப் பார்க்கும் போது வெளிப்படையா யுத்தத்துக்கு அவர்கள் தயாராக இருப்பது போல் தெரிகிறது. நாட்டின் பிரச்சினைகளை யுத்தத்தின் மூலம் தீர்க்கலாம் என்று யாரேனும் நினைப்பாா்களா என நான் திகைக்கிறேன். அந்தக் கருத்தை இந்த நாட்டில் எத்தனைபேர் ஆதரிப்பார்கள் என எனக்குத் தெரியாது. யுத்தம் என்றால் பிரிட்டிஷாருக்கு எதிரான யுத்தம் என்று பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், அதனால் கணிசமானவர்கள் அதை ஆதரிக்கக்கூடும் அது பிரிட்டிஷாருக்கு எதிரான யுத்தம் மட்டுமா? இந்த அவையில் தெளிவாக நான் எடுத்துரைக்க விரும்புறேன் நாம் இப்போது எதிர் கொண்டிருக்கிற பிரச்சினை தொடர்பாக ஒரு யுத்தம் வெடித்தால் அது பிரிட்டிஷாருக்கு எதிரான யுத்தமாக இருக்காது அது முஸ்லீம்களுக்கு எதிரான யுத்தமாகவே இருக்கும் அல்லது ஒருவேளை அதைவிடவும் மோசமானதாக – பிரிட்டிஷ்காரர்கள், முஸ்லீம்கள் ஆகியோர் மீதான யுத்தமாகவும் இருக்கலாம். வரப்போதும் அந்த யுத்தம் நான் பயப்படும் விதமான யுத்தத்திலிருந்து எவ்வாறு வேறுபட்டதாக இருக்கும் என என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்வது பற்றி எட்மண்ட் (Edmond Burke) ஆற்றிய சிறப்பான உரையிலிருந்து ஒரு பகுதியை இந்த அவையில் பாடித்துக்காட்ட விரும்புகிறேன். இந்த அவையின் மனோநிலையில் அது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். தங்களுக்குத் தெரியும், கலகக் கொடியைத் தூக்கிய ஐக்கிய அமெரிக்காவின் காலனிகளை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அடக்கி அடிமைப்படுத்த பிரிட்டிஷ் மக்கள் முயற்சி செய்து கொண்டிருந்தனர். அந்தக் காலனிகளை அடக்கி ஆள வேண்டுமென்ற கருத்துக்கு எதிராக பர்க் கூறியது இதுதான்:
“முதலாவதாக படைபலத்தை உபயோகிப்பது தற்காலிகமானது மட்டுமே எனக் கூற அனுமதியுங்கள். அது ஒரு சமயத்திற்கு
பணிய வைக்கலாம்; ஆனால் மீண்டும் கீழ்ப்படிய வைப்பதற்கான அவசியத்தை அது நீக்கிவிடவில்லை தொடா்ந்து அடக்கியாளப்படும் நாடு ஆட்சி செய்யப்படுவதில்லை.
“என்னுடைய அடுத்த ஆட்சேபனை, அதன் நிச்சயமற்ற தன்மையாகும்”. பயங்கரம் எப்பொழுதும் ஆயுத பலத்தின் விளைவாக ஏற்படுவது அல்ல; ஆயுதங்கள் ஒரு வெற்றியல்ல. நீங்கள் வெற்றிபெற வில்லையெனில் உங்களுக்கு வழிமுறை இல்லாமல் போகும். சமரசம் தோற்றால் படைபலமே எஞ்சுகிறது. படைபலம் தோற்றால், சமரசத்திற்கான நம்பிக்கை போய் விடுகிறது. பலமும் அதிகாரமும் சில சமயங்களில் அன்பால் வாங்க முடிகிறது. பலஹீனமடைந்த, தோற்கடிக்கப்பட்ட பயங்கரவாதத்தால் அவற்றைப் பிச்சையாக ஒருபொழுதும் பெறமுடியாது.
“படைபலத்திற்கு மேலும் ஒரு ஆட்சேபனை இருக்கிறது. அதை பாதுகாப்பதற்கான உங்கள் முயற்சிகள் மூலமே உங்கள் லட்சியத்தை பழுதாக்குகிறீர்கள். நீங்கள் எதற்காகப் போராடினீர்களோ அது அல்ல நீங்கள் திரும்பப் பெறுவது மாறாக அது போராட்டத்தில் மதிப்பிழந்து, மூழ்கி விணாகி நாசமாகி விடுகிறது”. ஆழமான அர்த்தம் பொதிந்த இந்த வார்த்தைகளை புறக்கணிப்பது அபாயகரமானதாகும். இந்து-முஸ்லீம் பிரச்சினையைப் பலப்பிரயோகத்தின் மூலம் தீர்க்கும் திட்டம் எவர் மனதிலும் இருந்தால் இப்பிரச்சினைக்கு யுத்தம் மூலமாகத் தீர்வு காண்பது என்பதே அதற்குப் பொருள்; அதாவது அவர்கள் சம்மதம் இன்றித் தயாரிக்கப்படும் அரசியல் சாசனத்திற்கு அவர்களைச் சரணடைய வைப்பதற்காக அவர்களைக் அடிமைப்படுத்த இந்த நாடு காலா காலத்துக்கும் ஈடுபட வேண்டும். அம்மாதிரி கீழ்ப்படுத்துவது ஒரு தடவையில் முடியாது, காலம் பூராவும் நீடிக்கும். நான் எடுத்துக் கொண்ட நேரத்தை விடஅதிக நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ‘அதிகாரத்தை வழங்குவது எளிது, ஆனால் ஞானத்தை வழங்குவது தான் கடினம்’ என்று எட்மண்ட் பர்க் கூறியதை நான் நினைவுபடுத்தி உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன். இந்த அரசியலமைப்புச் சட்ட அவை தமக்கு அளிக்கப்பட்டுள்ள இறையாண்மைமிக்க அதிகாரத்தை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தும் என்பதை நாம் நமது நடத்தையின் மூலம் நிரூபிப்போம். அதன் மூலமாக மட்டுமே நாட்டின் அனைத்துத் தரப்பினரையும் நம்மோடு அழைத்துச் செல்ல முடியும் ஒற்றுமையை எட்டுவதற்கு அதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. இதில் நாம் எந்த ஐயமும் கொள்ளத் தேவையில்லை.
(1946 டிசம்பர் 10 ஆம் தேதி அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள் பற்றிய தீர்மானத்தை அரசியல் நிர்ணய சபையில் முன்மொழிந்தார். டிசம்பர் 17 ஆம் தேதி திடீரென அம்பேத்கர் பேசுவதற்கு அழைக்கப்பட்டார். அப்போது தன்னெழுச்சியாக அவர் ஆற்றிய இந்த உரையே அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் ஆற்றிய முதல் உரையாகும். நன்றி: Constituent Assembly Debates, Book No:1, Vol No: 1-IV, Pages 99-103, Loksabha Secretariat, New Delhi, 2014.
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக சீர்திருத்த வரலாற்றின் தொடர்ச்சி!


