விஜயால் ஒருபோதும் அரசியல்வாதி ஆக முடியாது. அதற்கான உழைப்போ, திட்டமோ எதுவும் அவரிடம் கிடையாது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 35 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாக இந்த கூட்டம் இருக்கும் என்றும், காவல்துறை தரப்பில் 84 நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில், அவற்றை எல்லாம் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் அரசியல் அந்திம காலம் இப்படித்தான் முடிய வேண்டும் என்று இருப்பதாக அவருடைய நண்பர்கள் வேதனைப்படுகிறார்கள்.
அதிமுகவில் புறக்கணிக்கப்பட்ட செங்கோட்டையன், திமுகவில் புறக்கணிக்கப்பட்ட நாஞ்சில் சம்பத் போன்ற அரசியல் அகதிகளானவர்களுக்கான முதியோர் இல்லம் போன்று தவெக மாறிவிட்டது. எனக்கு தெரிந்து நவீன எமனின் வாகனம் விஜய் வருகிற வாகனம் தான். அவர் பார்வையாளர்களின் உயிர்களை குடிப்பதற்காக வருகிறார். மற்ற தலைவர்களுக்கு அப்படியான நிலை இல்லை. காரணம் மற்ற தலைவர்கள் எல்லாம் கொள்கைகளை, சித்தாந்தகளை நம்பி வருகிறார்கள். ஆனால் விஜய் மட்டும்தான் திரைக்கவர்ச்சியை நம்பி வருகிறார்.

குறிப்பிட்ட உயர்சாதிக்கு மட்டும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் என்று எல்லாம் கிடைக்கும்போது, அந்த மேட்டை வெட்டி பள்ளத்தில் இருப்பவனையும் சமப்படுத்தி சம வாய்ப்பு வழங்குவதற்காக திராவிட இயக்கம் தேவைப்பட்டது. இல்லாவிட்டால் காமராஜர் போன்ற தியாகத் தலைவரை வீழ்த்த முடியுமா? மொழிப் போராட்டம் மூலமாக தான் அவரை வீழ்த்த முடிந்தது. நீங்கள் அதைவிட ஆகச் சிறந்த கொள்கைகளை சொல்லியாக வேண்டும். உலகில் ஒரு பசித்தவன் இருக்கும் வரை கம்யூனிசம் என்கிற கருத்து இருக்கும். சாதி ஒழிப்பிற்காக வாழ்நாள் முழுவதும் திருமாவளவன் பாடுகிறார்.
இப்படியான தொலைநோக்கு பார்வை விஜயிடம் என்ன உள்ளது. திமுகவை ஒழித்துவிட்டு நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிறார். அவரால் ஊழலை ஒழித்துவிட முடியுமா? விஜயால் ஜனநாயகன் பட டிக்கெட் பிளாக்கில் 2000க்கு விற்பதை தடுக்கவோ, ஆதவ் அர்ஜுனா லாட்டரி விற்பதை தடுக்கவோ முடியுமா? முறைப்படுத்தல் என்பதை உங்களிடம் இருந்துதானே தொடங்க வேண்டும்? சும்மா சர்க்கார் படத்தில் பேசிய வசனங்களை, மேடையில் வந்து பேசுவதாலோ, சினிமாவுக்கு வருகிற கூட்டம் எல்லாம் தெருவுக்கு வருவதாலோ ஒருவன் தலைவன் ஆகிவிட்டான் என்று சொல்வது அபத்தமானது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் களத்தில் திமுக, பாஜக உள்ளது. தவெக எங்கே இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொல்லக்கூடியவர்கள், திருப்பரங்குன்றத்தில் வெறுப்பு அரசியலை பரப்புகிற இடத்தில் களத்தில் ஒருவரும் இல்லை. ஒரு அறிக்கை கூட சமகாலத்தில் வருவது இல்லை. அணுக முடியாத ஒரு தலைமை. புரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாத கோட்பாடுகள். எந்த விதமாக அரசியல் அதிகாரமும் இல்லாதவர்களை, கல்வி மறுக்கப்பட்டவனை , சாமானியர்களை கரைசேர்க்க நம்முடைய தலைவர்கள் ஜீவானந்தம், காமராஜர், அண்ணா, கலைஞர் என்று மிக நீண்ட உழைப்பு உள்ளது. அதை கொண்டுசென்று சவக்குழியில் தள்ளுவதற்கு திரைக்கவர்ச்சியை காட்டி இதுமாதிரி ஒரு கூட்டம் திரிகிறது. அரசியலை வேடிக்கை காட்டுகிற வினோத திருவிழா போல காட்டுகிறது.
ஜனநாயகன் விஜயின் கடைசி படம் கிடையாது. அவர் சு.வெங்கடேசனின் வேள்பாரி கதையை கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்த கதையை சங்கர் படமாக எடுக்கப் போகிறார். வேள்பாரி திரைப்படத்திற்கான விவாதமும் ஒருபுறம் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு சினிமா நடிகர் 50 நாள் கால்ஷீட்டில் 100 கோடி சம்பாதிப்பதை தவற விடமாட்டார். விஜயை நம்பி போனவர்கள் மீண்டும் அவரை சந்திக்க முடியாது. விஜய் அரசியல்வாதியாக ஒரு காலமும் ஆக முடியாது. அதற்கு உழைப்பு, அறிவு, திட்டம் என்று எதுவும். விஜயை வைத்துக்கொண்டு ஒரு பொம்மளாட்டம் நடக்கிறது. அது பொய்யானது என்று அவரை பின்பற்றுபவர்கள் புரிந்துகொள்வார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


