மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாஜக வாக்குகள் மட்டுமின்றி தேர்தலையே திருடும் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் எச்சரித்துள்ளார்.

ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார், அதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் எதிர்வினை உள்ளிட்டவை குறித்து மூத்த பத்திரிகையாளர் நாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது :- தேர்தல் ஆணையம் நடத்தி ப்ரஸ் மீட்டை பார்க்கிறபோது இது ஒரு ஹைபிரிட் பாசிசம் போன்று உள்ளது. பாஜக தேர்தலையே திருடி வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது கடந்த 6 மாதங்களாக நடைபெறும் நிகழ்வுகளை பார்த்தால் தெரியும். எங்கு அடித்தால், எங்கு வலிக்கும் என்பது ராகுல்காந்திக்கு தெரிந்துள்ளது. பெங்களுரு மத்திய நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் எப்படி வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது என்பதை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டார். அதற்கு எந்த வித பதிலும் இல்லை.
ராகுல்காந்தியை பிரமாண பத்திரம் தாக்கல் செய்து, அதில் புகார் தெரிவிக்குமாறு சொல்கிறார்கள். ஆனால், அப்படி சட்டம் கிடையாது. 1950 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு தவறு நடந்தால் அதை சூமோட்டோவாக தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் புகார் அளிக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. ஏனென்றால் தேர்தல் ஆணையம் தான் வாக்காளர் பட்டியலை தயாரிக்கிறது. SIR என்று சொல்லி அதில் திருத்தம் மேற்கொள்வதும் ஆணையம் தான். அதில் தவறு நடைபெற்றுள்ளது என்று புகார் எழுந்தால், அதை திருத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு பொறுப்பு உள்ளது. அதில் இருந்து தேர்தல் ஆணையம் வழிதவறி செல்கிறது என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பில் தெரிகிறது.
தற்போது ராகுல்காந்தி, பீகாரில் வாக்காளர் உரிமைப் பேரணி செல்கிறார். கிட்டத்தட்ட 1,300 கிலோ மீட்டர் தொலைவுக்கு, கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் யாத்திரை செல்கிறார். இந்த யாத்திரை வெற்றிபெற்று, மக்கள் மத்தியில் பேசப்படுகிற ஒரு செய்தியாகிவிட்டது. அதன் காரணமாக தேர்தல் ஆணையம் செட்அப் செய்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறது. ஏன் செட்அப் செய்யப்பட்ட நிகழ்வு என்றால் பல நிருபர்கள் கேள்வி எழுப்பிய பின்னர், தனக்கு வசதியான கேள்விகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையர் பதில் அளிக்கிறார். அந்த ஒட்டுமொத்த செய்தியாளர் சந்திப்பு என்பது தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டுவதாக இருந்தால், பிராமண பத்திரம் தாக்கல் புகார் செய்யுங்கள். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அப்படி புகார் அளிக்காவிட்டால் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்பது தான். இதைதான் வேறு வேறு வார்த்தைகளில் சொன்னார்களே தவிர, அதை தாண்டி எந்த கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையர்கள் பதில் சொல்ல வில்லை. நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு தேர்தல் ஆணையர் பதில் சொல்ல வில்லை. பதில்கள் மீது திருப்பி கேள்விகள் எழுப்பினால் அதற்கும் பதில் அளிக்காமல் தட்டிக்கழித்துள்ளார். இப்படி ஒரு நிலைமை ஏற்படுவதற்கான காரணம் தேர்தல் கமிஷனே இன்றைக்கு பாஜகவின் கமிஷனாக இருப்பது தான்.
பீகாரில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு SIR என்றால் என்ன என்றே தெரியாது. ஆணையம் கேட்கிற பதினொரு ஆவணங்கள் குறித்தும் தெரியாது. குறிப்பாக சிறுபான்மை மக்கள், ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியின் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ள இடங்கள், ஓபிசி வாக்காளர்களை குறிவைத்துதான் இந்த SIR பணிகள் நடைபெற்றுள்ளன. இது திட்டமிட்ட மோசடி என்பதால்தான் ராகுல்காந்தி பீகாரில் பிரம்மாண்டமான யாத்திரை நடத்தியுள்ளார். அந்த யாத்திரை மக்கள் மத்தியில் வெற்றி பெற்றால் பீகாரில் என்.டி.ஏ கூட்டணி தோல்வி அடைவது உறுதி என்கிற ஒரே காரணத்திற்காக, மோடி – அமித்ஷா, ஞானேஸ்குமாரை வைத்து அவசர அவசரமாக இந்த பிரெஸ் மீட்டை கொடுத்திருக்கிறார்கள்.
வாக்கு திருட்டு விவகாரத்தில் நியாயமாக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், தேர்தல் ஆணையத்தை கலைக்க வேண்டும். மோடி, அமித்ஷா தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இடைக்கால அரசு அமைக்க வேண்டும். அல்லது புதிய தேர்தல் நடத்த வேண்டும். இனி வருகிற தேர்தல் ஆணையம் என்பது மத்திய அரசால் நியமிக்கப்படும் ஆணையமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அவர்கள் வாக்குகளை மட்டும் திருடமாட்டார்கள். தேர்தலையே திருடுவார்கள் என்பதற்கு நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒரு உதாரணமாகும்.
சிசிடிவி காட்சிகளை 45 நாட்கள் கழித்து அழிப்பதற்கு காரணம் மகாராஷ்டிராவில் கடைசி 6 மாதங்களில் ஒரு கோடி வாக்காளர்களை சேர்த்ததாகட்டும், ஹரியானா தேர்தல் மோசடியாகட்டும், பெங்களுரு தேர்தல் மோசடியாகட்டும், பரகலா பிரபாகர் சொல்வது போல கடைசி நேரத்தில் 5 கோடி வாக்காளர்களை சேர்த்ததால்தான் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இல்லாவிட்டால் இந்தியா கூட்டணி 316 இடங்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்று தேர்தலுக்கு முன்னதாகவே பரகலா பிரபாகர் தெரிவித்திருந்தார். அப்படி இருக்கும்போது சிசிடிவி காட்சிகளை தர மறுப்பதோ, டிஜிட்டல் வடிவிலான தரவுகளை வழங்க மறுப்பதோ தேர்தல் ஆணையம் பயங்கரமான தில்லு முல்லு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது என்பதை ஞானேஸ்குமாரின் செய்தியாளர் சந்திப்பு உறுதிபடுத்தி உள்ளது.
பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர், எதிர்க்கட்சி தலைவர்களின் தொகுதிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் தெரிவித்தார். ஆனால் அவரிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பவில்லை. அப்போது ராகுல்காந்திக்கு மட்டும் பிராமண பத்திரம் தாக்கல் செய்ய சொல்வது என்பது தேர்தல் ஆணையத்தின் இரட்டை வேடத்திற்கு உதாரணமாக உள்ளது.
SIR என்பதன் நோக்கம் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது. எதிர்க் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை குறைப்பது அல்லது ஒழிப்பதுதான். இதைதான் பாஜக திட்டமிட்டு செய்கிறது. பீகாரில் உள்ள தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளே பாஜகவுக்கு ஆதரவாக வாக்காளர் விண்ணப்பங்களை பதிவு செய்து, பாஜகவுக்கு வாக்குகளை கொண்டுவந்து விடுகிறார்கள். பாதிக்கப்பட போவது எதிர்க்கட்சிகள் தான். பீகாருடைய உத்தேச மக்கள் தொகை 13 கோடி. இதில் 3 கோடி முதல் 4 கோடி பேர் வரை வெளி மாநிலங்களுக்கு வேலைக்காக செல்கின்றனர். இவர்கள் தங்களுடைய வாக்குகளை உறுதிபடுத்த வெளி மாநிலங்களில் இருந்து பாட்னா சென்று, வாக்காளர் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கேயே இருந்துகொண்டு சொற்ப வருமானத்தில் வாழும் மக்களுக்கு தங்களுடைய வாக்குரிமையை மீட்பதற்கான வழி உள்ளதா? அப்போது வாக்காளர்களை சரிபார்க்க தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள 15 நாள் அவகாசத்தில் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது உண்மைதான்.
ராகுல்காந்தி வாக்கு திருட்டை மக்களிடம் எடுத்துச்சென்றதால் தான், உச்சநீதிமன்றம் ஆதாரை ஒரு அடையாளமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. மக்கள் மன்றத்திற்கு போவதன் மூலமாக பீகாரில் உள்ள திருடப்படாத வாக்களர்களின் மத்தியில், பாஜகவின் ஜனநாயக விரோத போக்கை எடுத்துச் சொல்வதற்வான ஒரு வாய்ப்பு ஏற்படுள்ளது. தற்போதைக்கு தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு வைத்து வாக்குகளை திருடியது என்று குற்றம்சாட்டுகிறோம். அடுத்த கட்டமாக இந்த கூட்டணி தான் 2024 மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடித்தது என்பதை நோக்கி நகர வேண்டும். மத்திய அமெரிக்க நாடுகளை போல, இந்தியா ஒரு வாழைப்பழ ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு தேர்தல் ஆணையம் – பாஜகவின் தில்லு முல்லுகள் ஒரு சாட்சியாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.