spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமாநாடு மொத்தமா டேமேஜ்! கதறிய தவெக தொண்டர்கள்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

மாநாடு மொத்தமா டேமேஜ்! கதறிய தவெக தொண்டர்கள்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

-

- Advertisement -

திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று சொல்வதன் மூலம் விஜய், அதிமுக மற்றும் சீமானின் வாக்குகளை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில மாநாடு குறித்தும், இதில் விஜய் முன்வைத்துள்ள கருத்துக்கள் தொடர்பாகவும், மூத்த பத்திரிகையாளர் நாதன், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- உலகத்திலேயே தன்னை தானே புகழ்ந்து கொள்கிற ஒரு தலைவனாக விஜய் இருக்கிறார்.  அது அவருக்கு அருவருப்பாகவோ, கூச்சமாகவோ தோன்றவில்லை. விஜய் தன்னுடைய சினிமா பிரபலத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் வாக்குகளை வாங்கிவிடலாம் என்று மலிவாக நினைக்கிறார். அதுதான் பிரச்சினைக்கு உரியதாகும். ஒரு மாநாடு என்றால் கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பேச்சாளர்கள் என பன்முகத் தன்மை கொண்ட நிகழ்வாகும். அதை இன்ஸ்டா ரீல்ஸ் போலவும், யூடியூப் ஷாட்ஸ் போலவும் பேசுவதே போதுமானது என்று விஜய் நினைக்கிறார்.

அரசியல் கட்சி மாநாட்டில் தலைவரிடம் போகக்கூடாது என்பதற்காக கிரீஸ் டப்பா வாங்கி வைத்திருப்பது விஜய் கட்சி மட்டும் தான். விஜய் கட்சி தொடங்கி 2 வருடங்கள் ஆனாலும், மற்ற கட்சிகளில் பெரிய நிலைக்கு வர முடியாத தொழில்முறை அரசியல்வாதிகள் யாரும் அவருடைய கட்சியில் வந்து சேரவில்லை. அப்படி அவர்கள் வந்து சேர்ந்தால் மட்டும்தான் கட்சி நிர்வாகத்தை செய்ய முடியும். அப்படி அவர்கள் வந்து சேராமல் இருப்பதற்கு காரணம் விஜய், தேர்தலில் வெல்லக்கூடியவர் என்கிற நம்பிக்கை திமுக, அதிமுகவில் உள்ளவர்களுக்கு ஏற்படவில்லை.

தமிழக வெற்றிக்கழம் மாநாட்டில் பேசியதை விரித்து 30 நிமிடத்திற்கு விஜய் பேசியுள்ளார். தன்னுடைய பேச்சில் அதிமுகவுக்கு அவர் குறிவைக்கிறார். மற்றொருபுறம் திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். இதன் மூலம் தன்னுடைய இமேஜை முதலீடாக வைத்துக்கொண்டு, அதிமுக மற்றும் சீமானின் வாக்குகளை வாங்கி விடலாம் என்று நினைக்கிறார். மேல் இருந்து கீழே இறங்கி வருவது பண்ணையார் மனநிலையாகும். அதைதான் விஜய் செய்கிறார். தொண்டர்கள் வெயிலில் வாடுகிற நிலையில், கேரவனின் சொகுசு வசதிகளை இழந்துவிட்டு மற்ற தலைவர்களை போல சாதாரணமாக நடந்துகொள்வது விஜயால் முடியவில்லை என்பதை இந்த மாநாடு நிரூபித்துள்ளது. மாநாட்டில் அதிமுகவை குறிவைத்து பேசுவதன் மூலம் அதிமுக வாக்குகளை கவர்ந்துவிடலாம் என்று விஜய் நினைக்கிறார்.

என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்நிலையில், விஜய் ஒரு ஸ்பாய்லராக வந்துவிடுவார் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். அதனால் தான் இந்த நிமிடம் வரை பாஜக தலைவர்கள் விஜயை கடுமையாக விமர்சிக்கவில்லை. அவரை எப்படியாவது சமரசம் செய்து கூட்டணிக்கு கொண்டுவந்து விடலாம் என்பதால்தான் இதுவரை அமைதியுடன் இருந்தனர். தமிழ்நாட்டின் அரசியல் நிலை என்பது திமுகவை யார் கடுமையாக எதிர்ப்பது என்கிற நிலையை விஜய் ஏற்படுத்திவிட்டார். அதனால் பாஜக, சீமான், எடப்பாடி என்று கடுமையாக விமர்சிக்கும் நிலையில், அந்த போட்டியில் தற்போது விஜயும் இணைந்துள்ளார். இது என்.டி.ஏ கூட்டணிக்கு வருத்தம் அளிக்கும் விஷயமாகும்.

திமுக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்வதில் நான்தான் முன்னணியில் உள்ளேன் என்று விஜய் சொல்கிறார். திமுகவை விமர்சிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்ற சூழலில், ஆனால் சந்தர்ப்பவாதமாகும், மற்றவர்கள் பேசுவதை போலவும் பொதுவான குற்றச்சாட்டுகளை தான் பேசுகிறார். மக்கள் பார்வையில் பார்க்கும்போது, எடப்பாடி, சீமான், அண்ணாமலை போன்றவர்கள் பேசாததையா பேசுகிறார். விஜய் அரசியல் புரிதல் அற்ற வாக்காளர்களை நோக்கி தான் பேசுகிறார். அவர்களுடைய வாக்குகளை தனது கட்சிக்கு கொண்டுவர முடியுமா? என்பதற்காகவே மேலோட்டமாக பேசுகிறார்.

அதிலும் சந்தர்ப்பவாதமாக ஸ்னோலினின் தாயார், தன்னை ஸ்னோலினுக்கு தாய்மாமன் என்று சொன்னார்.  எனவே எல்லா சகோதரிகளுக்கும் நான் தாய்மாமன் என்று சொல்கிறார். ஸ்னோலினை அப்படி சுடப்பட்டது எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் தான். ஸ்னோலின் குறித்து பேசுவதாக இருந்தால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்தும், பாஜக – அதிமுக வேதாந்தாவை பாதுகாக்க என்ன செய்தார்கள் என்பது குறித்தும் பேசி இருக்க வேண்டும். ஆனால் அதை எல்லாம் மறைத்துவிட்டு சென்டிமெண்டாக விஜய் பேசுகிறார்.

பிரதமர் குறித்து விஜய் பேசுகிறபோது மாண்புமிகு பிரதமர், மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்றெல்லாம் பேசுகிறார். தன்னுடைய கோரிக்கைகளை ஒரு மன்றாடல் சாயலில் வைக்கிறார். ஆனால் ஸ்டாலினை அங்கிள் ஸ்டாலின் என்று கிண்டல் செய்கிறார். ஒரு அரசியல் தலைவரை மற்றொரு அரசியல் தலைவர் அங்கிள் என்று பேசுவது நாகரிகமற்ற, முதிர்ச்சி அற்ற பேச்சாகும். தற்போதைய சூழலில் பாஜகவை எதிர்ப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால் விஜய், பாஜகவை எதிர்த்து பேசுவதற்கு பஞ்ச் டயலாகுகளை கூட பேச பயமிருக்கிறது. அப்போது எப்படி அவர் தன்னுடைய கொள்கை எதிரியை எதிர்க்க முடியும்?

மதுரை மாநாட்டில் விஜய்-ன் மொத்த பேச்சு என்பது, தனது பிரபலத்தை ஒரு முதலீடாக வைத்துக்கொண்டு தமிழக முதலமைச்சராக ஆக முடியுமா? என்பதுதான். அதற்க 2 பாட்டு, ஒரு ரேம்ப் வாக், பன்ச் டயலாகுகள் போதும் என்று நினைக்கிறார். ஆடியோ லான்ச் போன்று ஒரு அரசியல் மாநாட்டை நடத்துகிறபோது, அந்த தொண்டர்கள் அரசியல்வயப் படுத்தப்பட மாட்டார்கள் என்று சொல்வதுடன், எந்த காலத்திலும் அரசியலை புரிந்துகொள்ள முடியாத சுயப்புகழ் பாடுகிற தலைவனின் பின்னால் செல்வார்கள். விஜய் என்கிற பிம்பத்தை மட்டுமே நிறுத்த வேண்டும் என்று ஆதவ் அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன் போன்றவர்கள் கூச்சமே இன்றி வரிக்கு வரி விஜயை பாராட்டுகிறார்கள்.

2026 சட்டமன்றத் தேர்தலானது, 1967 மற்றும் 1977 தேர்தலை போன்று அரசியல் மாற்றம் வரும் என்று விஜய் சொல்கிறார். அண்ணாவும், கலைரும் தங்களுடைய சொந்த பணத்தை போட்டா திமுக என்கிற கட்சியை உருவாக்கினார்கள். காங்கிரசினுடைய வேட்பாளர்களான மிட்டா, மிராசுதார்களை எதிர்த்து சாதாரண மக்களை தான் வேட்பாளர்களாக நிறுத்தினார்கள். தொடக்க காலங்களில்  பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்துதான் திமுக வெற்றி பெற்றது. இன்றைக்கு நிலைமை வேறாக இருக்கலாம். ஆனால் விஜய் அரசியலுக்கு வரும்போதோ தன்னுடைய கை காசை போட்டு, நிகழ்ச்சிகளை நடத்துகிறீர்கள். உங்களை நீங்களே பாராட்டி கொள்கிறீர்கள். அதை பாட்டாகவும், வீடியோவாகவும் போடுகிறீர்கள். அப்போது இந்த கட்சிக்கு என்ன வரலாற்று தேவை இருக்கிறது? இன்றைய வரலாற்று சூழலில் தவெக-வின் தேவை என்பது பூஜியமாகும். இதுதான் அதற்கு பதிலாக இருக்க முடியும். கொள்கை எதிரி என்கிற பாஜகவையும் இவர்கள் எதிர்க்கவில்லை. அவர்களுக்கு எதிராக போராட்டத்தையும் நடத்தவில்லை. அல்லது சீமானை போலவோ எடப்பாடியை போலவோ மக்கள் மத்தியில் சென்று வேலை பார்க்க வில்லை.

விஜய், கேரவனில் இருந்துகொண்டு வருஷத்துக்கு இரண்டு  மூன்று முறை மட்டும் வந்து தலையைகாட்டிவிட்டு, 20 நிமிஷம் பேசிவிட்டு போனால், உங்கள் கட்சிக்கு தமிழக வரலாற்றில் இடமே இல்லை என்பதுதான் செய்தி. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நினைக்கிற அவருடைய நம்பிக்கை மிகவும் அபாயகரமானதாகும். அரசியலில் எந்த கட்சியையும் விரும்பாத பிரிவினர் என்று உள்ளனர். அந்த பிரிவை குறிவைத்துதான் விஜய் வேலை செய்கிறார். ஆனால் அந்த அரசியல் அற்றவர்களின் பிரிவு குறைந்துகொண்டே வருகிறது. அதனால் விஜய் கொஞ்ச நேரம் அரசியல் பேசிவிட்டு, அவர்களின் வாக்குகளை பெற்றுவிடலாம் என ரொம்ப நேரம் யோசிக்கிறார்கள். அவர்களுடைய பேரசாசை பெரு நஷ்டத்தில் தான் சென்று முடியும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ