தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக பேசினால்தான் வாக்கு கிடைக்கும் என்பதை விஜய் சரியாக புரிந்துகொண்டுள்ளார். அதனால் பாஜக எதிர்ப்பை மதுரை மாநாட்டில் வெளிப்படுத்தி உள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


தவெக மாநாட்டில் விஜய் நிகழ்த்தி உரை குறித்தும், அவர் திமுக பாஜக மீது முன்வைத்த விமர்சனங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- மதுரை தவெக மாநாட்டில் விஜய் பேசிய ஸ்க்ரிப்ட்டை எழுதி கொடுத்தவர் ஒரு திரைப்பட இயக்குநர் ஆவார். ரமணகிரி வாசன், அவர் விஜய்க்கு ஒரு படம் செய்துள்ளார். தொலைக்காட்சி சீரியல்களுக்கும் எழுதி வருகிறார். அங்கிள்… ஸ்டாலின் அங்கிள்… என்பது அவருடைய எழுத்துதான். விஜய் ஒரு சிறந்த நடிகர். அவருடை வசன உச்சரிப்பு எப்படி இருக்கும் என்பது அந்த படத்தின் வெற்றியில் இருந்தே தெரியும். அந்த டயலாக் டெலிவரியின் அனைத்து முயற்சிகளையும் மதுரை மாநாட்டில் விஜய் மேற்கொண்டார். 30- 35 நிமிட பேச்சு. நாங்கள் எதிர்பார்த்தது அவர் 40 நிமிடங்கள் பேசுவார் என்று. இது எழுதித்தரப்பட்டது.
நிர்மல்குமார், தூய்மை பணியாளர் பிரச்சினைகளை எல்லாம் தொடுகிறார். ஆனால் விஜயால் அதை தொட முடியவில்லை. தற்போது நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வாக்கு திருட்டு விவகாரம். அதை விஜயால் தொடக்கூட முடியவில்லை. அதனால் கச்சத்தீவை மீட்டுக்கொடுங்கள். நீட்டை ரத்து செய்யுங்கள் என்று சொல்கிறார். மாநில அரசு மீதும் பொதுவான குற்றச்சாட்டுகளையே முன்வைத்தார். தூய்மைப் பணியாளர் விவகாரத்தை விஜய் கையில் எடுத்திருந்தால் திருமாவளவனையும், திமுக அரசையும் பிரச்சினைக்கு உள்ளாக்கி இருக்கலாம். தூய்மை பணியாளர்கள் அவரை வீடு தேடி சென்று பார்த்துவிட்டு வந்தபோதும், அவர் அந்த விவகாரத்தை கையில் எடுக்கவில்லை.

மதுரை தவெக மாநாட்டில் விஜய் குறித்து வந்த சந்தேகங்களுக்கு பதில் சொல்லியுள்ளார். அவர் முதன்முறையாக அதிமுகவை தொட்டார். எம்ஜிஆரின் புகழை எடுத்துச்சொன்னார். அது அதிமுகவினர் கூட செய்யாத விஷயமாகும். அங்கிள் என்று ஸ்டாலினை கூப்பிட்டார். ஆனால் ஆன்டி என்று ஜெயலலிதாவை கூப்பிடவில்லை. ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் தொடவே மாட்டார். ஏனென்றால் அவர் பட்ட அடி அப்படியானது. இந்த மாநாட்டில் விஜய் சீமானை தாக்கி பேசவே இல்லை. மாநாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் சீமானை எதிர்த்து முழக்கங்களை எழுப்பினார்கள். ஆனால் அதை விஜய் எதிரொலிக்கவில்லை.
அவரது பேச்சின் மூலம் இஸ்லாமியர்களை குறிவைக்கிறார். அதிமுக வாக்குகளை கைப்பற்ற முயற்சித்தார். பாஜக எதிர்ப்பை முன்வைக்கிறார். இங்கே பாஜகவுக்கு எதிராக பேசினால் தான் வாக்கு. அதை விஜய் நன்றாக புரிந்துகொண்டார். அவர் திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார். மதுரை மாநாட்டிற்கு அதிகபட்சமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் வந்திருக்கலாம். மாநாட்டிற்கு ஒவ்வொரு ஊரில் இருந்தும் வேன் வைத்து கொடுத்தது தவெக தலைமை கழகமாகும். விஜயின் பேச்சு என்பது ஒரு வலிமையான பேச்சாகும். வழக்கமாக 3 நிமிஷம் நடிக்கக்கூடிய ஒரு நடிகரை, 30 நிமிஷங்கள் நடிக்க வைத்துள்ளனர்.

திமுகவின் நிலைப்பாடு என்பது விஜய் குறித்து பேச வேண்டாம் என்பது. இவ்வளவு நாளாக அதிமுகவின் நிலைப்பாடு என்பது விஜயை நல்லவர். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். நேற்று எடப்பாடி பழனிசாமி, ரிட்டையர் ஆனவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டார்கள் என்று சொல்லி விட்டார். கலைஞர் மறைவுக்கு பிறகு, கலைஞர் எதிர்ப்பு என்பது தற்போது குறைந்துவிட்டது. திமுக எதிர்ப்பு என்பது குறைவாகவே இருக்கிறது. எம்ஜிஆர் நடந்தது கலைஞர் எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் வாக்கு வங்கியில் தான். அதில் தான் அவர் வெற்றி பெற்றார்.
கலைஞர் என்கிற ஜாம்பவானை எதிர்த்து எம்ஜிஆர் பல மணிநேரம் உழைத்தார். எம்.ஜி.ஆரின் தொண்டன் என்றால், அவன் அதிமுக தொண்டர் தான். தவெகவுக்குள் இருந்துகொண்டு எம்ஜிஆரின் பக்தனாக ஒருவர் இருக்க முடியாது. எனவே விஜய் விரித்த வலையில் மீன் சிக்காது. ஊழல் மிக்க அதிமுக, பாஜக உடன் கூட்டணி சேர்ந்துள்ளதாக விஜய் சொல்கிறார். அவர் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் எப்படியாவது விஜய் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பு தற்போதும் உள்ளது.

தவெக உடன் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியில் பங்கு என்று விஜய் சொல்கிறார். விஐயின் முதல் ஸ்டாண்ட் என்பது தான் திமுக போன்றும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் எல்லாம் தன்னுடன் இருக்க வேண்டும் என்று சொன்னார். தற்போது அவர் தன்னை அதிமுகவாக மாற்றிக் கொண்டிருக்கிறார். தன்னிடம் எம்ஜிஆர், அண்ணா போன்றவர்கள் உள்ளனர். எனவே தனக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்று சொல்கிறார். கூட்டணி குறித்து கேட்டால் அது சஸ்பென்ஸ் என்று சொல்கிறார். சஸ்பென்சில் தற்போதைக்கு இருக்கின்ற ஒரே கட்சி பாமகதான். தேமுதிகவையும் கூட சேர்த்துக்கொள்கிறார்.
விஜயகாந்திற்கு பேசுவதற்கு என்று ஒரு ஸ்டைல் இருந்தது. அவர் தற்போதைய அரசியல் பிரச்சினைகள் அனைத்தையும் பேசுவார். அவர் அரசியல் செய்த எதிரிகள் கலைஞர், ஜெயலலிதா. அதற்குள்ளாக தான் அவர் வந்தார். எல்லோரும் சொல்வது போல ஒருவேளை ஒரு சில வாரங்களுக்கு முன்னதாக ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து, அதை ஒருவாரம் ஒத்திகை பார்த்ததால் தான் தற்போதைய பிரச்சினைகளை விஜய் பேச முடியாமல் போய் இருக்கலாம். அதனால் தான் இதுவரை அவர் பத்திரிகையாளர் சந்திப்புகளையே நடத்தவில்லை. ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு விஜய் தயாராக இல்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்..


