முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அங்கிள் என்று விஜய் சொன்னது மிகவும் தவறானது. அவரால் ஜெயலலிதாவை ஆன்டி என்று சொல்ல முடியுமா? என மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழக மாநாடு, விஜயின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு வந்தவர்கள் நுறு சதவீதம் தன்னெழுச்சியாக தான் வந்திருந்தனர். ஆனால் இந்த மாநாட்டில் எந்த விதமான அரசியல் செய்தியும் சொல்லப்படவில்லை. திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்கிறார். இது அனைத்துக்கட்சிகளும் முன்வைக்கும் குற்றச்சாட்டுதான். நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம்? என்று சொல்ல வேண்டும். விஜயை ஏன் முதலமைச்சர் ஆக்க வேண்டும்? பொதுமக்கள் இன்றைக்கு ஊழலை சகித்துக்கொள்கிறார்கள். அவர்களே பணம் வாங்கிக்கொண்டு தான் வாக்களிக்கிறார்கள். அதையும் தாண்டி வெற்றி தோல்வி உள்ளன. வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரத்தில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான உடனேயே பி.எல்.ஏ-க்கள் அதனை சரிபார்ப்பார்கள். ஆனால் இன்றைக்கு அரசியல் கட்சிகள் கீழ்மட்டத்தில் வளர்த்து எடுக்கவில்லை. வியூக நிபுணர்களை நியமித்து, பேஸ்புக், டிவிட்டரில் பேசினாலேயே கட்சி வளர்ந்துவிடும் என்று நினைக்கிறார்கள். நம்முடைய அரசியல் தொண்டர்களை அடிப்படையாக கொண்டிருப்பதற்கு பதிலான தலைவர்களை அடிப்படையாக கொண்டதாக மாறிவருகிறது.
மாநாட்டில் விஜய் என்ன செய்தியை விடுத்துள்ளார்? விஜயை விட்டால் தமிழ்நாட்டை காப்பாற்ற ஆளே இல்லை. விஜய் தலைமையில் ஆட்சி அமையந்தால்தான் தமிழ்நாட்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். இது தொண்டர்களை அடிப்படையான கட்சி கிடையாது. தலைவரை அடிப்படையாக கொண்ட கட்சியாகும். அவரே சொல்கிறார் 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக அர்த்தம் என்று சொல்கிறார். இது எம்ஜிஆர் சொன்னதுதான். தொண்டர்கள் அடிப்படையிலான கட்சி என்பது திமுக தான். 13 வருடங்கள் தோல்வியை சந்தித்தபோதும் கலைஞர் கட்சியை நடத்திக் கொண்டிருந்தார். விஜய், கலைஞரை போன்று அடிமட்ட தொண்டர்களுடன் நெருங்கிப் பழகும் தலைவராக வந்திருந்தால், அவரை மாற்று என்று சொல்லலாம். மதுரை மாநாட்டிற்கு தன்னெழுச்சியாக 3 லட்சம் பேர் வந்தார்கள். அதை தொலைக்காட்சிகள் மூலம் பார்த்து 7 முதல் 8 லட்சம் பேர் விஜய் ஆதரவு மனநிலைக்கு போய் இருப்பார்கள். 10 முதல் 15 லட்சம் வாக்காளர்கள், 234 தொகுதிகளில் விஜய்க்கு உள்ளனர். இவர்களால் ஒருவருக்கு தலா 3 லட்சம் வாக்குகளை சேகரிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும் அதிகபட்சம் 50 லட்சம் ஓட்டுகள் சாத்தியம்.
தமிழ்நாட்டில் 6 கோடி வாக்காளர்களில் 4.5 கோடி பேர் தான் வாக்களிப்பார்கள். அது மொத்தமாக 10 சதவீதம் வாக்குகள் தான் வரும். எனவே எதுவாக இருந்தாலும் 10 முதல் 15 சதவீதம் தான். அதில் சீமானும் இருக்கிறார். சீமான் அரசியலுக்கு வந்தபோது அவரை நடுத்தர வர்க்கத்தினர் ஆதரித்தனர். தங்கள் பிள்ளைகள் முதன் முறையாக வாக்களிக்க சென்றபோது சீமானுக்கு போட சொன்னார்கள். அப்படிதான் நாதக 8 சதவீத வாக்குகளை பெற்றது. இம்முறை முதல் தலைமுறையினரின் வாக்குகள் விஜய்க்கு தான் வரும். அப்படி வந்தாலும் கணக்கீடு இவ்வளவு தான் வரும். அப்போது எப்படி விஜயால் ஆட்சியை பிடிக்க முடியும். வாய்ப்பு என்பது ஒரு கூட்டணி கட்சியில் சேர்வதாகும். ஆனால் சினிமா நட்சத்திரங்களுக்கு உள்ள இயல்பான ஈகோ அவர்களை கூட்டணி சேர விடாது. அதனால்தான் குதிரையில் ஏறாவிட்டாலும் பரவாயில்லை. கழுதையில் ஏறுகிற மனோபாவம்.
மதுரை மாநாட்டில் பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டு, பாஜகவை விஜய் விமர்சித்துள்ளார். இதன் மூலம் பாஜக எதிர்ப்பாளர்கள் அனைவரும் விஜய்க்கு வாக்களிப்பார்களா? பாஜக எதிர்ப்பு கருத்துடைய கட்சிகள் நிறைய உள்ளன. அதில் திமுக முன்னணியில் இருக்கிறது. விஜயின் கருத்து பாஜக எதிர்ப்புணர்வு வளர பயன்படும். அந்த அறுவடை விஜய்க்கு கிடைக்குமா? திமுக அதிர்ப்தியை சம்பாதித்து வைத்திருந்தால், எதிர்ப்பு வாக்குகள் எல்லாம் அதிமுகவுக்கு தான் கிடைக்க வேண்டும். ஆனால் அதை விஜய்தான் தடுக்கிறார். காரணம் அவர் பாஜகவையும் சேர்த்து விமர்சனம் செய்கிறார். அதிமுக – பாஜக கூட்டணி என்பதால், அது நெகட்டிவ் வாக்குகளில் செல்கிறது. அந்த வாக்குகள் தனக்கு வரும் என்று விஜய் நினைக்கிறார். அப்படி வர வேண்டும் என்றால் வாக்குச்சாவடி முகவர்கள் மட்டத்தில் கட்சி வலிமையாக இருக்க வேண்டும். வெறுமனே கூட்டம் வருவதால் மட்டும் கட்சி வலிமையாகாது. இடைத்தேர்தல்களிலேயே போட்டியிடாமல் நேரடியாக ஆளுங்கட்சியாக வர வேண்டும் என்று நினைக்கும் ஒருவர், ஒரு மாநாட்டினாலோ, ஒரு மாநாட்டு செய்தியினாலோ ஆளுங்கட்சியாக ஆக முடியுமா? ஒவ்வொரு கட்சிக்கும் வாக்காளர்கள் என்று இருக்கிறார்கள். அப்படி தவெகவுக்கு வாக்காளர்கள் யார்? அது தெரியாததால்தான் அவர் குழப்பமான சிக்னல்களை விடுகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விஜய் ஸ்டாலின் அங்கிள் என்று சொல்கிறார். இது சரியான விஷயம் கிடையாது. அப்போது நீங்கள் ஜெயலலிதாவை ஆன்டி என்று சொல்வீர்களா? அம்மா என்பதுதானே பிராண்ட். அது அந்த கட்சியை பிராண்ட் செய்தது. அப்போது ஸ்டாலின் என்ன பிராண்டுக்குள் வர முடியும். தற்போது விஜயே தாய்மாமன் பிராண்டுக்குள் வருகிறார் அல்லவா? அப்படி இருக்கையில் எப்படி அங்கிள் என்கிற பிராண்டை மலினப்படுத்தி பேச முடியும்? அது தவறானது. அவருக்கு யார் எழுதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இது தேவையற்ற சர்ச்சையாகும். ஸ்டாலினை அங்கிள் என்று சொன்னதன் மூலம் அவருடைய எதிர்ப்பாளர்கள் எல்லாம் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்த்தால் அது அறியாமையாகும். காமராஜரை தோற்கடித்தது அரசியல்வாதி அல்ல. காமராஜரை தோற்கடித்தது ஒரு மாணவர். அவர்தான் விருதுநகர் பெ.சீனிவாசன். அவர் இந்தி எதிர்ப்பு தளகர்த்தர்களில் ஒருவர். காமராஜரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த அண்ணா விரும்பவில்லை. விருதுநகரில் வலிமையான ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர் காமராஜர். அங்குள்ள மற்றொரு வலிமையான சமுதாயத்தை சேர்ந்த பெ.சீனிவாசனை நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்று மாணவர்கள் முடிவு செய்தோம். நாங்கள் தான் வாக்கு சேகரித்தோம். திமுக அவரை ஆதரித்தது. அவர் சுயேட்சை போன்றுதான் நின்றார். அதற்கு பிறகுதான் அவர் திமுகவுக்கு வந்தார்.
விஜய் சொல்கிற உதாரணப்படி 1977 சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவியது. நான்காவது முனையில் இருந்த கட்சிக்கு 10 இடங்கள் கிடைத்தது. ஆனால் அந்த கட்சி கிட்டத்தட்ட 16-17 சதவீத வாக்குகளை வாங்கி இருந்தது. அப்போது விஜய் 10 சதவீத வாக்குகளை வாங்கினார் என்றால் விஜயகாந்தை போன்று ஒரு இடம்தான் கிடைக்கும். 10 -15 சதவீத வாக்குகளாக மாறினால்தான் சில இடங்களில் வெற்றி கிடைக்கும். ஆனால் அவை எல்லாம் திமுகவுக்குதான் லாபமாக முடியும். எனவே விஜய் திமுகவின் வெற்றிக்காக தான் வேலை செய்கிறார். இதில் உதயநிதிக்கு வேண்டுமானால் ஒரு அச்சம் இருக்கலாம். காரணம் விஜய் அளவுக்கான ஈர்ப்பை அவரால் உருவாக்க முடியாமல் போகலாம். உதயநிதியும் சினிமா நட்சத்திரமாக இருந்து, அரசியலுக்கு வந்தவர். ஆனால் தன்னிச்சையாக கூடுகிற கூட்டம், அது முக்கியமாகும். அது உதயநிதிக்கு கிடைக்காது. அப்போது உதயநிதிக்கான அரசியல் போட்டியாக விஜய் எதிர்காலத்தில் வருவார் என்கிற அச்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அப்போது விஜயின் இலக்கு என்பது உதயநிதியாக கூட இருக்கலாம். ஏனென்றால் ஒரு 10 ஆண்டுகளுக்கு பிறகு யார் யார் எல்லாம் களத்தில் நீடிப்பார்கள் என்று தெரியவில்லை. உதயநிதி, அண்ணாமலை, சீமான், விஜய் போன்றவர்கள்தான் இருப்பார்கள். அப்போது விஜயின் கட்சி இதேபோன்ற வலிமையோடும், வனப்போடும், ஈர்ப்போடும் இருக்கும் என்றால், அதற்கான எதிர்காலம் வரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.