பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை சந்திக்கும். பாஜக பின்னிய சதிவலையில் அவர்களே சிக்குவார்கள் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷநவாஸ், யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர், அமைச்சர்கள் 30 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்தால் அவர்களுடைய பதவியை பறிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. பாஜக மிகப்பெரிய அளவிலான தோல்வியில் இருக்கிறது. மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளதன் வெளிப்பாடு இது. தற்போது உள்ள சட்டங்கள் மற்றும் புலனாய்வு அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சிகளை அவர்களால் வெல்ல முடியவில்லை என்பதைதான் மத்திய அரசே ஒப்புக்கொள்வதுதான் இந்த சட்டத்திருத்தம். பாஜக என்ன நினைக்கிறதோ அதை தான் அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் போன்ற அமைப்புகள் செய்கின்றனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக அண்ணாமலை சொன்னார். மறுநாள் அமலாக்கத்துறை அதையே சொல்கிறது. ஆயிரம் கோடி ஊழல் கெஜ்ரிவால் போன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறைக்கு போக போகிறார் என்றார்கள். ஆனால் என்ன ஆனது? கடைசியில் ஈடி நீதிமன்றத்தில் எப்படி மாட்டினார்கள்? இன்றைக்கு டாஸ்மாக் வழக்கில் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் கிடிக்கிப்பிடி பிடித்துள்ளது.
பாஜக ஏற்கனவே இருக்கின்ற சட்டத்தை பயன்படுத்தி, அவர்கள் மீது விசாரணை நடத்தவில்லை. மேலும் அவர்களுடன் யார் கூட்டணி சேர வேண்டும் என்று நினைத்தார்களோ அவர்கள் மீது விசாரணை நடத்தினார்கள். அஜித் பவாரின் ஆயிரம் கோடி சொத்துகளை முடக்கினார்கள். தற்போது அவர் என்னவாக இருக்கிறார்? சசிகலா தொடர்புடைய 100 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. தற்போது அது என்ன ஆனது? டிடிவி தினகரனை டெல்லி திகார் சிறையில் அடைத்தார்கள். தற்போது அவர் எங்கே இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. தற்போது அவர் யாருடன் கூட்டணி சென்றிருக்கிறார்? பாஜகவுக்கு வேண்டிய வேலைகள் நடைபெறுவதற்காக சோதனையை செய்தீர்கள். ஏற்கனவே இருந்த சட்டத்தின்படி இந்த வேலைகளை தான் செய்தீர்கள். இனி புதிதாக ஒரு சட்டத்தை கொண்டுவந்து, எந்த பாஜக முதலமைச்சரை நீங்கள் விசாரிப்பீர்கள்? எந்த பாஜக முதலமைச்சரை நீங்கள் 30 நாள் சிறையில் வைப்பீர்கள்? செந்தில்பாலாஜியை போன்று ஒரு வழக்கில் முதலமைச்சரை அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் வைக்கிறார்கள் என்றால், 30 நாள் கழித்து அவருக்கு பதவி போய்விடும். நீதிமன்றத்தில் ஒரு வருடம் விசாரணை நடைபெற்று அவர் விடுதலையாகிறார் என்று வைத்துக்கொண்டால், அவர் பதவி போனதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் போன்றவர்களின் பதவிக்கூட பறிக்கப்படும். அவர்கள் இருவரது ஆதரவில் தான் மோடியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏன் அதற்காக கூட இந்த சட்டம் கொண்டுவரப் பட்டிருக்கக்கூடாது.
அவர்கள் கூட்டணிக்கு எதாவது ஒரு முரண்பாடு வந்து, இதியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தால், மத்தியில் இந்தியா கூட்டணி வந்துவிடும். இரு கூட்டணிகளிலும் சம அளவிலான எம்.பி.க்கள் உள்ளனர். அப்போது நிதிஷ், சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் அந்த பக்கம் போகாமல் இருப்பதற்கும், இதை காண்பித்து மிரட்டுவதற்கும், இந்த பதவி பறிப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கலாம். இதை அப்படிதான் பயன்படுத்த முடியும். ஏற்கனவே பொடாவை கொண்டுவந்தார்கள். அதை ஆதரித்தவர்கள் எல்லாம் அதற்குள்ளாக போனார்களா? இல்லையா? அரசியல் எதிரிகளை அழிப்பதற்காக அந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இன்றைக்கு ஒரு மாநகராட்சி அளவுக்கு சட்டமன்றத்தின் அதிகாரத்தை மாற்றிவிட்டார்கள். சட்டம், ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது முதலமைச்சர் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பொறுப்பு ஆகும். இன்றைக்கு ஒரு கொலை நடைபெற்றாலும் என்ஐஏ வந்து விசாரிக்கிறது. இதில் எங்கே இருக்கிறது அதிகாரம்? வரி வசூலிக்கும் அதிகாரத்தை ஜிஎஸ்டி வரியை கொண்டுவந்து பறித்துவிட்டார்கள். சட்டத்தை, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது பாஜக தான். 2ஜி வழக்கு உள்பட எதிர்க்கட்சிகள் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வெளியே வருகிறார்கள்.
தற்போதுள்ள நடைமுறைகளின்படி அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களை சிறையில் வைத்திருக்க முடியவில்லை. டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு அமலாக்கத்துறையால் பதில் அளிக்க முடியவில்லை. பாஜக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிட்டதால், புதிதாக சட்டத்தை போடுகிறார்கள். சிறையில் 30 நாட்கள் இருந்தால் போதும். பதவியை பறித்துவிட்டு, நாம் நினைத்ததை எல்லாம் நடத்திவிட்டு போகலாம். இந்த சட்டம் வந்த பிறகு பாஜக தாங்கள் நினைக்கும் வேலையை நடத்த எல்லோரையு மிரட்டலாம். அவர்களுக்கு எதிர்நிலையில் உள்ள கட்சிகளையும் மிரட்டவும் கூடும். இதனால் பாஜகவை எதிர்க்கக்கூடிய கட்சிகள் கூட அவர்களுக்கு பணிந்து போக வேண்டிய நிலை ஏற்படும். அப்போது இந்த சட்டத்திருத்தம் சீர்திருத்தமா? அல்லது சீரழிவா? இது ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளுகிற செயலாகும். எனவேதான் இதை எதிர்க்கிறோம்.
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவியை பறிக்கும் மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையின் யோகியதை வக்பு வாரிய சட்டத்திருத்தத்தின் போது தெரியவந்தது. நாடு முழுவதும் வக்பு சட்டத் திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அறிஞர்கள் சொன்ன ஒரு கருத்தையோ, எதிர்க்கட்சிகள் சொன்ன கருத்தையோ ஜே.சி.பி ஏற்கவில்லை. மாறாக நாடு முழுவதும் பாஜகவினர் சொன்ன கருத்துக்களை எல்லாம் ஏற்றார்கள். கடைசியில் நீதிமன்றத்தில் அந்த சட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. அதுபோல அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான இந்த சட்ட மசோதா, மிகக் கடுமையான எதிர்ப்பை சந்திக்கும். இந்த சதிவலையில் பாஜகவே சிக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.