வீடு இன்றி சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கும் பூஜியம் என்று முகவரியுடன் வாக்குரிமை வழங்கியுள்ள தேர்தல் ஆணையம், பீகாரில் ஏராளமான முஸ்லீம், தலித்களின் வாக்குரிமையை நீக்கியது ஏன்? என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு தொடபர்பாக தேர்தல் ஆணையர்கள் எழுப்பிய கேள்விகள் குறித்து திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் யூப்டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையர்கள், ராகுல்காந்தி தனது குற்றச்சாட்டுகள் குறித்து 7 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர் மனிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர். தேர்தல் ஆணையரை சந்திக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரணியாக வந்தபோது, அவர்களை சந்திக்காதது ஏன்? தேர்தல் ஆணையம் ஒரு தன்னிச்சையான அமைப்பு. காங்கிரஸ், பாஜக என்கிற வேறுபாடு தங்களுக்கு கிடையாது என்று தேர்தல் ஆணையர் சொல்கிறார். ஆனால் அவர்கள் பாஜக சார்பாக தான் இயங்குகிறார்கள் என்று ஒவ்வொரு முறையும் நிரூபிக்கிறார்கள். வாக்காளர் பட்டியலில் வீடில்லாத ஏழை மக்களுக்கு பூஜியம் என்கிற முகவரியை நாங்கள் கொடுத்தோம். அதை ஏளனப்படுத்துவது வீடில்லாதவர்களை வாக்களிக்கக் கூடாது என்று சொல்வதற்கு சமமாகும். அது ஜனநாயக படுகொலையாகும் என்று சொல்கிறார்கள்.
ராகுல்காந்தி போலி வாக்காளர்கள் என்று 40 ஆயிரம் பேரை வெளிப்படுத்தினார். எதன் அடிப்படையில் போலி வாக்காளர்கள் என்று சொன்னார் என்றால், பெயர், வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படம், ஒருவருடைய வயது – தோற்றம் போன்றவற்றை வைத்துதான். அதற்கு தேர்தல் ஆணையம் என்ன விளக்கம் தரப் போகிறது. புதிய தலைமுறை வாக்காளர்கள் என்கிற வாக்காளருக்கு தர வேண்டிய அடையாள அட்டையை 106 வயது மூதாட்டிக்கு வழங்கியுள்ளனர். ஆனால் அவருடைய படம் 106 வயது போல இல்லை. 32 வயதுக்குரியவரின் முகத்தோற்றம் உள்ளது. தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுகிறது. 65 லட்சம் பேரை நீக்கியதற்கு தேர்தல் ஆணையம் புதிய விளக்கத்தை தருகிறது. அதேவேளையில் அவர்களில் பெரும்பான்மையானோர் ஏன் இஸ்லாமியர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் உள்ளனர்? சாலையோரங்களில் தூங்கி கொண்டிருப்பவர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. ஆனால் ஏன் தலித் மற்றும் இஸ்லாமிய மக்களை தொகுதிக்கு 17 முதல் 30 சதவீதம் வரை நீக்கியுள்ளீர்கள்?
பாஜக 400 தொகுதிகள் வரும் என்று சொன்னார்கள். ஆனால் 200 தொகுதிகள் தான் வந்தன. அந்த 200 தொகுதிகளையும் கூட உயர்த்துவதற்கு தேர்தல் ஆணையம் பயன்பட்டிருக்கிறது என்பதுதான் அவர்களின் நடவடிக்கை மூலம் தெரியவரும் செய்தியாகும். இவற்றை எல்லாம் தேர்தல் ஆணையம் செய்கிறது என்று ராகுல்காந்தி குற்றச்சாட்டாக வைத்துவிட்டார். அந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் கொடுங்கள். தேர்தல் ஆணையத்தின் தோள்களில் துப்பாக்கியை வைத்து வாக்காளர்களை மிரட்டுவது போல ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகள் உள்ளதாக தேர்தல் ஆணையம் புகார் தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக தோல்வியை தழுவிய நிலையில், அதனை தேர்தல் ஆணையம் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது என்பதுதான் குற்றச்சாட்டு. நீங்கள் நம்பக தன்மை இல்லாத அமைப்பாக மாறுகிறபோது உங்களை கேள்வி எழுப்பாமல் என்ன செய்வது? எபிக் ஐ.டி-யில் ஒருவர் மூன்று இடங்களில் வாக்களித்திருக்கிறார் என்றால் அந்த முறையே தோல்வி அடைந்துவிட்டதா? தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை என்பது கேள்விக்குரியாகி விட்டது. அதைதான் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.
வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு எழுப்பி பல நாட்கள் ஆகிறது. இவ்வளவு நாட்களாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்காதது ஏன்? மோடி, அமித்ஷாவிடம் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார்களா இத்தனை நாட்களாக. மூன்று நாட்கள் டெல்லி ஸ்தம்பித்து போய்விட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டமாருதம் செய்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் வாய் திறக்கவே இல்லை. நீதிமன்றத்தில் எவ்வளவு ஆணவத்தோடும், திமிரோடும் வெளிப்பட்டீர்கள். தற்போது பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை ஒப்படைப்பதாக சொல்கிறீர்கள். அப்போது இத்தனை நாட்களாக உங்களுடைய கணத்த மௌனத்திற்கு பின்னால் நடந்த திறைமறைவு பேரம் என்ன? எதற்காக நீங்கள் காத்திருந்தீர்கள்?
தேர்தல் ஆணையம் தனது முழு முகவரியையும் இழந்து நிர்மூலமாகி போய் நிற்கிறது. ராகுல்காந்தி 7 நாட்களில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறது. மன்னிப்பு கேட்பது என்பது, நீங்கள் யாருக்காக தேர்தல் பணிகளை செய்தீர்களோ, அவர்களுடைய பாணியாகும். இது ராகுல்காந்தியின் பாணி அல்ல. ராகுல்காந்தி ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார். இந்த நாட்டின் பிரதமராக ராகுல் வர வேண்டும் என்று வாக்களித்த லட்சோபலட்சம் மக்களின் நம்பிக்கையை பொய்த்துப்போக செய்து, மோடியை அரியணையில் ஏற்றிய இந்த தேர்தல் ஆணையம் தான் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.