திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் உதாசீனப்படுத்திவிட்டு தமிழ்நாட்டில் வெல்லப் போகிறேன் என்று சொல்லும் அண்ணாமலைக்கு அரசியல் புரிதல் என்பது கிடையாது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.


நெல்லையில் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தொடர்பாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- நெல்லையில் நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுகவை வேருடன் பிடுங்கிவிட்டு என்.டி.ஏ கூட்டணியை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். திமுகவை அழிக்க வேண்டும் என்று அரை நூற்றாண்டு காலமாக அந்த குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அப்படி சொன்னவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? திமுக எங்கே இருக்கிறது என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே திமுகவை அழிக்க வேண்டும் என்று நினைப்பது கனவிலும் கூட நடக்காது என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும். அதிமுகவை போன்று ஒரு பிம்ப அரசியலை செய்வது அல்ல திமுக. அமித்ஷா பேசிய கருத்து என்பது, காலங்காலமாக பலரும் சொல்லி வருவது தான். எனவே இதற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும் என்று நினைக்கவில்லை. அவர்கள் தங்களுடைய எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் கலைஞரை விமர்சித்துதான் அதிமுக என்கிற இயக்கத்தை கட்டமைத்தார்களே தவிர, அதை தாண்டி அவர்களிடம் என்ன லட்சியம், கொள்கை இருந்தது? அண்ணாயிசம் தான் அதிமுகவின் கொள்கை எனில், அது எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் முடிந்துவிட்டது. அடுத்தக்கட்டத்திற்கு நகரவில்லை. ஆனால் திமுகவை பொருத்தவரை அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின், தற்போது உதயநிதி என்று வரிசைகட்டி வரும்போது எந்த இடத்திலும் கொள்கையை சமரசம் செய்யவில்லை. அண்ணா செய்ய நினைத்ததை, செய்து முடித்தவர் கலைஞர். எங்காவது ஒரு இடத்தில் கொள்கை பிறழ்வு என்பது திமுகவில் இருந்ததா? காங்கிரஸ், திமுகவுக்கு யாரை பிரதமராக்க வேண்டும், யாரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்கிற கனவு உள்ளதாக அமித்ஷா சொல்கிறார். என்டிஏ கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்று சொல்கிற அமித்ஷா, இத்தனை முறை தமிழ்நாட்டிற்கு படை எடுத்து வந்தபோதும் யார் அவர்கள் கூட்டணிக்கு வந்தார்கள்? என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக கூட இதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை.

என்.டி.ஏ கூட்டணியின் முதலமைச்சர் முகம் யார்? எடப்பாடி பழனிசாமி என்று, அவரே சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பாஜகவில் அமித்ஷா தொடங்கி நயினார் வரை எங்காவது ஓரிடத்தில் எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர் என்று சொல்லியுள்ளனரா? அவர்கள் என்.டி.ஏ ஆட்சி அமையும் என்கிறார்களே தவிர, எந்த இடத்திலும் அதிமுக ஆட்சி அமையும் என்று சொலல வில்லை. உங்களுடைய முதலமைச்சர் முகம் என்பது தெளிவு இல்லாமல் உள்ளது. அந்த முகம் செங்கோட்டையனுடையதா? வேலுமணி உடையதா? எடப்பாடி பழனிசாமி முகமா? அல்லது அண்ணாமலையுடையதா? இவர்தான் எங்கள் முதலமைச்சர் முகம் என்று சொல்லிவிட்டு தேர்தல் களத்திற்கு வரும் யோக்கியதை உங்களிடம் உள்ளதா? உங்களிடம் அடிமை சேவகம் செய்த ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதை உணராமல் மேடை ஏறி வாய்சவடால் விடுவது, அமித்ஷாவுக்கு இன்னும் தமிழ்நாட்டின் அரசியலின் நிலைமை முழுமையாக புரியவில்லை என்றுதான் அர்த்தமாகும்.

மக்களவை தேர்தலில் பாஜக 18 சதவீத வாக்குகளும், அதிமுக 20 சதவீத வாக்குகளும் பெற்ற நிலையில், இருவரும் சேர்ந்தால் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று அமித்ஷா சொல்கிறார். தமிழ்நாட்டில் அதிமுக மீண்டும் அதனுடைய தன்மையை மீண்டும் நிரூபிக்க காத்திருக்கிறது என்று அதிகபட்சம் 2 சதவீதம் பேர் அதிமுகவுக்கு வாக்களித்தார்கள். திமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ளவர்களின் வாக்குகள், திமுகவுக்கு கிடைப்பதற்கு ஒரே காரணம் அதிமுக, பாஜக உடன் கூட்டணி வைத்திருப்பதுதான். இல்லாவிட்டால் அவர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பவர்கள். பாஜகவுக்கு அன்றைக்கு இருந்த கூட்டணி பலம் இன்றைக்கு உள்ளதா? டிடிவி தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் தேர்தலில் நின்றார்கள். ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பிறகு இது ஒரு பொருந்தா கூட்டணியாக மாறி போய் உள்ளது. இதனுடைய விளைவாக அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக முழு மனதுடன் வேலை செய்யாது. அதேபோல் பாஜக வேட்ளாருக்கு அதிமுக முழுமனதுடன் வேலை செயயாது. இது தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை தரும். எனவே பாஜக இந்த கணக்கோடு தேர்தலை அணுக முடியாது. பாஜக உடன் ஒரு கட்சி கூட்டணி சேர்ந்தால், அது கூட்டணி சேரும் கட்சியை பலவீனப்படுத்தும். இது 2026 தேர்தலில் வெளிப்படும்.

பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம் என்று அண்ணாமலை பேசியுள்ளார். அவர் முன்பு எடப்பாடியை விமர்சித்து பேசிய வீடியோவை ஒப்பிட்டு இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. தமிழ்நாட்டின் அரசியலின் அரிச்சுவடி என்பது திமுக, அதிமுக தான். 234 தொகுதிகளிலும் ஒரு வாக்குச் சாவடிகளையும் விடாமல் பூத் ஏஜெண்ட் மற்றும் மாற்று பூத் ஏஜெண்ட் போடுகிற கட்டமைப்பு இந்த கட்சிகளுக்கு தான் உள்ளது. இந்த இரண்டு கட்சிகளையும் உதாசீனப்படுத்திவிட்டு தமிழ்நாட்டில் நான் வெல்லப் போகிறேன் என்று சொன்னால், ஒன்று அப்படி சொல்பவர் ஒன்று பைத்தியம் ஆகிவிட்டார் அல்லது அவருக்கு அரசியல் புரிதல் இல்லை என்று அர்த்தம். இதில் எதில் அண்ணாமலை வருகிறார் என்று மக்கள் புரிந்துகொள்ளட்டும். அண்ணாமலையால் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. சிதலமடைந்துள்ள பாஜகவின் கட்டமைப்பை சரிசெய்வதற்காகவே நயினார் நாகேந்திரனை கொண்டுவந்து தலைவராக நியமித்துள்ளனர்.

அண்ணாமலையை விட எடப்பாடி பழனிசாமிதான் பெரியவர். ஏன் என்றால் அவர் தான் இங்கு பெரிய கட்டமைப்பு கொண்டவர். அவர்தான் தமிழ்நாட்டிற்கு முதல்வராகவும், இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார். பாஜக இல்லை என்றால் அண்ணாமலை யார் என்றே தெரிந்திருக்காது. அதிமுக என்கிற பெரிய கட்டமைப்பு உங்களிடம் சிக்கியுள்ள நிலையில் அதை வைத்து அரசியல் செய்ய முடியாவிட்டால், இனி நீங்கள் எப்படி அரசியல் செய்வீர்கள்? மத்திய அரசின் அதிகாரம் தான் பலா பழத்தில் ஈ மொய்ப்பதை போன்று மொய்க்க வைக்கிறது. பாஜகவின் உண்மையான கட்டமைப்பு என்பது இல.கணேசன், ஹெச்.ராஜா, தமிழிசை போன்றவர்கள்தான். அண்ணாமலை போன்றவர்களுக்கு இந்த அரசியல் புரிவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அவர் தன்னடக்கத்துடன் அரசியலை உள்வாங்கினால் புரியும். இல்லாவிட்டால் கடைசி வரை உளறல் பேர்வழியாகதான் இருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


