18. நமக்கு பயன்படாததை கண்டுபிடிப்போம் – என்.கே.மூர்த்தி
”படிப்புகள் அனைத்திலும் அதி உன்னதமான படிப்பு மனிதன் எப்படி இருக்க வேண்டும் , எதை தேட வேண்டும் என்ற படிப்பு தான்” – பிளாட்டோ
தோல்வியை கற்றுக்கொள்ளாமல் வெற்றியைப் பற்றி சிந்திக்கவே முடியாது. தோல்வி என்பது நிரந்தரம் அல்ல. அது தள்ளிப் போடப்பட்ட வெற்றி.
கின்லே வாட்டர் கேன் மார்கெட்டிங் துறையில் பணிபுரிந்த போது, அதன் சென்னை உரிமையாளர் சாய் என்பவரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அப்பொழுது நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.
அதில் முக்கியமான இரண்டு விதிமுறைகளைக் கற்றுக்கொள்வோம்.
1. எது நமக்கு பயன்படாது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
2. அதன் மூலம் எது பயன்படும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
25 லிட்டர் தண்ணீர் கேனை இருபது ரூபாய்க்கு நிறைய கம்பெனிகள் விற்பனை செய்தது. ஆனால் கின்லே வாட்டர் மட்டும் 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும்.
20 வருடத்திற்கு முன்பு 25 லிட்டர் தண்ணீரை 60 ரூபாய்க்கு விற்பனை செய்வது என்பது சாதாரண காரியமல்ல என்று விற்பனையாளர்கள் சொல்வார்கள். மாலையில் சோர்வடைந்து அலுவலகத்திற்கு திரும்புவார்கள். நான் எல்லோரும் அலுவலகத்தில் இருந்து சென்ற பின்னர் தான் அலுவலகத்திற்கு செல்வேன். ஏனென்றால் அன்றைய நாளில் டார்கெட் முடிக்காமல் மற்றவர்கள் முன் நிற்பதற்கு கூச்சமாக இருக்கும். எல்லோரையும் விட நான் குறைவான திறமைசாலி தான். அப்பொழுது மனதிற்குள் ஒரு ஆய்வு மேற்கொண்டேன்.
1. நமக்கு எது பயன்தராது.
2. நமக்கு எது பயன் தரும் என்பதை கற்றுக் கொண்டேன்.
இந்த பொருளை வாங்குவதற்கு இவர்கள் பயன்பட மாட்டார்கள் என்று முதலில் கண்டுபிடித்தேன். அவர்கள் பக்கமே போகக்கூடாது என்று தீர்க்கமாக முடிவு செய்தேன்.
அதேபோல் இந்த பொருளை வாங்குவதற்கு இவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்பதையும் அறிந்துகொண்டேன்.
அதன் பின்னர் என்னுடைய டார்கெட்டை எவரும் தொட முடியாத அளவிற்கு பணியாற்றினேன். நிறுவன உரிமையாளர் சாய் என்னை மிகுந்த மரியாதையுடன் நடத்தினார்.
ஒவ்வொரு கண்டுபிடிப்பாளர்களும் ஓராயிரம் முறை தோல்வி அடைந்த பின்னர் தான் வெற்றியை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஒவ்வொரு வெற்றியாளர்களும் ஆயிரம் முறைக்கு மேல் தோல்வியை சந்தித்த பின்னர்தான் முதல் வெற்றியை ரசித்திருக்கிறார்கள்.
1. நமக்கு எது பயன் தராது. 2. நமக்கு எதுவெல்லாம் பயன் தரும் என்பதை அனைத்து இடங்களிலும் பொருத்தி பார்க்க வேண்டும்.
நாம் உண்ணும் உணவில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் உணவு இருக்கிறது. அதே போல் நம் உடலுக்கு ஏற்காத உணவும் இருக்கிறது.
உடலுக்கு ஏற்காத உணவை தூக்கி எறிய வேண்டும் என்பதை அனுபவத்தில் இருந்தே கற்றுக் கொள்கிறோம்.
ஒவ்வொரு வெற்றியும் தோல்வியில் இருந்தே பிறக்கிறது. வெற்றியின் பிறப்பிடம் தோல்வி என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். முயற்சி செய், தோல்வி கிடைக்கும், தோல்விக்கு பின் மீண்டும் முயற்சி செய், வெற்றி நிச்சயம்.