தென் மாவட்டங்களில் திமுக வலுவாக உள்ளதால் அதை குலைத்திடும் விதமாக அமைச்சர் ஐ.பெரியாசாமியின் மீது அமலாக்கத்துறையை பாஜக ஏவி சோதனை நடத்தியுள்ளதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை மற்றும் அதற்கு தமிழ்நாடு அரசு ஆற்றிய எதிர்வினைகள் குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:-அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி உள்ளது. அதேவேளையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஹாஸ்டலுக்குள் சட்ட விரோதமாக நுழைந்ததாக அமலாக்கத் துறையினர் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறை சோதனை நடத்தும் இடங்களில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாக தான் தண்டனை பெற்றுத் தந்துள்ளனர்.
பாஜகவின் வழக்கமே ஒருவர் வீட்டில் சோதனை நடத்தி, அவரின் பெயரை கெடுப்பதுதான் ஆகும். ஐ.பெரியசாமி தவறு செய்திருந்தார் என்றால் அவர் தண்டனை பெற வேண்டியதுதான். ஆனால் அமலாக்கத்துறை வழக்கு போடுவதாக சொல்லி சோதனை நடத்துகிறார்கள். அப்படி சோதனை நடத்திய பிறகும் சத்தமே இல்லாமல் போய்விடுகிறது. செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை என்ன புதிதாக கண்டுபிடித்தது. ஏற்கனவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முன்வைத்த வாதங்களை தான் அமலாக்கத்துறை முன்வைத்துள்ளது. இதற்கு எதற்கு அவரிடம் 8 மணி நேரம் விசாரிக்க வேண்டும். அமலாக்கத்துறை தங்களை சட்டத்தைவிட மேலானவர்கள் என்று நினைக்கின்றனர். அதனால்தான் தமிழ்நாடு அரசு திருப்பி அடித்துள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்தியா ஒரு முழுமையான கூட்டாட்சி கிடையாது. சட்டமன்றங்களுக்கு என்று அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு உள்ளன. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை கலைக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு என்றைக்கு கொடுத்தார்களோ, அப்போதே முழுமையான கூட்டாட்சி கிடையாது. இது கூட்டாட்சியை நோக்கி செல்லக்கூடிய ஒரு அரசாகும். அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், மாநிலங்களுக்கு தனித்து போகும் அதிகாரத்தை வழங்கினால் இந்தியா நெல்லிக்காய் மூட்டை போல சிதறிப்போகும் அபாயம் உள்ளதாக நினைத்தார். அதனால்தான் கவர்னர் பொறுப்பு கொண்டுவரப்பட்டது. ஒன்றிய அரசு நேர்மையான ஆட்சியையா நடத்துகிறது?
சிபிஐ, அமலாக்கத் துறையையும் வெட்கம் இல்லாமல் பயன்படுத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் சொல்கின்றன. நீதிமன்றங்களே அமலாக்கத்துறையை கடுமையாக கண்டித்துள்ளன. எனக்கு தெரிந்தவரை இன்றைக்கு நேர்மையான அரசியல்வாதிகள் மிகவும் அரிதாகவே உள்ளனர். அதனால் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் கண்டுபிடிக்க முடியும். அதனால் அமலாக்கத்துறையை வைத்து மாநில அரசுகளில் உள்ள அமைச்சர்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கிறார்கள். பாஜக இதுவரை மேற்கு மண்டலத்தில் கவனம் செலுத்தி வந்தது. அதனால் செந்தில்பாலாஜியை தண்டித்தார்கள். தற்போது தெற்கில் திமுக வலிமையாக உள்ளதால், அங்கு கவனத்தை திருப்புவோம் என்று நினைக்கிறார்கள்.
அரசு மீதோ, அரசு நிறுவனங்கள் மீதோ நம்பிக்கை போகக்கூடாது. அது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி நம்பிக்கை போனால் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை போய்விடும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இருந்தபோது தவறுகள் நடைபெற்றன. ஆனால் அப்போது சிஏஜி அறிக்கை வந்தால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2 ஜி விவகாரம் எவ்வளவு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் பாஜகவின் ஊழல்கள் வருகிறபோது ஊடகங்கள் மண்டியிட்டு அவர்களுக்கு பணிபுரிகிறார்கள். அதனால் செய்திகள் வெளியே வருவது இல்லை. ஐ.பெரியசாமி உண்மையாக தவறு செய்து அதற்கான ஆதாரங்கள் இருந்தாலோ, அல்லது அமலாக்கத்துறை வழக்கில் நுழைவதற்கான வாய்ப்புகள் இருந்தாலோ, நுழையலாம். இவை இருந்தால் அமலாக்கத்துறை நுழையலாம். ஆனால் அவர்கள் குற்றப்பத்திரிகையே தாக்கல் செய்து கிடையாது ஏன்?
இந்தியா கூட்டணி கட்சியிலேயே, பாஜக போன்ற இந்துத்துவவாதிகள் இருந்தனர். கெஜ்ரிவால் ஒரு மென்மையான இந்துத்துவவாதி ஆவார். அவர் எப்படி காங்கிரஸ் உடன் இருப்பார்கள்?. நிச்சயமாக அவர்கள் வெளியே போய்விடுவார்கள். மற்றொன்று இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் மாநில அளவில் ஒருவரை ஒருவர் எதிர்த்து போட்டியிடுவார்கள். அப்போது போட்டி போடதான் செய்வார்கள். ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் போன்றவற்றில் போட்டி பாஜக – காங்கிரஸ் இடையே தான் உள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரி கட்சிகள் தெளிவாக உள்ளன. அரசியலமைப்பு சட்டத்தை மீறினால் என்னவாகும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். அவசர நிலையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். அதனால் அவர்களுக்கு இந்த விவகாரத்தில் தெளிவு உள்ளது.
வாக்கு திருட்டு விவகாரத்தில் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு, நேர்மையான அரசு அதிகாரிகளை அவமதிப்பதாக உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. இப்படி எல்லாம் சொல்கிற தேர்தல் ஆணையம் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டை ஆய்வு செய்து, பதில் சொல்ல வேண்டியதுதானே. மகாதேவபுரா தொகுதியில் ஒரே அறையில் 40க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். அங்கு இந்தியா டுடே ஆய்வுக்கு சென்றபோது அந்த அறையில் ஒரு நபர் மட்டுமே இருந்தார். அவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். அந்த வீட்டின் உரிமையாளரை விசாரித்தபோது அவர் அந்த வீட்டில் வெவ்வேறு காலகட்டத்தில் 47 பேர் வாடகைக்கு இருந்ததாகவும், அவர்களில் சிலர் அவ்வப்போது வாக்களிப்பதாகவும் கூறியுள்ளார். அப்படி வாக்களித்தால் சட்டப்படி அது செல்லாது.ஒரு முகவரியில் இல்லாதவர்கள் ஓட்டு போட்டால் அது கள்ளஓட்டுகள். இதுபோல் பல பத்திரிகைகள் கண்டுபிடித்து உள்ளனர். பீகாரில் இறந்துவிட்டதாக சொல்லப்பட்ட வாக்காளர்களுடன் ராகுல்காந்தி டீ குடிக்கிறார்.
தேர்தல் ஆணையம், எங்களிடம் புகார் தெரிவிக்கவில்லையே என்று சொல்கிறார்கள். அப்படி செய்தால், ராகுல்காந்தி மீது வழக்குப்பதிவு செய்துவிடுவார்கள் என்கிற பயம் உள்ளது. அதனால் பொதுவெளியில் புகார்களை முன்வைக்கின்றனர். இறந்த வாக்காளர்களுடன் ராகுல் டீ குடித்தார். அவர்கள் தவறுதலாக நீக்கப்பட்டனரா? என்று சரிபார்க்க வேண்டும். ராகுல்காந்தியின் புகார்களை விசாரிக்கிறேன் என்று தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. அதற்கு பதிலாக ராகுல்காந்தியின் குற்றச்சாட்டில் சின்ன குறைகளை இல்லை என்று நிருபிக்கின்றனர். அப்போது தேர்தல் ஆணையம் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.