மத்திய அரசின் ஆதரவோடு பாமகவை அன்புமணி கைப்பற்றிவிடுவார் என்றும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் அவருக்கே கொடுத்துவிடுவார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

பாமகவில் மருத்துவர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையே நடைபெற்று வரும் மோதலின் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பாமகவில் மருத்துவ ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பாமக யாருக்கு சொந்தம் என்று வந்தால் தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு ஆதரவாகத்தான் முடிவு எடுக்கும். ஏனென்றால் தேர்தல் ஆணையம் யாருடைய ஆள் என்றும், அது என்ன என்ன செய்து கொண்டிருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். சுதந்திரத்திற்கு பின்னர் இப்படிபட்ட மோசமான தேர்தல் ஆணையம் வந்ததே கிடையாது. பெருமைக்குரியதாகவும், மிரட்டலுடையதாகவும் தான் தேர்தல் ஆணையம் இருந்துள்ளது. டி.என்.சேஷன் என்பவர், தேர்தல் ஆணையத்திற்கு எவ்வளவு அதிகாரங்கள் இருக்கின்றன என்று காட்டியவர்.
அப்படி மிரட்டலாக இருந்த தேர்தல் ஆணையம் இன்றைக்கு தன்னிலை மறந்து செயல்படுகிறது. தேர்தல் ஆணையரை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ஒருவரும் தான் தேர்வு செய்கிறார்கள். அப்போது, அவர்கள் சொல்வதை தான் ஆணையம் கேட்கும். இந்நிலையில், அன்புணி ராமதாஸ், தன்னுடைய முதலாளியிடம் சென்று தந்தை ராமதாஸ் ரொம்ப பிரச்சினை செய்வதாக சொன்னார். உடனே அவர்கள் ஆவணங்களை கொண்டுவாருங்கள் கட்சியை உங்களுக்கு சொந்தமாக்கி விடலாம் என்று சொல்லிவிட்டனர். அதேபோல், பாமக அன்புமணிக்குதான் என்று சொல்லிவிடுவார்கள். கட்சியை அன்புமணி கைப்பற்றி விடுவார். சின்னத்தையும் அவருக்கே கொடுத்து விடுவார்கள். மகாராஷ்ராவில் ஆளுங்கட்சியாக இருந்த சிவசேனாவையே இரண்டாக உடைத்து, இரண்டாம் கட்ட தலைவரை கட்சியின் தலைவராக கொண்டுவந்தனர். அப்போது, பாமகவை உடைப்பது ஒன்றும் அவர்களுக்கு பெரிய விஷயமல்ல.
பாமகவை பொறுத்தவரை மருத்துவர் ராமதாசிடம் தான் அனைத்து அதிகாரங்களும் உள்ளன. கட்சி அவர்கள் கையில்தான் உள்ளது. தொண்டர்கள் அவரிடம் தான் உள்ளனர். உண்மையும் அவர் பக்கம்தான் உள்ளது. ஆனால் அன்புமணியிடம் இது எவுதும் கிடையாது. அவரிடம் எதிர்பார்ப்போடு வருபவர்கள், கட்சியை கலைப்பவர்கள் தான் உடனிருக்கிறார்கள். டெல்லியில் டபுள் கேம் ஆடுபவர்கள் எல்லாம் அன்புமணியுடன் பழக்கத்தில் உள்ளனர். தந்தை – மகன் இடையிலான போரில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக உடன் கூட்டணி வைக்க சவுமியா அன்புமணி, தனது கால்களை பிடித்து கெஞ்சியதாக ராமதாஸ் தெரிவித்தார்.
அன்று ஒப்புக்கொண்டதால் அதை செய்தார். இன்று ஒப்புக்கொள்ள மறுப்பதால் அவரை அரசியலில் இருந்து வெளியேற்றிட வேண்டும் என்று நினைக்கின்றனர். திரவுபதி அம்மன் கோவிலுக்கு தனது மருமகள் சவுமியா அன்புமணி செல்வதற்கு காரணம் தான் சீக்கிரம் இறந்துவிட வேண்டும் என்பதற்காக தான் என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது பாமகவில் உள்ள அனைவருக்கும் தெரியும். ராமதாஸ் இப்படி சொல்கிறார் என்றால் அவர் மனதிற்குள் எவ்வளவு வேதனை இருக்கும்.
ஒருவேளை பாமக அன்புமணிக்கு சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டாலும், பாமகவின் வாக்குகள் அவருக்கு முழுமையாக கிடைக்காது. எப்படி ஆகினும் பாமக என்கிற கட்சிக்கு அது அழிவை ஏற்படுத்தும். பாமக பொதுக்குழுவில் பேசிய அன்புமணி ராமதாஸ், எல்லோரும் தான் தவறு செய்துவிட்டதாக ஒருதலைபட்சமாக பேசுகிறார்கள் என்றும், தான் ராமதாஸ் குறித்து திருப்பி பேசினால் ரொம்ப அசிங்கமாக இருக்கும் என்று சொல்கிறார். அப்போது, மனதிற்குள் எவ்வளவு வன்மத்தை வைத்திருக்கிறார் என்றுதானே ராமதாஸ் சொல்வார்.
ராமதாசை மதிக்கிறேன், மரியாதை கொடுக்கிறேன் என்று அன்புமணி சொல்லி விட்டு, அசிங்கமான ஒரு வார்த்தையை கடைசியில் சொன்னால் ராமதாசின் மனது கொதித்துவிடாதா? ராமதாஸ் மீது மனதிற்குள் மிகுந்த கோபத்துடன் அன்புமணி இருப்பது இதன் மூலம் தெரிகிறது. அப்போது ராமதாஸ் சொல்வது எல்லாம் உண்மைதானே. தனது மருமகள் கோவிலுக்கு செல்வதற்கு காரணமாக அவர் சொல்வம், அன்புமணி, தனது போனை ஒட்டுக்கேட்டார் என்பதும் உண்மைதானே. தந்தை என்கிற பாவப்பட்ட நபர் தனியாக தைலாபுரம் தோட்டத்தில் உட்கார்ந்து இருக்கிறார் என்றுதானே எல்லோரும் பரிதாபப்படுவார்கள். அதைவிடுத்து அன்புமணியை பார்த்து யாரும் பாவப்பட மாட்டார்கள்.
அன்புமணி கூட்டிய பாமகவின் பொதுக்குழுவில் 2026 ஆகஸ்ட் மாதம் வரை அவர் பாமகவின் தலைவராக தொடர தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மேலும் திமுக ஆட்சியில் இருந்து அகற்றி, வீட்டிற்கு அனுப்புவது என்றும் உறுதிமொழி ஏற்றுள்ளனர். அன்புமணிக்கு முதலில் அவருடைய குடும்ப பிரச்சினைகளையே தீர்க்க முடிய வில்லை. அப்படி இருக்கும்போது, அவர் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்கிறார். தமிழக அரசியலில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி போன்றவர்கள் காமெடி செய்துகொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம் விஜய், தவெக மாநாடு என்று சொல்கிறார். மறுபுறம் சீமான் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக தமிழிசை மட்டும் பிரச்சாரம் செய்தாலே, திமுக வெற்றிபெற்று விடும். அப்போது ஒட்டுமொத்தமாக இவர்கள் எல்லாம் திமுகவுக்கு எதிராக களமிறங்கினால், களமே திமுகவுக்கு சாதகமாகிவிடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.