பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் பாஜக மீது சந்தேகம் எழுவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி வைக்கப்பட்டிருப்பதாக மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளதன் பின்னணி குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரித்துள்ளதாவது :- ராமதாஸ் மீது விமர்சனங்கள் இருக்கலாம். அவர் ஒரு 86 வயது முதியவர். அவரிடம் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவரை காலி செய்ய முயற்சிக்கும் வேலையை யார் செய்திருந்தாலும் அது கண்டிக்கத்தக்கது. மருத்துவர் ராமதாசின் பேச்சை கண்காணிப்பது யாருக்கு தேவையாக இருக்கிறதோ, அவர்கள்தான் அந்த ஒட்டுக்கேட்கும் கருவியை வைத்திருப்பார்கள். ராமதாஸ் – அன்புமணி இடையிலான பிரச்சினை என்பது இதுவரை பாமக பார்த்திராத ஒன்று. பாமக தொடங்கிய காலத்தில் இருந்து வெற்றி பெற்றுதான் பார்த்திருப்பார்கள். 2009க்கு பிறகுதான் அவர்கள் பின்னடைவை சந்தித்தார்கள். 2014 பாஜக உடன் கூட்டணி வைத்தவர்களில் பலமான கட்சி பாமக தான். தருமபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றதால், பழனியப்பன் போன்ற அதிமுகவினர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்து நின்று, ஜெயலலிதா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார்கள். தேர்தல்களில் பின்னடைவை சந்தித்தபோதும் அவர்களிடம் கட்சி கட்டமைப்பு அப்படியே இருந்தது. இன்றைக்கு அவர்கள் மிகவும் மோசமான ஒரு நிலைக்கு போய்விட்டார்கள்.
பாஜக உடன் கூட்டணி அமைப்பதில் அன்புமணிக்கோ, ராமதாசுக்கோ பிரச்சினை இல்லை என்றே தோன்றுகிறது. அதுகுறித்து கேட்டால், “போக போக தெரியும்” என்று ராமதாஸ் பாட்டு பாடுகிறார். பாஜக உடன் கூட்டணி என்பதில் அன்புமணி உறுதியாக உள்ளார். ராமதாஸ் உடன் சேர்ந்து வந்தால் தான் பாஜக கூட்டணியில் அன்புமணிக்கு மரியாதை கிடைக்கும். எடப்பாடிக்கு இதில் என்ன பங்கு உள்ளது என்றே தெரியவில்லை. பாஜக பார்த்துக்கொள்ளும் என்று நினைப்பார் போல. மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்கிற பெயரில் பிரச்சார பயணத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார். கடைசியில் அமித்ஷாவிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டிய நிலையில் உள்ளது. ஸ்க்ரிப்ட் முதற்கொண்டு பாஜகவினரின் ஸ்க்ரிப்டை எழுதியுள்ளார். கடலூர் ரயில் விபத்து தொடர்பாக பாஜக பிரமுகர் ஒருவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவை, அப்படியே வார்த்தைகள் கூட மாற்றாமல் தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிடுகிறார். கூட்டணி என்றால் ஒரே மாதரியாக பேசுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம். அதற்காக அதே மாதிரியேவா பேசுவது? ஈஅடிச்சான் காப்பி அடிக்கும் நிலைக்கு எடப்பாடி போய்விட்டார்.
இந்த சூழ்நிலையில் பாஜக உடன் ஒரு கட்சி தொடர்ச்சியாக கூட்டணி வைத்தால் என்ன ஆகும் என்பதற்கு பாமக தான் உதாரணம். ஏனென்றால் ஒட்டுக்கேட்பது போன்ற விவகாரங்கள் வருகிறபோது எனக்கு சந்தேகமாக உள்ளது. ஒட்டுக் கேட்பது, வீடியோ எடுப்பது போன்றவை யாருடைய கலாச்சாரம் என்று எல்லோருக்கும் தெரியும். ஹனிட்ராப்பிங் போன்ற வார்த்தைகள் எல்லாம் இவர்களை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இவை எல்லாம் மேற்கத்திய நாடுகளின் உளவுப்பிரிவுகள் செய்கிற வேலையாகும். இவர்கள் எல்லாம் அவர்களை பார்த்துதான் காப்பி அடிக்கிறார்கள். மீம்களில் அண்ணாமலையை தான் போடுகிறார்கள். ஆனால் அவர் சமீபகாலமாக பாஜகவுக்கு எதிராக தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவர் அண்மையில் அதிமுக – பாஜக கூட்டணி வெல்ல வேண்டும் என்று எங்காவது பிரச்சாரம் செய்து, பார்த்துள்ளீர்களா? இந்த கூட்டணிக்கு 100 விழுக்காடு உண்மையாக இருக்கக்கூடிய நபர் நயினார் நாகேந்திரன்தான். அண்ணாமலை தற்போது வரை பாஜக ஆட்சிதான் என்று சொல்கிறார். அப்போது கண்டிப்பாக பாஜக ஆட்சி அமைக்காது. வானதி சீனிவாசனால் அதிமுக கூட்டணி இல்லாமல் கோவை தெற்கில் வெற்றி பெற முடியாது. எடப்பாடியோடு ஜெல் ஆகத அண்ணாமலை. பாஜகவோடு ஜெல் ஆக முடியாமல் தவிக்கின்ற அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள்.
ஏன் அன்வர்ராஜா என்ன சொன்னார். 1986ஆம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நிலை முடியாமல் இருந்தபோது கட்சியை பார்த்துக்கொள்ள அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றவர் அன்வர்ராஜா. இளம் வயதிலே எம்ஜிஆரிடம் அபிமானம் பெற்றவர் ராமநாதபுரம் அன்வர்ராஜா. அவர் சொல்கிறார் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது என்று. ஜெயக்குமார் போன்றவர்கள் கூட்டணி அமைவதற்கு முன்னதாகவே பாஜகவை கடுமையாக விமர்சித்தனர். தற்போது வாய் திறப்பதில்லை. தமிழக அரசு டாஸ்மாக்கில் மதுபானம் விற்கிறது. அதை ஸ்டாலின் மட்டும் அல்ல ஜெயலலிதா, எடப்பாடி போன்ற ஆட்சி செய்த காலத்திலும் டாஸ்மாக்கில் மதுவிற்பனை நடைபெற்றது. கோயில் காசு எடுத்து கல்லூரி கட்டுகிறீர்களே நீங்கள் எல்லாம் இந்து விரோதி இல்லையா? என்று சொல்கிறார். உடனே ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் கோவில் பணத்தில் இருந்து எத்தனை கல்வி நிலையங்கள் கட்டப்பட்டன என்கிற பட்டியலை வெளியிட்டனர். அவருடைய ஆட்சியிலேய பழனியில் தொழில்நுட்ப கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அப்போது என்ன ஆட்சி செய்கிறோம் என்று தெரியாமல்தான் அவர் செய்து கொண்டிருக்கிறார். அப்போது, ஹெச்.ராஜா, அமித்ஷா போன்றவர்கள் எழுதி கொடுக்கும் ஸ்க்ரிப்டை அப்படியே படிக்கிறாரோ என்று தோன்றுகிறது.
எப்போதும் அரசியல் பயணங்களை எம்ஜிஆர் – ஜெயலலிதா நினைவிடங்களில் இருந்து தொடங்குபவர், கோயிலில் இருந்து தொடங்கியுள்ளார். வழக்கமான அதிமுக பிரச்சார முறை, பேசும் முறை போன்றவற்றை மாற்றுகிறார்கள். கலைஞர் எதிர்ப்பு தானே அதிமுக. இவர்கள் இந்துத்துவா ஆதரவையும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஜெயலலிதா ஒருபோதும் இந்துக்களின் எதிரி கலைஞர் என்று பிரச்சாரம் செய்தது கிடையாது. மதத்தை கலந்து பேசுகிற அரசியல் ஜெயலலிதாவிடமும் கிடையாது, எம்ஜிஆரிடமும் கிடையாது. பாஜகவினருக்கு எந்த கொள்கை அறமும் கிடையாது. ஒருவரை தோற்கடிக்க அவரது குடும்பத்தினரை பயன்படுத்துவது பாஜகவின் அரசியலாகும். ஒட்டுக்கேட்பது, கூட இருந்தே குழிபறிப்பது, உறவுகளை பிரிப்பது போன்ற வேலைகளை ஏற்கனவே மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக செய்துள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் முயற்சிக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.