”தோல்வி என்றால் என்ன? அது ஒரு படிப்பினையைத் தவிர வேறு எதுவுமில்லை. மேம்பட்ட ஒரு நிலைக்கான முதலடி அது” – வென்டல் ஃபிலிப்ஸ்
உயர்தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் புனைவுக்குப் பெயர் பெற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள ‘சிலிக்கான் வேல்லியில் தற்போது புதிதாகத் தொடங்கப்படுகின்ற தொழில் நிறுவனங்கள், தம்முடைய பொருட்கள் கச்சிதமாக வடிவமைக்கப்படும்வரை காத்திருப்பதில்லை. அவர்கள் எந்தப் பொருளைக் கொண்டுவர உள்ளார்களோ அந்தப் பொருளின் ஓரிரு அடிப்படை அம்சங்களை மட்டும் உள்ளடக்கி அப்பொருளைத் தயாரித்து விற்பனைக்கு அனுப்பிவிடுகின்றனர்.
தங்களுடைய யோசனைக்கு வாடிக்கையாளர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றனர் என்பதை உடனடியாகப் பார்ப்பதே அவர்களுடைய நோக்கம். அதற்குச் சரியான வரவேற்பு இல்லையென்றால், நேரத்தை வீணடிக்காத, மலிவானதொரு தோல்வியை அவர்கள் தழுவியிருப்பார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பாத ஒரு பொருளின் உற்பத்தியில் முதலீடு செய்வதை அவர்கள் தவிர்த்துவிடுவர்.

ஏற்கனவே இருக்கின்ற ஒரு பொருளை மேம்படுத்தவோ அல்லது புதிதாக ஒரு பொருளை உருவாக்கவோ நீங்கள் முயற்சிக்கின்ற பட்சத்தில், தோல்வி என்பது உண்மையில் ஒரு சொத்தாக விளங்கக்கூடும். ஒரு விஷயம் தவறாகப் போவதிலோ அல்லது பாதையை மாற்றிக் கொள்வதிலோ எந்தவித அவமானமும் இல்லை. அது நிகழ்கின்ற ஒவ்வொரு முறையும் நமக்கு ஒரு புதிய வாய்ப்புக் கிடைக்கிறது. பிரச்சனைகள் வாய்ப்புகளாக மாறுகின்றன.
பழைய வியாபார முறையில், வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதை நிறுவனங்கள் ஆய்வுகள் மூலம் ஊகித்து, பிறகு அப்பொருட்களை ஒரு பரிசோதனைச்சாலையில் உருவாக்கும். அங்கு வேறு யாரும் நுழைய முடியாது. ஒரு பொருள் உருவாக்கி முடிக்கப்படுகின்றவரை அங்கு பின்னூட்டக்கருத்துகளுக்கு இடமேதும் இல்லை. ஆனால் இந்த அணுகுமுறை தோல்வி பயத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஏராளமான நேரச் செலவு மற்றும் பொருட்செலவோடு உருவாக்கப்படுகின்ற பொருள், முதல் நாளன்றே தோல்வியடைந்தால், அதற்குப் போடப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிடும். அது வெற்றி பெற்றாலும், அது ஏன் வெற்றி பெற்றது என்பதும், அதன் வெற்றிக்கு எது காரணம் என்பதும் எவருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் சிலிக்கான் வேல்லியில் கடைபிடிக்கப்படுகின்ற புதிய முறை, தோல்வியை அரவணைத்துக் கொள்வதாகவும் பின்னூட்டக்கருத்துகளை வரவேற்பதாகவும் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், தோல்வி அதை வலுப்படுத்துகிறது. எந்த அம்சங்களை வாடிக்கையாளர்கள் விரும்பவில்லையோ அவற்றை நீக்கிவிட்டு, அவர்கள் விரும்புகின்ற அம்சங்களை அதில் சேர்க்க நிறுவனங்கள் முனையும்.
நமக்காக நாம் வேலை செய்வது அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், நம்மையும் இந்த சிலிக்கான் வேல்லியின் தொடக்க நிறுவனங்களாகக் கருதிக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
அதற்கு, தோல்வியுடனான நம்முடைய உறவை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதாவது, ஒரு விஷயத்தை நாம் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். தோற்க வேண்டும். அதன் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். முயற்சி செய்வதற்கான நம்முடைய திறன், தோல்வியை சகித்துக் கொள்வதற்கான நம்முடைய திறனோடு பின்னிப் பிணைந்துள்ளது.
நாம் செயல்நடவடிக்கையில் ஈடுபடும்போது பலமுறை தோற்போம். அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. இன்னும் சொல்லப் போனால், அது ஒரு நல்ல விஷயம்தான். செயல்நடவடிக்கையும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை. மக்கள் நடவடிக்கையில் இறங்காதிருக்கும்போதுதான் இந்தத் தொடர்பு அறுபடுகிறது.
தோல்வி ஏற்படுகின்றபோது இப்படிக் கேளுங்கள்: இங்கு எது தவறாகப் போனது? எதை மேம்படுத்த முடியும்? இங்கு நான் எதைத் தவறவிடுகிறேன்? இது மாற்று வழிகளின் பிறப்புக்கு வழி வகுக்கிறது. சில சமயங்களில் மாற்று வழிகள் நம்முடைய முந்தைய வழியைவிட மேம்பட்டவையாக இருக்கக்கூடும். தோல்வி உங்களை ஒரு மூலையில் ஒதுக்கித் தள்ளும். அதிலிருந்து வெளிவருவதற்கு நீங்கள் நன்றாகச் சிந்தித்து ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். திருப்புமுனைகளுக்கான ஒரு மூலாதாரம் அது.
அதனால்தான் மாபெரும் வெற்றிகள் ஏற்படுவதற்கு முன்பு மாபெரும் தோல்விகள் நிகழ்கின்றன என்று கூறப்படுகிறது. அது பற்றிய பல கதைகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அத்தோல்விகள் ஏற்பட்டவுடன் அவர்கள் மீண்டும் பொருட்களின் வடிவமைப்புக் கட்டத்திற்குச் சென்று, அவற்றைச் செம்மையாக்குவதற்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதுதான் அவர்கள் வெற்றி பெறுவதற்குக் காரணம். அவர்கள் தோல்வியால் துவண்டுவிடாமல், அதனால் தூண்டப்படுகின்றனர்.
தொழில்களைப் பொறுத்தவரை, தோல்விகள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அவை ஒட்டுமொத்தச் செயல்முறையின் ஓர் அங்கம் என்ற புரிதல் அங்கு இருக்கிறது. ஒரு தொழிலில் செய்யப்படும் முதலீடோ அல்லது ஒரு புதிய பொருளோ வெறி பெற்றுவிட்டால், மகிழ்ச்சி. அம்முயற்சி தோற்றுவிட்டால்? பெரிய பிரச்சனை ஒன்றுமில்லை. ஏனெனில், அதற்கு நாம் ஏற்கனவே தயாராக இருந்தோம். அதோடு, நாம் நம்முடைய கடைசிப் பைசாவரை அதில் முதலீடு செய்திருக்கவில்லை.
தோல்வியிலிருந்து நல்ல படிப்பினைகளைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது நமக்குத் தெரிந்தாலும், நாம் பெரும்பாலும் அவற்றிலிருந்து ஒதுங்கிக் கொள்ளவே முனைகிறோம். தோல்வி என்பது அவமானகரமானது என்று எண்ணிக் கொண்டு, அதைத் தவிர்க்க நம்மால் முடிந்த அனைத்தையும் நாம் செய்கிறோம்.
“தோல்வி எனக்கு வேதனை ஏற்படுத்துகிறது என்பதால் நான் அதைத் தவிர்க்கிறேன். அதில் என்ன தவறு?” என்று நீங்கள் கேட்கக்கூடும்.
அது வேதனை ஏற்படுத்துவதில்லை என்று நான் கூற மாட்டேன். நிரந்தரமான, படுமோசமான தோல்வியால் ஏற்படக்கூடிய வேதனையைவிட, தற்காலிகமான, முன்கூட்டியே எதிர்பார்க்கப்படுகின்ற தோல்வியால் ஏற்படும் வேதனை குறைவாகவே இருக்கும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? எதிலிருந்து ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு ஒரு விலை கொடுத்துத்தான் ஆக வேண்டும். தோல்வி மட்டும் இதற்கு எப்படி விதிவிலக்காக ஆக முடியும்? அசௌகரியம், மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டிய சிரமம் ஆகியவை தோல்விக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய விலையாகும்.
தோல்விக்கு மனமுவந்து அந்த விலையைக் கொடுங்கள். ஏனெனில், உங்களுடைய வேலையில் அல்லது தொழிலில் தோல்வியைவிட மேம்பட்ட ஓர் ஆசான் இருக்க முடியாது.
எர்வின் ரோமெலின் வட ஆப்பிரிக்கப் போர் குறித்தக் கதைக்கு மறுபக்கம் ஒன்றும் உள்ளது. நேச நாடுகள் தங்களுக்குச் சாதகமாக இல்லாத வட ஆப்பிரிக்கப் போர்முனையை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்தன. ஜெர்மனிக்கு எதிராக ஏதாவது ஓரிடத்தில் போர்க்கொடி தூக்கித்தான் ஆக வேண்டும் என்பதை வின்ஸ்டன் சர்ச்சில் அறிந்திருந்தார். ஆனால் அதை ஐரோப்பாவில் மேற்கொண்டு அங்கு தோல்வியைச் சந்தித்தால், அது படைவீரர்களின் மன உறுதியை வெகுவாகக் குறைத்துவிடும் என்று அவர் கணக்குப் போட்டார்.
வட ஆப்பிரிக்காவில், ஜெர்மானியர்களை எதிர்த்து எப்படிச் சண்டையிடுவது என்பதை ஆங்கிலேயர்கள் கற்றுக் கொண்டனர். தொடக்கக் காலங்களில் அவர்கள் அதைத் தோல்விகளிலிருந்தே கற்றனர். அது ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். ஏனெனில், அவர்கள் அதிலிருந்து படிப்பினைகளைப் பெறுவதை எதிர்பார்த்திருந்தனர், அதற்கேற்பத் திட்டங்களைத் தீட்டினர். அவர்கள் அத்தோல்விகளை ஏற்றுக் கொண்டனர். ஏனெனில், வெற்றி கூப்பிடும் தொலைவில் இருந்ததை அவர்கள் அறிந்திருந்தனர். அதன் விளைவாக, ஜெர்மானியர்கள் இத்தாலியில் எதிர்கொண்ட நேசப் படைகள், வட ஆப்பிரிக்காவில் அவர்கள் எதிர்கொண்ட நேசப் படைகளைவிட அதிக வலிமை வாய்ந்தவையாக இருந்தன. அதற்குப் பிறகு பிரான்சிலும், இறுதியில் தங்களுடைய கொல்லைப்புறத்திலும் ஜெர்மானியர்கள் எதிர்கொண்ட நேசப் படைகள், இத்தாலியில் அவர்கள் எதிர்கொண்ட நேசப் படைகளைவிட அதிக வலிமையானவையாக இருந்தன.
தோல்விகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ளாமல் இருந்தால் தோல்விகளிலிருந்து உங்களால் எந்தப் பயனையும் பெற முடியாமல் போய்விடும். தோல்விக்கு எது காரணமோ அதையே மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருப்பது பைத்தியக்காரத்தனம். மக்கள் சிறு சிறு தோல்விகளை எப்போதும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் அவற்றிலிருந்து படிப்பினைகள் எதையும் கற்றுக் கொள்வதில்லை. அதனால் அது அவர்களை எந்தவிதத்திலும் மேம்படுத்துவதில்லை.
ஆனால், நீங்கள் தோற்கின்ற ஒவ்வொரு முறையும் இந்த உலகம் உங்களிடம் ஏதோ ஒன்றைச் சொல்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்வதற்கான வேளை வந்துவிட்டது. உங்களை மேம்படுத்துகின்ற, உங்களுக்கு வழிகாட்டுகின்ற பின்னூட்டக்கருத்துகளை அது வழங்கிக் கொண்டே இருக்கிறது. அது உங்களுக்கு எதையோ கற்றுக் கொடுக்க எத்தனிக்கிறது. எனவே, கவனமாகக் காது கொடுத்துக் கேளுங்கள்.
படிப்பினைகளுக்கு நீங்கள் செவி சாய்க்காமல் இருந்தால், அவை கிடைப்பது அரிதாகிவிடும். எனவே, கிடைக்கின்ற சந்தர்ப்பத்தைத் தவறவிட்டுவிடாதீர்கள்.
இந்த முறையில் உலகத்தைப் பார்த்துப் புரிந்து கொள்வது என்பது முட்டுக்கட்டைகளை முறியடிப்பதோடு பின்னிப் பிணைந்த ஒரு விஷயமாகும். இங்கு எதிர்மறைகள் நேர்மறைகளாகின்றன. ஏமாற்றங்களை நம்மால் வாய்ப்புகளாக மாற்ற முடியும். ஒரு குறிப்பிட்ட வழி சரியானதல்ல என்று சொல்வதன் மூலம் தோல்விகள் நமக்கு வழிகாட்டுகின்றன.
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – சளைக்காமல் செயல்படுங்கள் – ரயன் ஹாலிடே


