”இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தான் தூக்கில் போடப்பட்டுவிடுவோம் என்பதை ஒரு மனிதன் அறிந்து கொள்கின்றபோது, அது அவனுடைய மனத்தை அற்புதமான வழியில் ஒருமுகப்படுத்துகிறது” – டாக்டர் ஜான்சன்
அது 1569ஆம் ஆண்டு. மைக்கேல் டி மொன்டெயின் என்ற பிரான்ஸ் நாட்டுப் பிரபு ஒருவர், படுவேகமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்டவுடன் இறந்து போய்விட்டதாகக் கருதப்பட்டார்.
இரத்தக்களறியாக இருந்த அவருடைய துவண்டு போன உடலை அவருடைய நண்பர்கள் அவருடைய வீட்டுக்குக் கொண்டு சென்றனர். தன்னுடைய பூத உடலிலிருந்து உயிர் நழுவிக் கொண்டிருந்ததை மைக்கேல் பார்த்துக் கொண்டிருந்தார். அது ஒரு படம்போல அவருக்குக் காட்சியளித்தது. அவருடைய உதடுகளின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த ஆன்மா, நல்லவேளையாகக் கடைசி நேரத்தில் அவரிடமே திரும்பி வந்துவிட்டது.

அந்த அசாதாரணமான, மைக்கேலின் உன்னதமான நிகழ்வு வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய கணமாக அமைந்தது. அடுத்த ஒரு சில ஆண்டுகளில் அவர் ஐரோப்பாவின் மிகப் பிரபலமான எழுத்தாளராக உருவெடுத்தார். அந்த விபத்திற்குப் பிறகு, பிரபலமான அவர் பல கட்டுரைகளை எழுதிக் குவித்தார். இரண்டு முறை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜாங்கப் பிரதிநிதியாகப் பல நாடுகளுக்குச் சென்றார். அரசரின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தார்.
இக்கதை எண்ணற்ற முறை அரங்கேறியுள்ள ஒன்று. ஒரு மனிதன் சாவின் விளிம்பிற்குச் சென்று திரும்புகிறான். அதிலிருந்து மீண்டு வரும்போது அவன் முற்றிலும் வித்தியாசமானவனாக, மேம்பட்ட ஒருவனாகத் திரும்பி வருகிறான்.
அதுதான் மைக்கேலின் விஷயத்திலும் நடந்தது. சாவை ருசி பார்த்த அனுபவம் அவருக்குப் பெரும் உற்சாகமூட்டியது, அவருடைய ஆர்வத்தைக் கிளறியது. இறப்பு என்பது இனியும் கிலியேற்படுத்துகின்ற ஒன்றாக இருக்கவில்லை. மரணதேவனின் கண்களை நேருக்கு நேர் பார்த்தது அவருக்கு ஆறுதலையும் ஆசுவாசத்தையும் அளித்தது. இன்னும் சொல்லப் போனால், அது அவருக்கு உத்வேகமூட்டியது.
இறப்பு நம்முடைய வாழ்க்கையை அர்த்தமற்றதாக ஆக்குவதில்லை. மாறாக, அது அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. அதிர்ஷ்டவசமாக, இந்த ஆற்றலைக் கிரகித்துக் கொள்வதற்கு நாம் சாவின் விளிம்புவரை செல்ல வேண்டியதில்லை.
நம்முடைய சொந்த மரணம் குறித்து ஆழமாகச் சிந்தித்து, மரணித்தல் குறித்த விழிப்புணர்வை நம்மால் பெற முடியும் என்பது மைக்கேலின் கட்டுரைகளிலிருந்து நமக்கு நிரூபணமாகிறது. இன்னும் சொல்லப் போனால், அந்த அனுபவம் அவருடைய இருத்தலுடன் அவருக்கு ஒரு விளையாட்டுத்தனமான உறவை ஏற்படுத்தியிருந்தது. அக்கட்டத்திலிருந்து அவர் ஒரு பரவச உணர்வையும் தெளிவையும் அடைந்திருந்தார். இது நம்மை ஊக்குவிப்பதாக உள்ளது. ஏனெனில், நம்முடைய இருத்தலின் நிலையாமையை நாம் அரவணைத்துக் கொள்கின்றபோது, வாழ்க்கை உற்சாகமூட்டுவதாகவும் அதிகாரமளிப்பதாகவும் இருக்கும் என்பது இதன் மூலம் புலனாகிறது.
மரண பயம், நம்முடைய வாழ்வில் நம் தலைக்கு மேல் எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு கத்தியைப் போன்ற ஒரு தடையாக எப்போதும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
மைக்கேல் இறப்பைப் பற்றி ஆழமாகக் கற்றுள்ளார், அதைப் பற்றி விரிவாக விவாதித்துள்ளார், பிற கலாச்சாரங்களில் மரணம் அலங்கரித்திருந்த இடத்தைப் பற்றி அறிந்து கொண்டுள்ளார். மைக்கேல் ஒரு முறை ஒரு புராதன விளையாட்டைப் பற்றித் தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அது மது அருந்துகின்ற ஒரு விளையாட்டு. அதில் பங்கெடுத்துக் கொள்பவர்கள். குடிப்பதற்கு முன்பாக, தங்களுடைய மதுக் கோப்பையைக் கையில் ஏந்தி, ஒரு சவப்பெட்டிக்குள் ஒரு பிரேதம் கிடத்தப்பட்டுள்ள ஒரு காட்சியைச் சித்தரிக்கின்ற ஓர் ஓவியத்தைத் தங்கள் கைகளில் எடுத்து, “குடித்து சந்தோஷமாக இருக்கலாம். நீ இறந்த பிறகு நீ இப்படித்தான் இருப்பாய்!” என்று கூற வேண்டும்.
ஷேக்ஸ்பியரின் கடைசிப் படைப்பான ‘டெம்பெஸ்ட்’ நாடகத்தில் இவ்வாறு ஒரு வசனம் வரும்:”என்னுடைய ஒவ்வொரு மூன்றாவது எண்ணமும் என்னுடைய கல்லறையைப் பற்றியதாக இருக்கும்.”
இதே படிப்பினையை ஒவ்வொரு கலாச்சாரமும் வெவ்வேறு வழிகளில் கற்றுக் கொடுக்கிறது. “மனிதா, நீ மரணிப்பாய் என்பதை மறந்துவிடாதே!” என்று ரோமாபுரிக் கலாச்சாரம் முழங்குகிறது.
மரணத்தைப் பற்றி மனிதன் மறந்துவிடுவான் என்றோ, அல்லது அது குறித்து அவனுக்கு நினைவுபடுத்தப்பட வேண்டும் என்றோ சிந்திப்பது விநோதமாக இருக்கலாம். ஆனால், அதை நாம் மறந்துவிடுகிறோம் என்பதுதான் உண்மை.
மரணத்தை ஏற்றுக் கொள்வதில் நமக்கு இவ்வளவு தயக்கம் இருப்பதற்குக் காரணம், நம்முடைய சொந்த இருத்தலுடனான நம்முடைய உறவு மிகவும் சிக்கலாக ஆகியுள்ளதுதான். நாம் வெளிப்படையாகச் சொல்ல மாட்டோம். ஆனால் நம் மனத்தின் அடியாழத்தில், நாம் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்பதுபோல நாம் நடந்து கொள்கிறோம். ‘இந்த விஷயம் மற்றவர்களுக்கு நடக்கும், எனக்கு நடக்காது. எனக்கு ஏகப்பட்டக் காலம் மிச்சமிருக்கிறது, என்ற எண்ணம் நமக்கு இருக்கிறது.
உண்மையில் வாழ்க்கையின்மீதான நம்முடைய பிடி எவ்வளவு மெல்லியது என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
இல்லையெனில், நாம் அற்ப விஷயங்களில் அதீத ஈடுபாடு கொள்வதற்கு இந்த அளவு நேரத்தை விரயமாக்க மாட்டோம். அல்லது பிரபலமான ஒருவராக ஆவதற்கு, நம்முடைய ஒரு வாழ்நாளில் நம்மால் செலவழிக்க முடியாத அளவுக்குப் பணத்தை ஈட்டுவதற்கு, அல்லது வருங்காலத்தில் எங்கோ தொலைதூரத்தில் இருக்கின்ற ஒன்றைக் குறித்துத் திட்டமிடுவதற்கு நாம் இந்த அளவு நேரத்தை விரயமாக்க மாட்டோம். இவை அனைத்தையும் மரணம் தவிடுபொடியாக்கிவிடும். இவை அனைத்தும், ‘மரணம் நம்மை ஒருபோதும் பாதிக்காது; அல்லது குறைந்தபட்சம், நாம் விரும்பாத ஒரு நேரத்தில் அது நிகழாது, என்ற அனுமானத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
நீங்கள் யார் என்பதோ அல்லது செய்து முடிப்பதற்கு இன்னும் எத்தனை விஷயங்களை நீங்கள் மிச்சம் வைத்திருக்கிறீர்கள் என்பதோ ஒரு பொருட்டல்ல. உங்களுக்கு முற்றிலும் தொடர்பு ஏதுமற்ற ஏதோ ஒரு காரணத்தால் நீங்கள் எந்நேரமும் கொல்லப்படலாம். அது இன்றுகூட நிகழலாம். அல்லது நாளை அல்லது வெகு விரைவில் நிகழலாம்.
நீங்கள் பல முறை கேட்டுப் புளித்துப் போன ஒரு கேள்வியை நான் உங்களிடம் இப்போது கேட்கப் போகிறேன்:
“எனக்குப் புற்றுநோய் இருக்கிறது என்று என் மருத்துவர் என்னிடம் சொன்னால், என் வாழ்க்கையில் எதை நான் மாற்றுவேன்?” இதற்கு ஏதோ ஒரு பதிலை அளித்துவிட்டு, “கடவுளே, நல்லவேளையாக எனக்குப் புற்றுநோய் இல்லை,” என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்வோம்.
உண்மையில் நாம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள். நாளை நாம் உயிரோடு இருப்பதற்கான சாத்தியக்கூறு, ஒவ்வொரு கணத்திலும் குறைந்து கொண்டே வருகிறது. உங்களைச் சந்திக்க வந்து கொண்டிருக்கின்ற மரண தேவனை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. அவன் வருகின்ற நாளுக்காகத் தயாராக இருங்கள்.
நாம் முன்னொரு அத்தியாயத்தில் பார்த்த ‘அமைதிப் பிரார்த்தனை’ உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு விஷயம் நம்முடைய கட்டுப்பாட்டில் இருந்தால், அதற்கு நாம் எவ்வளவு ஆற்றலைச் செலவழித்தாலும் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். மரணம் அந்தப் பட்டியலில் வராது. நாம் இன்னும் எவ்வளவு காலம் வாழ்வோம் என்பது நம் கையில் இல்லை. சாவு எந்த ரூபத்தில் வரும் என்பது நமக்குத் தெரியாது.
ஆனால் நம்முடைய இந்த நிலையாமையைக் குறித்துச் சிந்திப்பதும் அது குறித்த விழிப்புணர்வோடு இருப்பதும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு நல்ல கண்ணோட்டத்தை நமக்குக் கொடுக்கும். அது சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அது நமக்குப் புத்துணர்வூட்டக்கூடியது.
நாம் இறந்து போவோம் என்று நமக்கு நாமே ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்திக் கொள்வது, நேரத்தை ஒரு பரிசாகக் கருதி நடப்பதற்கு நமக்கு உதவும். மரணத்தின் வாசலில் நிற்பவர்கள், தங்களுக்கு இப்படி இருந்தால் பிடிக்கும், அப்படி இருந்தால் பிடிக்கும் என்று நேரத்தை வீணாக்க மாட்டார்கள்.
எவையெல்லாம் தங்களுடைய வாழ்க்கையில் இன்றியமையாதவை என்பதைக் கண்டுபிடித்து, அவற்றை மட்டுமே அவர்கள் செய்வர். அவர்களுடைய கடைசி நேரம் வரும்போது அவர்களால், “இன்னும் சிறிது காலம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்தான். ஆனால் எனக்குக் கொடுக்கப்பட்டிருந்த காலத்திற்குள் நான் ஏராளமானவற்றைச் செய்து முடித்துவிட்டேன்.” என்று கூற முடியும்.
மரணம் என்பது உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற ஒரு முட்டுக்கட்டை என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அது குறித்து நம்மால் எதுவும் செய்ய முடியாது. ஆனால் அதற்காக, நாம் உயிருடன் இருக்கின்றபோது, மரணம் என்ற முட்டுக்கட்டையால் நமக்கு எந்தப் பயனும் இல்லையென்று கூறிவிட முடியாது. எந்நேரமும் சாவின் நிழல் நம்மீது கவிழ்ந்துள்ளதால், விஷயங்களுக்கு முன்னுரிமை வழங்குவது நமக்கு எளிதாகியுள்ளது. அதன் காரணமாக, அனைத்தும் அதனதன் இடத்தில் கச்சிதமாகப் போய் உட்கார்ந்துள்ளது. விஷயங்களைச் சரியான கண்ணோட்டத்தில் காண்பதற்கு அது உதவுகிறது. எதற்காகத் தவறான காரியங்களில் ஈடுபட வேண்டும்? எதற்காக பயப்பட வேண்டும்? உங்களையும் மற்றவர்களையும் எதற்காகக் கைவிட வேண்டும்? வாழ்க்கை எப்படியும் விரைவில் முடிந்துவிடும் என்பதால், எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்யேன் என்று வாழ்க்கை நமக்கு இடித்துரைக்கும்.
மரணத்தின் நிச்சயத்தன்மையை ஏற்றுக் கொண்டு, அதற்கேற்ப நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ள நம்மால் கற்றுக் கொள்ள முடியும்.
தவிர்க்கவே முடியாத முட்டுக்கட்டையாக விளங்குகின்ற நம்முடைய சொந்த இறப்பிலிருந்தே நம்மால் சில நன்மைகளைப் பெற முடியுமென்றால், இதன் முன் தூசுக்குச் சமமாக இருக்கின்ற, நாம் எதிர்கொள்கின்ற பிற முட்டுக்கட்டைகள் ஒவ்வொன்றிலிருந்தும் உங்களால் மதிப்பைப் பெற முடியாது என்று எப்படி உங்களால் கூற முடியும்?
