தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்களை மையப்படுத்தி அரசியல் செய்ய வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் உரை குறித்து, மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக்கழக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பேச்சு என்பது, கடந்த காலங்களில் அவர் பேசிய தொனியில் இல்லை. ஒரு எதிர்பார்ப்பை நிறைவேற்றக்கூடியதாக அவரது பேச்சு இல்லை. மிக சாதாரணமாக அவரது பேச்சு இருந்தது. மிக குறுகிய நேரம் எடுத்துக்கொண்டார். அனைத்து தலைவர்களும் சொல்லக்கூடிய ஒரு குற்றச்சாட்டு அரசியல். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாதது என பல இடங்களில் நழுல் தழுவல் போக்காகத்தான் இருந்தது. என்ன நல்ல விஷயம் என்றால், தவெகவின் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். பூத் கமிட்டி அமைக்கப் போகிறோம் என்பது கட்சிக்கு நேர்மறையான செய்தியாகும். ஒரு கட்சித்தலைவர் தொண்டர்களுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ? அதை கொடுத்திருக்கிறார். ஆனால் எங்களது நிலைப்பாடு இதுதான் இதை கடந்து எதுவும் கிடையாது என்கிறார்.
தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பல்வேறு விவகாரங்களை பேசுவார் என்று எதிர்பார்த்தோம். மத்திய பாஜக அரசு, அது கடைபிடிக்கக்கூடிய கொள்கை, அதன் செயல்பாடுகள் அது குறித்து ஒரு ஆழ்ந்த விமர்சனம். மாநில அரசு, அதன் செயல்கள் பற்றி பெரிய அளவில் பேசவில்லை. மும்மொழி கொள்கை மற்றும் மத்திய அரசு நிதி வழங்காதது குறித்து பேசினார். இவை தவிர்த்து இன்னும் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. தற்போது நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விஷயம் வந்துள்ளது. இது குறித்து பேசலாம். இன்னும் பல பிரச்சினைகள் உள்ளது. 2 திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று சொல்லும் நபர் நிறைய விஷயங்களை பேசலாம். தற்போது எது சர்ச்சையாக உள்ளதோ அதை மட்டும் பேசிவிட்டு போய்விட்டார். அதிலும் இருவரும் நாடாகமாடுகின்றனர் என்கிறார். சரி நீங்கள் மும்மொழி கொள்கை வேண்டாம் என்கிறீர்கள். மூன்றாவது மொழியை ஏற்க வேண்டும், இல்லாவிட்டால் நிதியை வழங்க மாட்டோம் என மத்திய அரசு சொல்கிறது. அப்போது நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து ஒரு போராட்டத்தை அறிவித்திருக்கலாம். இது மக்கள் மத்தியில் அவர் கட்சியை குறித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதி கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை, கேட்டுப்பெற வேண்டியது மாநில அரசின் உரிமை. ஆனால் இருவரும் செய்யவில்லை என்று விஜய் சொல்கிறார். எப்படி அவர் தமிழநாடு அரசு செய்யவில்லை என்கிறார்? மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிதி கேட்கவில்லை? வேண்டாம் என்று சொல்கிறதா? கல்விக்கான நிதியை வழங்குவதற்கு முன் நிபந்தனையை வைக்கிறீர்கள். இதனை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு அரசு சொல்கிறது. இதனை ஒரு நாடகம் என்கிறார். மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அடிப்படை உரிமைகள் தொடர்பாக ஒரு பிரச்சினை. இதனை நாடகம் என்று சொல்வதன் மூலம் இந்த விவகாரத்தில் உங்களுக்கு புரிதல் இல்லை என தெரிகிறது. பிரசாந்த் கிஷோர், விஜயை ஹோப் என்று சொல்கிறார். அப்படி ஹோப் என்றால், களத்திற்கு வர வேண்டும். வராமல் பேசக்கூடாது.
வருகிறவர்கள் போகிறவர்கள் எல்லாம் கட்சி தொடங்குகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அது தவறானது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டும் என்றாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அடுத்து விஜய் சொல்வதை பாருங்கள்… தவெகவில் வயதானவர்களே இல்லை, இளைஞர்கள் மட்டும்தான் உள்ளனர் என்கிறார். மேலும் எளியவர்களை தான் கட்சியில் பொறுப்புகளில் நியமிப்பதாக சொல்கிறார். இவர்களது கட்சி விவகாரங்களை ஏன் பேசுகிறார். இவ்வளவு பெரிய கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. விஜயின் மும்மொழி கொள்கை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்துக்கு, பிரசாந்த் கிஷோர் கையெழுத்து போட மாட்டேன் என்கிறார். ஆனால் விஜய்தான் நம்பிக்கை, இவர்தான் ஆட்சிக்கு கொண்டுவந்து உட்கார வைப்பேன் என்கிறார்.
பிரசாந்த் கிஷோர் செய்வது ஒரு தொழில். அதற்கு அரசியலில் பற்று எல்லாம் தேவையில்லை. 2021ல் திமுகவை பி.கே. தான் வெற்றிபெற வைத்தார் என்று சொல்கிறார்கள். இதற்கு 300 கோடி வசூலித்தார். குஜராத்தில் மோடிக்கு என்ன சொன்னார்கள் குஜராத் இஸ் ஷைனிங் என்று சொன்னார்கள். வளர்ச்சிக்கான பிரதமர்தான் மோடி என்று சொன்னார்கள். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி எவ்வளவு சிரமப்பட்டு ஜெயித்தார்கள் என்பது எனக்கு தெரியும். இவிஎம் எந்திரத்தில் மோசடி செய்ய விடாமல் தடுத்ததுதான் வெற்றிக்கான காரணம். அதற்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகயை வைத்து தனி அமைப்பே நடத்தினார் மம்தா. அதற்காகவே பின்னாளில் அந்த ஐஏஎஸ் அதிகாரியை எம்.பி ஆகவும் ஆக்கினார். ஆனால் பிரசாந்த் கிஷோர் சொல்கிறார் என்னால்தான் ஆட்சிக்கு வந்தார் என்று. விஜய்க்கு இவிஎம் போன்றவை தெரியாது. அதனால் அனுமதித்துள்ளார்.
ராகுல் ஷர்மா, தற்போது திமுகவுக்கு ஆலோசகராக உள்ளார். அவர் மகராஷ்டிராவில் பாஜக – ஏக்நாத் ஷிண்டே கூட்டணிக்கு ஆலோசகராக செயல்பட்டார். அவர் மகராஷ்டிராவில் நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ததாகவும், பின்னர் ஷிண்டேவுக்கு ஆதரவாக வியூகங்களை மாற்றி பெண்களை போகஸ் செய்ததாக சொல்கிறார். ஆனால் தேர்லுக்கு கடைசி 5 மாதத்தில் 32 லட்சம் வாக்காளர்களை சேர்த்துவிட்டு தேர்தலை நடத்தி ஜெயித்துள்ளனர். ஆனால் இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ராகுல்ஷர்மா இங்கே வந்து எனது தேர்தல் வியூகங்கள்தான் ஜெயித்தது என்கிறார்.
இவர்களை ஏன் கூட்டி வருகிறார்கள் என்றால் அரசு மக்களுக்கு செய்துள்ள திட்டங்களை எப்படி ஹைலைட் செய்வது என்பதற்காக தான். ஸ்டாலின், எடப்பாடி போன்றவர்கள் அடிப்படை விஷயங்களுக்கு கட்சியினரை வைத்துக் கொள்கின்றனர். அதற்கு மேல் ஒப்பனைக்காக இவர்களை போன்றவர்களை நியமிக்கிறார்கள். இது வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாது. ஆனால் விஜய் அந்த இடத்தில் வந்து நிற்கிறார் என்றால், அவர்களை வைத்து அரசியலை தீர்மானிக்க முடியாது. அவர்கள் தேர்தல் நேரத்திற்கு வியூக வகுப்பாளரை பயன்படுத்துகின்றனர். இவர் கட்சியின் அடிப்படைக்கே பயன்படுத்துகிறார். இதன் மூலம் புரிதல் இல்லை என்பது வெளிப்பட்டு விடும்.
மக்களை மையப்படுத்திய அரசியல் செய்ய வேண்டும் மாதம் ஆயிரம் தருவதை விமர்சிக்கலாம். ஆனால் அதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். இலவச பேருந்து சேவைக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். இதை எல்லாம் தாண்டிதான் நீங்கள் என்ன செய்ய முடியும் என்றுதான் பார்க்க வேண்டும். ஆனால் இதை விமர்சித்தால் உங்களுக்கு வாக்குகள் கிடைக்காது. விஜய் களத்திற்கு சென்றால் எல்லாம் தெரியும். ஸ்டாலின் 2021 முதல் கொடுத்துக்கொண்டிருப்பது உதவவில்லை என்றால் மக்களவை தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்திருக்குமா?, இவ்வாறு அவர் தெரிவத்தார்.