spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்! உடையும் பாமக? தராசு ஷ்யாம் நேர்காணல்!

தேர்தல் ஆணையம் சென்ற ராமதாஸ்! உடையும் பாமக? தராசு ஷ்யாம் நேர்காணல்!

-

- Advertisement -

மருத்துவர் ராமதாசுக்கு வயதாகிவிட்டதால் கட்சியினர் எல்லாம் அன்புமணி உடன் தான் இருக்கின்றனர். அதனால் அன்புமணி தங்கள் கூட்டணிக்கு வந்தால் போதும் என்று பாஜக மேலிடம் கருதுகிறது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

பாமகவில் நிலவும் அதிகார மோதல் தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தை அணுகி உள்ளதன் பின்னணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :- பாமக விகாரம் தொடர்பாக மருத்துவர் ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். தன்னுடைய மனுவில் அன்புமணியின் பதவிக்காலம் கடந்த மே 28ஆம் தேதியுடன் நிறைவு பெற்றுவிட்டது. அதனால் கட்சியின் தலைவர் பொறுப்பை தானே எடுத்துக்கொண்டு விட்டதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணியை செயல் தலைவராக நியமிக்க காரணம், அவர் தனது பணிகளை சரிவர மேற்கொள்ள வில்லை. அதனால் தற்போதைக்கு நான்தான் கட்சியின் தலைவர் என்று சொல்லி விட்டார். ஏ பார்ம், பி பார்ம்களில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு தான் உள்ளது. அதற்கு கட்சி நிர்வாகிகளின் கையெழுத்து பெற்ற பிரமான பத்திரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துவிட்டார்.

we-r-hiring

மாநிலக் கல்விக் கொள்கை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? -  ராமதாஸ் கேள்வி! 

ராமதாஸ் செயற்குழுவை கூட்டிய நேரத்தில் அன்புமணி பனையூரில் நிர்வாகக்குழு கூட்டத்தை கூட்டினார். தன்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரம் கிடையாது என்று அன்புமணி சொல்கிறார். ராமதாஸ் – அன்புமணி ஆகியோர் இடையிலான மோதல், தற்போது சட்டமன்றத்திற்கும் சென்றுள்ளது. கொறடா பொறுப்பில் இருந்து எம்.எல்.ஏ அருளை, நீக்கக் கோரி அன்புமணி தரப்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் சிறிய கட்சிகளுக்கு எந்த விதமான அங்கீகாரமும் கிடையாது. பாமகவில் உள்ள எம்.எல்.ஏ-க்களுக்கு ஆளுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 2 சட்டப்பேரவை கூட்டத்தொடர்களும் உள்ளன. இந்நிலையில் கொறடாவை நீக்கிவிட்டோம் என்று அன்புமணி தரப்பிலும், தானே கொறடாவாக தொடர்வதாக எம்எல்ஏ அருள் தரப்பிலும் கடிதம் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் வரை 2 கொறடாக்கள் இருந்துவிட்டு போக சொன்னால் என்ன செய்வது? இந்த விவகாரத்தில் சபாநாயகரின் தீர்ப்பு இறுதியானது. பாமக கட்சி விவகாரம் தொடர்பாக மூன்று இடங்களில் முடிவு எடுக்கலாம். முதலாவது நீதிமன்றத்திற்கு யாரும் செல்லவில்லை. இரண்டாவது தேர்தல் ஆணையத்திற்கு சென்றுவிட்டது. மூன்றாவது சட்டமன்றத்திற்கு இருதரப்பும் சென்றுவிட்டது. அப்போது இந்த விவகாரத்தில் என்ன முடிவு வேண்டும் என்றாலும் எடுப்பார்கள்.

பாஜக மேலிடத்தை பொறுத்தவரை மருத்துவர் ராமதாசுக்கு வயதாகிவிட்டது. அன்புமணியின் பின்னால் தான் கட்சி உள்ளது. அதனால் அவர் வந்தால் போதும் என்கிற மனநிலையில் தான் உள்ளது. அன்புமணி, ஏற்கனவே பாஜக, அமித்ஷா உடன் மிகவும் நெருக்கமாக உள்ளார். எனவே மறுபடியும் 2029 கணக்குதான். பிளவுபட்ட பாமக தேர்தலை சந்திக்கும். தேர்தலில் பலத்த அடி வாங்கினால் பிரிவு காரணமாகவே தோல்வி என்று மீண்டும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். பழைய கொங்கு மண்டலத்தில் உள்ள வாக்கு வங்கி, அங்கு கணிசமான சீட்டுகளை ஜெயித்திடலாம் என்ற எடப்பாடியின் கனவுக்கு இடைஞ்சலாக இருப்பது பாமக தான். சேலத்தில் ஒரு தொகுதியில் பாமக கூட்டணி முழுமையாக இருந்து, அந்த கட்சியின் வாக்குகள் முழுமையாக கிடைத்தால் அதிமுகவுக்கு வெற்றி நிச்சயம். அதேவேளையில் பாமக சார்பில் 2 பேர் போட்டியிட்டார்கள் என்றால் அதிமுகவுக்கு வெற்றி சாத்தியமில்லை. இது சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எதிரொலிக்கும். ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானம் ஆகவில்லை.

தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் பிரிக்கப்போகும் வாக்குகள் யாரை பாதிக்கும் என்பது முக்கியமான விஷயமாகும். தமிழ்நாட்டின் வாக்கு வங்கி என்பது தமிழ்நாடு, பெரியார், திராவிட கொள்கைகள் ஆகியவற்றை சார்ந்ததாகும். ஒரு சிறு பகுதி தேசிய அரசியலை சார்ந்தது. தமிழ்தேசிய அரசியல் என்று சொன்னாலும் இதில் தான் வருகிறது. தமிழ் தேசியத்தின் தொடக்கம் மா.பொ.சி. 1967ல் திமுக கூட்டணி, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் மேலவை தலைவராக இருந்தார். தமிழ் தேசியம் என்பது எப்போதும் இப்படிதான் உள்ளது. ஈழ விடுதலைப் போராட்டம் வருகிறபோது தமிழ் தேசியமும் அதில் ஓர் அங்கமாக தெரிந்தது.

சீமான், தனியாக வாக்கு வங்கியை உருவாக்க முயற்சிக்கும் போது பெரியாருக்கு எதிராக பேசினால், அவர் மீண்டும் பாஜக உடன் அடையாளப் படுத்தப்படுகிறார். அப்போது பாஜக மட்டும்தான் தனி வாக்கு வங்கியை உருவாக்கி கொண்டு வருகிறது. மற்ற அனைத்துக்கட்சிகளும் தமிழ்நாடு, திராவிடம், மாநில அரசியல், மாநில மொழி உணர்வுகள், இந்தி எதிர்ப்பு போன்றவை சார்ந்த வாக்குகள் தான். இது 70 முதல் 80 சதவீத வாக்குகள் உள்ளன. திமுக, அதிமுக  என அனைத்துக் கட்சிகளும் இதற்குள்ளாக தான் பங்கிட்டு கொள்கின்றன. விஜயும், இந்த வாக்குகளை தான் பிரிக்க முயற்சிக்கிறார். திரைப்பட நடிகர் என்கிற அடிப்படையில் அவருக்கு எதாவது தனிப்பட்ட வாக்குகள் இருந்தால் தான் உண்டு. ஆனால் என்னை பொறுத்தவரை அப்படிபட்ட வாக்குகள் கிடையாது.

எம்ஜிஆர் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் கிடையாது. அவர் அரசியல்வாதியாக இருந்து நடிகராக மாறியவர். அதனால் அவரை விஜய் ஒப்பிடுவது சரியானது கிடையாது. தமிழ்நாட்டில் சினிமா அடிப்படையிலான வாக்கு வங்கி கிடையாது என்பதற்கு சிவாஜி கணேசன் தான் உதாரணம். எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதும் அவர் தோற்றார். சினிமா நட்சத்திரங்களை பார்க்க மக்களுக்கு ஆர்வம் இருக்கும். ஆனால் அது எந்த அளவுக்கு வாக்குகளாக மாறும் என்பது சந்தேகம் தான். விஜய்க்கான வாக்கு சதவீதம் எவ்வளவு என்று அவருக்கே தெரியாது. மொத்தத்தில் ஒரு 10 சதவீத வாக்குகள் வரலாம் என்பது என்னுடைய கணக்கு ஆகும். எந்த கட்சியும் சரியில்லை என்று நினைக்கக் கூடியவர்கள் எப்போதும் ஒரு 10 சதவீதம் இருக்கத்தான் செய்வார்கள். அனைத்து அணிகளில் இருந்தும் கொஞ்சம் வாக்குகள் விஜய்க்கு பிரியும் என்று தான் நினைக்கிறேன்.

திமுக – அதிமுக என்கிற கூட்டணியில் ஏதேனும் ஒரு கட்சிக்கு மாற்றாக வருகிற அளவுக்கு விஜய் இருக்கிறாரா? என்றால் கிடையாது. அவர் 2026ல் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்று, கட்சியை தொடர்ந்து நடத்தினால் அடுத்த அடுத்த தேர்தல்களில் வாக்கு வங்கியை கொஞ்சம் கொஞ்சமாக உயரலாம். ஜனநாயகன் படத்தில் விஜயுடன் நடித்த நடிகையே சொல்கிறார், அவர் மீண்டும் நடிக்க வந்துவிடுவேன் என்று சொன்னதாக கூறுகிறார். ஏனென்றால் கமல், ரஜினி போன்றவர்கள எல்லாம் அப்படி வந்தவர்கள்தான். எம்ஜிஆரே முதலமைச்சர் ஆன பிறகு சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். அரிதார ஆசை என்பது யாரையும் விடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ