எம்.ஜி.ஆர் ஒரு அரசியல்வாதி, அவர் சினிமா நடிகர் அல்ல. ஆனால் விஜய் ஒரு நடிகர். அவர் இன்னும் அரசியல்வாதி ஆகவில்லை என்று ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.

விஜய் குறித்து சர்வே வெளியானதாக பிரபல பத்திரிகையில் செய்தி வெளியிட்டு உள்ளது குறித்தும், சகாயம் ஐஏஎஸ் விஜய் சந்திப்பு குறித்தும் ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி இருப்பதாவது:- சமீபத்தில் வெளியான செய்தியில் விஜயிடம் சர்வே முடிவுகள் கொடுக்கப் பட்டதாகவும், அதில் அடுத்த முறை விஜய் தான் ஆட்சி அமைப்பார். திமுகவுக்கு 2வது இடம். அதிமுக 3வது இடத்தில் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகை 6 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் தான் ஆட்சியை பிடிப்பார் என்று சொன்னது. ஆனால் என்ன ஆனது? ரஜினிகாந்த் ஆட்சியை பிடித்துவிட்டாரா? 160 இடங்களில் வென்றுவிட்டாரா? மருத்துவமனைக்கு சென்று தப்பிக்கொண்டார். தலைவர் ரஜினிகாந்தின் உயிரை காப்பாற்றியது கொரோனா. அதை காட்டி தான் லீவ் லெட்டர் கொடுத்து அரசியலில் இருந்து விலகினார். குருமூர்த்தியிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொண்டார்.
பலர் அதை விமர்சித்தார்கள். நான் அதை விமர்சிக்க மாட்டேன். அவர் புத்திசாலித்தனமாக எடுத்த முடிவு அது. சினிமாவில் அடுத்தவர்களை அடித்து பன்ச் டயலாக் பேசினார். ஆனால் அவரையே எப்படி பேச வைத்தார்கள். உடம்பு எல்லாம் போட்டிருக்காங்க தையல்… பேசிக் கொண்டிருப்பதே பெரிய விஷயம்… என்ன நினைச்சுட்டு இருக்கீங்க… என்று பேசினார் பாவம். அவர் அரசியலை விட்டு போய்விட்டார் என்பதால் இதே பத்திரிகையில் அவரை அசிங்கப்படுத்துகிறார்கள். அவமானப்படுத்துகிறார்கள். ஆனால் ரஜினியின் அரசியலை விமர்சனம் செய்தவர்கள், அதற்கு பிறகு ரஜினியை அவமானப் படுத்தாதீர்கள். அவருக்கு அந்த உரிமை உள்ளது என்று சொன்னார்கள்.
விஜய்க்கு மிகப்பெரிய இளைஞர் செல்வாக்கு உள்ளது. இது அனைவரும் வேதனைப்பட வேண்டிய ஒன்று. தமிழ்நாட்டில் விஜய்க்கு இவ்வளவு பெரிய கூட்டம் உள்ளது. அவர்கள் எல்லோரும் ஏ பொலிடிக்கல் கூட்டம். அன்புமணி கட்சியினரை வீட்டிற்கு பத்திரமாக போங்க என்று சொல்கிறார். ஆனால் விஜய் கட்சியிலோ, பைக் மேலே ஏறாதீங்கடா… ஹெல்மெட் போட்டு போங்கடா…. டேய் காரில் குதிக்காதீங்கடா.. டேய் மரத்தில் இருந்து கீழே குதித்து காலை உடைச்சுக்காதிங்கடா… என்று அரசியல் கட்சி தலைவர் சொல்கிறார் என்றால் அதை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள். இவர்கள் நாளை சட்டமன்ற உறுப்பினர்களாகவும், கவுன்சிலர்களாகவும் ஆனால் தமிழ்நாட்டின் நிலை என்ன? அதெல்லாம் நினைத்து பார்க்கிறபோது வருத்தமாக தான் உள்ளது. விஜய் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக சொல்லிவிட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர் நான் என் வேலையை பார்த்துவிட்டு போகிறேன். நீ உன் வேலையை பார்த்துவிட்டு போ என்று விஜய் சொன்னார். இதுதான் அவரது மிகப் பெரிய அரசியல் ஸ்டேட்மெண்ட். கோவையில் நிறைய பிரச்சினைகள் நடைபெற்றதால் சொல்லி இருப்பார்கள்.
தற்போது அதையும் நிறைய பேர் கேட்கிறார்கள். செய்தியாளர்களை சந்திக்க பயமா? கேட்டவர்கள் மத்தியில் பத்திரிகையாளரை சந்தித்தார் விஜய் என்று போடுகிறார்கள். எங்கே அந்த பிரஸ்மீட்டை போட்டு காட்டுங்கள். சிறிய கட்சிகள் செய்தியாளர்களை சந்தித்தாலும் பொலிட்டிகல் ஸ்டேட்மெண்ட் இருக்கும். ஆனால் நாட்டை ஆள போகிறேன் என்று சொல்லும் விஜயின் செய்தியாளர் சந்திப்பை பாருங்கள். அதனால் ஒரு ஏ பொலிட்டிகல் கூட்டம் உள்ளது. 3, 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவருக்கு வாக்ககளிக்க தயாராக உள்ளனர். அவர்களுக்கு வாக்களிக்கும் வயது வருகிறபோது அவர் கட்சி நடத்துவாரா? என்பது கேள்வியாகும். சீமான் தன்னுடைய வாக்கு வங்கி பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருப்பதாக சொன்னார். அதே தான் விஜய்க்கும். 3ஆம் வகுப்பு வரை சீமானிடம் இருந்தவன். 6ஆம் வகுப்பு சென்ற உடன் விஜய்க்கு வந்துவிட்டான். அடுத்து கல்லூரி செல்வதற்குள் பக்குவப்பட்டு விஷயம் தெரிந்தவராக இருந்தால் இவர்களிடம் இருந்து விலகி தத்துவார்த்த மரபு சார்ந்த சிந்தனைக்கு போய் விடுவான். இல்லாவிட்டால் விஜயிடம் தங்குவார்கள்.
சகாயம் ஐஏஎஸ் வருகிறார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. படித்தவர்கள் ஆள வேண்டும் என்கிற முனை மழுங்கிய வாதம் மிகவும் தவறானதாகும். இந்த நாட்டில் மிகப்பெரிய கார்ப்பரேட் ஊழல்களை படித்தவர்களால் தான் செய்ய முடிகிறது. வெறும் பி.காம், எம்.காம் படித்தவர்களால் இதை செய்ய முடியாது. மிகப்பெரிய சாட்டர்ட் அக்கண்டட், ஆடிட்டர் அந்த படிப்புகளை எல்லாம் யார் படித்திருப்பார்கள் என்று உலகத்திற்கே தெரியும். கண்டிப்பாக நாடார், மறவர், ரெட்டியார் படித்திருக்க மாட்டார்கள். நம்ம பசங்க 11, 12வது வகுப்பில் இப்போது தான் காமர்ஸ் குருப்பையே எடுக்கிறார்கள். அதனால் படித்தவர்கள், ஐஏஎஸ் அதிகாரி நல்லவங்க என்று சொல்பவர்கள் ஷங்கர், அண்ணா ஹசாரே படத்தை பார்த்து கெட்டுபோனவர்கள் ஆவார். ஆனால் தமிழ்நாட்டில் கொஞ்சம் மெச்சூரிட்டியாக இருக்கிறார்கள்.
இதை நம்பி 10 சதவீத மக்கள் வாக்களிக்கிறார்கள். அது தமிழ்நாட்டு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். விஜயகாந்த் பின்னால் பெரிய ஒரு குரூப் இருந்தது. வைகோ வந்தபோது இவர் தான் தமிழ்நாடு என்று சொன்னார்கள். மூப்பனார் தனியாக நின்றபோது 22 சதவீத வாக்குகளை பெற்றார். 20 எம்எல்ஏக்களை வாங்கினார். ஆனால் மாறிவிட்டதா? இதுவரை வந்த விஜயகாந்த், கமலஹாசன், ரஜினிகாந்துக்கு அரசியல் தெளிவு, புரிதல், துணிச்சல் கூட இவரிடம் இல்லை என்றுதான் பார்க்கிறேன். விஜயகாந்திடம் ஒரு போல்ட்நஸ் இருந்தது. ஆமாம் திமுக, அதிமுகவை எதிர்க்கிறேன் என்று சொல்லி நின்னார். பின்னர் அவராலேயே நிற்க முடியவில்லை. ரஜினிகாந்த் வரவே இல்லை. கமல் ஏதேதோ கொள்கை சித்தாந்தம் என்று பேசிவிட்டு கடைசியில் திமுகவிடம் போய் நின்றுவிட்டார்.

எம்.ஜிஆருக்கும், விஜய்க்கும் என்ன தொடர்பு உள்ளது. எம்ஜிஆர் சினிமா நடிகர் கிடையாது. அவர் அரசியல்வாதி. ஒரு கட்சி தொடங்கி முதலமைச்சராக ஆகினார். விஜய் தற்போது வரை சினிமா நடிகர்தான். இன்னும் அவர் அரசியல்வாதி ஆகவில்லை. எம்ஜிஆர் தொடக்கம் முதலே அரசியலில் இருந்தார். அவர் நேருவோடு, இந்திராவோடு பேசி இருக்கிறார். காமராஜரை பிடிக்கும் என்றார். அண்ணாவோடு தொடர்ந்து பயணித்தார். கலைஞரை பாராட்டி தனது படத்தில் பாட்டு வைத்தார். இது போன்று எம்ஜிஆர் நிறைய செய்துள்ளார். ஆனால் விஜய் அப்படி எதுவும் செய்ய வில்லை. சினிமா நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற்றது கிடையாது. எம்.ஜி.ஆர் சினிமா நடிகர் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.