ராமதாசுடன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசியுள்ளது, என்டிஏ கூட்டணியை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் – செல்வப் பெருந்தகை சந்திப்பின் பின்னணி குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- மருத்துவர் ராமதாசை, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசியுள்ளார். இதன் மூலம் பாஜக கூட்டணியை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள். பாமகவில் ராமதாசின் ஆதரவாளர்களை பிரிப்பதன் மூலமாக பாஜக கூட்டணியை பலவீனப்படுத்த பார்க்கிறார்கள். ராகுல்காந்தியின் முயற்சியின் பேரில் செல்வப் பெருந்தகை இதை செய்கிறார். ராமதாசை கூட்டணியில் சேர்ப்பது தொடர்பாக ஸ்டாலின்தான் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக திமுக தரப்பில் இருந்து ராமதாசுக்கு கூட்டணி வாய்ப்புகள் தரப்படும் என்று நினைக்கிறேன். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை ஸ்டாலின் விட்டுக்கொடுக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.
திமுக, காங்கிரஸ், பாமக கூட்டணி 2004 தேர்தலில் வெற்றி பெற்றன. திமுக, காங்கிரஸ், விசிக கூட்டணி 2019, 2021, 2024 தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது விசிக இடத்தில், பாமகவை வைத்தாலும் வெற்றி பெறும் என்று பார்க்கிறார்கள். ஸ்டாலின் திருமாவளவனை விடுவார் என்று எதிர்பார்க்க வில்லை. ஆனால் அப்படி ஒரு தோற்றம் ஏற்படுகிறது.
அன்புமணி ராமதாஸ், திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கிறார். சிறிது பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளார். ராமதாஸ், சிறிது திமுக ஆதரவு நிலைப்பாட்டிலும், சிறிது பாஜக எதிர்ப்பு நிலைப்பாட்டிலும் உள்ளார். அன்புமணியை பலவீனப் படுத்துவதற்காக தான் செல்வப்பெருந்தகை ராமதாசை சந்தித்துள்ளார். 2019 தேர்தலிலேயே திமுக – காங்கிரஸ் – பாமக கூட்டணிக்கு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. கடைசியில் தான் விசிக கூட்டணி சேர்ந்தது. ராமதாஸ் அனைத்து பக்கமும் கூட்டணி கதவுகளை திறந்துவைத்துள்ளார்.
அதிமுக கூட்டணி என்பது தோல்வி தான். 36 இடங்களில் போட்டியிட்டு 5ல் தான் வெற்றி பெற்றனர். அன்புமணி தன்னுடைய வாக்குகள் ஸ்டாலின் எதிர்ப்பு வாக்குகள் என்பதை தற்போது புரிந்துகொண்டுள்ளார். அந்த அரசியலை அவர் முன்னெடுக்கிறார். ராமதாஸ் சூழ்நிலைக்கு ஏற்ப திமுகவில் ஒரு வாய்ப்பு கிடைக்காதா? என்று எதிர்பார்க்கிறார். ஸ்டாலின் இடங்கள் கொடுப்பார் என்று ராமதாஸ் எதிர்பார்க்கிறார். ஆனால் திருமாவளவனை பகைத்துககொண்டு ஸ்டாலின் இடங்களை கொடுப்பார் என்று பார்த்தால் அவருக்கு திருமாவளவன் தான் முக்கியம் என ஸ்டாலின் முடிவு எடுப்பார்.
திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகினால் 10 வருட அரசியல் போய்விடும். ஸ்டாலினுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணியை தொடர்வது தான் லாபம். கடந்த 3 தேர்தல்களிலும் அது வெற்றியை கொடுத்துள்ளது. அதிமுக – விசிக- தவெக கூட்டணிக்கு தான் ஆதவ் அர்ஜுனா முயற்சி செய்தார். ஆனால் அதிமுக – விசிக கூட்டணி பொருந்தாக் கூட்டணியாகும். விழுப்புரம், சிதம்பரத்தில் அதிக வாக்குகளை பெற்ற அதிமுக, கடலூரில் கூட்டணி கட்சிக்கு குறைந்த அளவிலான வாக்குகளை பெற்றுத் தந்தது. விசிக இருந்தால் மிகவும் குறைவாக பதிவாகின.
எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ முழுமையாக காலி செய்ய பார்க்கிறார். அதனால் அவர் பாஜக பக்கம் சென்றது நல்லதாகும். அதேபோல் அன்புமணிக்கும், விஜய் ஆப்ஷன் உள்ளது. விஜய் – அன்புமணி ஆப்ஷன்தான் முதலில் வந்தது. அன்புமணிக்கு, விஜய் பிறந்தநாள் தொவித்தபோது அது வெளிப்பட்டது. சீமான், விஜயை ஒரு நடிகராக தான் பார்க்கிறார். கூட்டணி வைக்க விரும்பவில்லை. எடப்பாடி பழனிசாமி, பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளதால் இம்முறை விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை. ஓபிஎஸ்-ம், அன்புமணியும் விஜயை ஒரு கூட்டணி வாய்ப்பாக பார்ப்பது அவருக்கு பலமாகும். பாமக பிரச்சினை சிந்துபாத் கதை போல தொடர்கிறது. விரைவில் முடிந்தால் அந்த கட்சிக்கு நல்லது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.