அதிமுக என்கிற கட்சியின் இடத்தை கைப்பற்ற வகுப்புவாத, மதவாத சக்திகள் தயாராகி விட்டார்கள். அவர்களுக்கு அதிமுக பலியாகக் கூடாது என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.


அதிமுக – பாஜக கூட்டணியில் நாளுக்கு நாள் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இதன் அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது சுற்றுபயணத்தை தொடங்கியுள்ளார். திமுக அரசு மீது ஆங்காங்கே நடைபெறும் குற்றச் செயல்களை குறிப்பிட்டு சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லிவந்தார். அவர் என்ன சொன்னாலும் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை. தனது முழு ஆற்றலையும் ஆளுங்கட்சிக்கு பதில் சொல்வதற்கு பதிலாக ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களுக்கு பதில் அளிப்பதிலேயே செலவிட்டுவிட்டார். தற்போது தலைக்கு மேலே கத்தி தொங்குவது போல பாஜக கூட்டணி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின்போது எதற்காக கூட்டணியில் இருந்து வெளியேறினோம் என்று இன்று வரை கட்சியினருக்கே அவர் சொல்லவில்லை. டெல்லியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தை பார்க்க போவதாக சொல்லிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்க சென்றார். ஆனால் அவர் விமானம் ஏறிய உடனே சட்டப்பேரவையில் முதலமைச்சர் அதனை தெரிவித்துவிட்டார். அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொன்னபோது, அதனை எடப்பாடி பழனிசாமி மறுத்து வந்தார். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்று சொல்லிவிட்டார்கள். அண்ணாமலை ஒருபடி மேலே போய் பாஜக ஆட்சி என்று சொன்னார். தற்போது அமித்ஷாவும் அதையே சொல்கிறார்.

அதிமுகவில் பொதுச் செயலாளர் தான் முதலமைச்சர் வேட்பாளர் ஆவார்கள். இந்நிலையில் அதிமுகவில் ஒரு கிளைச் செயலாளரை கூட பொதுச் செயலாளர் ஆக்குவோம் என்று சொல்கிறார்கள். எடப்பாடியும் ஒரு கிளைச் செயலாளராக இருந்து மேலே வந்தவர் தான். இதை எப்படியோ அமித்ஷா தெரிந்து கொண்டுள்ளார். அப்போது, எதற்காக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும். எடப்பாடியிலே இன்னொரு கிளைச் செயலாளர் இருக்க மாட்டானா? என்று பார்க்கிறார்கள். அதனால் முதலமைச்சர் வேட்பாளரை அவர்களே முடிவு செய்வார்கள். வரிசையாக செங்கோட்டையன், வேலுமணி போன்றவர்கள் நிற்கிறார்கள். யாரை வேண்டுமானாலும் முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கலாம். யார் நமக்கு அதிகம் குனிந்து கும்பிடுகிறார்கள். யார் சாஷ்டாங்கமாக காலில் விழுகிறார்கள். யார் அதிகம் பணிந்து நடக்கிறார்கள் என்று ஜெயலலிதா தான் பார்க்க வேண்டுமா? அமித்ஷா பார்க்கக்கூடாதா? ஜெயலலிதா காலத்தில் யார் அதிகம் காலில் விழுந்தார்களோ, அவர்கள்தான் அமைச்சர்கள் ஆனார்கள். தற்போது ஜெயலலிதாவின் இடத்திற்கு அமித்ஷா வந்துவிட்டார். அதிமுகவினருக்கு பாஜக உடன் கூட்டணி செல்வது பிரச்சினை இல்லை. கட்சிக் கொடியில் அண்ணா படம் உள்ளது. அதை எப்படி அகற்றுவது என்று தெரியவில்லை. அண்ணா படத்தை அகற்றிவிட்டால் அது திமுக கொடியாக மாறிவிடும். அப்போது கொடியில் உள்ள அண்ணாவை எப்படி அமித்ஷாவாக மாற்றுவது என்று கட்சியினரிடம் யோசனை கேட்பதற்காக எடப்பாடி சுற்றுபயணம் மேற்கொண்டிருக்கிறார்.

ஒரு கட்சிக்கு கொள்கை என்பது அவர்கள் கட்டியிருக்கிற வேட்டி போன்றது. பதவி என்பது அவர்களின் தோள் மீது கிடக்கும் துண்டு போன்றது என்று பேரறிஞர் அண்ணா சொல்கிறார். தற்போது தோள் மீது கிடக்கும் துண்டு வேண்டும் என்பதற்காக அதிமுகவினரின் வேட்டியை, அமித்ஷா கும்பல் அவிழ்த்துவிட்டனர். முருகர் மாநாட்டில் வேறு ஒருமுறை வேட்டியை அவிழ்த்துவிட்டார்கள். திமுக – அதிமுக கட்சிகள் இடையே தலைமையில் தான் முரண்பாடு உள்ளதே தவிர தத்துவத்தில் முரண்பாடு கிடையாது. இருவருக்கும் மொழிக்கொள்கை, சமூகநீதி என அனைத்து கொள்கைகளும் ஒன்றுதான். தற்போது எஸ்.பி.வேலுமணி சம்பந்தமே இல்லாமல் ஆர்எஸ்எஸ்-ன் கோட்பாடுகளுக்கு துணை போகிறார். அந்த அமைப்பின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டுள்ளார். தளவாய் சுந்தரத்தை நீக்கியது போன்று, வேலுமணியை நீக்கியது போன்று அவரை நீக்க எடப்படிக்கு தைரியம் கிடையாது. அல்லது கட்சியின் கட்டுப்பாட்டை மீறி டெல்லியுடன் தொடர்பு வைத்து, கட்சிக்கு துரோகம் செய்கிற செங்கோட்டையனை நீக்குகிறேன் என்று சொல்லக்கூடிய இடத்தில் எடப்பாடி பழனிசாமி கிடையாது. தற்போது பாஜக என்கிற கட்சி அதிமுகவை விழுங்க பார்க்கிறது என்கிற உண்மையை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள். முருக பக்தர்கள் மாநாடு குறித்து ராஜேந்திர பாலாஜி, வைகைச் செல்வனை வைத்து அறிக்கை விடுகிறார்கள். 4 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் பாஜகவை பார்த்து, யானை போன்ற பெரிய கட்சியான அதிமுக பயப்படுகிற இடத்திற்கு வந்துள்ளது. இதை அதிமுக தொண்டர்கள் ரசிக்க மாட்டார்கள்.

அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள முரண்பாடுகள் தீர்வதற்கு, கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவது தான் வழியாகும். அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பயம் இருக்கலாம். ஆனால் எந்த வித பலன்களையும் அனுபவிக்காத லட்சக்கணக்கான தொண்டர்கள் இதை ஏன் அனுசரித்து செல்ல வேண்டும். எம்ஜிஆர் வளர்த்த கட்சி, ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி அதிமுக என்பதால்தான் தொண்டர்கள் உள்ளனர். ஜெயலலிதாவிடம் இருந்த துணிச்சலில் கால்வாசி கூட எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. முரண்பட்டவர்களை ஒருங்கிணைப்பதிலும் அவர் கோட்டை விட்டுவிட்டார். மறுபடியும் ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களை கட்சியில் இணைப்பதில் அவர் தோல்வி அடைந்துவிட்டார். இதனால் முக்குலத்தோர் வாக்கு வங்கி தென் மாவட்டங்களில் சிதறி கிடக்கிறது. தற்போது பொருந்தாக் கூட்டணியை ஏற்படுத்தியதன் மூலம் அவர் கட்சியின் கோட்பாடுகளுக்கு எதிர் நிலைபாட்டிற்கு போய்விட்டார் என்பது தான் உண்மை. கொங்கு மண்டலத்தில் குறிப்பிட்ட பகுதிகளை கழித்துவிட்டு இப்போது அவர்கள் வைத்திருக்கிற சட்டமன்ற உறுப்பினர்கள், என்கிற நிலையை கூட எடப்பாடி பழனிசாமியால் திரும்ப எட்ட முடியுமா? என்கிற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவினருக்கு மடியில் கணம் உள்ளதால் வழியில் பயம் உள்ளது. விசாரணை அமைப்புகள் சோதனைக்கு வந்துவிடுமா என அச்சத்தில் உறைந்துகிடக்கிறார்கள். இப்படி எல்லாம் ஜெயலலிதா பயந்து பயந்து அரசியல் செய்யவில்லை. அவரை பின்பற்றுகிற அரசியலை செய்தாலே, அதிமுக பிழைத்துக்கொள்ளும். தற்போது அமித்ஷா காலடியில் கொண்டுவந்து அதிமுகவை அடமானம் வைத்துவிட்டார்கள். எம்ஜிஆர் மாளிகை என்கிற பெயரை எடுத்துவிட்டு, அமித்ஷா மாளிகை என்று மாற்றிவிடுவார்கள். அதிமுக என்கிற கட்சி கரைந்துகொண்டே இருக்கிறது. பாஜக அதைவிழுங்க பார்க்கிறது. இதை புரிந்துகொள்ள தொண்டர்கள் தயாராகி விட்டார்கள். ஆனால் தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த அச்சத்தை நீக்குவதற்காக தான் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அதிமுக என்கிற கட்சி காப்பாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்த இடத்தில் வகுப்புவாத சக்திகள், மதவாத சக்திகள் அந்த இடத்தை நிரப்ப தயாராகி விட்டார்கள். அவர்களுக்கு அதிமுக பலியாகக்கூடாது என்பதுதான் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது.

அமித்ஷா வடமாநிலங்களில் கட்சிகளை உடைத்தது போன்று, திராவிட இயக்கம் உள்ள தமிழ் மண்ணிலும் அதை நிகழ்த்த முடியும் என்று நினைக்கிறார். அவருடைய ஓவர் கான்ஃபிடன்ஸ் இந்த கூட்டணியை உடைக்காமல் விடாது. அண்ணாமலையும், அமித்ஷாவும் இணைந்து அதிமுக கூட்டணியை உடைப்பதற்கு பொறுப்பேற்று கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினுடைய வெற்றியை இலகுவாக்குவதற்கு தான் அது உதவிடுமே தவிர, இவர்கள் போடுகிற இந்த முரண்பாடு என்பது கட்சியை பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். பாஜக மீண்டும் இந்த 4 எம்எல்ஏக்களை பெறும் வாய்ப்பையே இழந்துவிடுவார்கள். அதிமுக இன்னும் பெரிய பின்னடைவுக்கு போகும். ஸ்டாலின் சொல்வது போன்று 200 இடங்களில் திமுக செல்லும் என்பதை சாத்தியப்படுத்துவதற்கான குழப்பங்கள் எதிர்க்கட்சி அரசியலில் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


