மேலாடை அணிவதை தடுத்த சனாதன சக்திகள்; பெண்கள் வெகுண்டெழுந்த தோல்சீலை போராட்டம்; 200 ஆண்டுகளுக்கு முன்பே ஓங்கி ஒலித்த சுயமரியாதை முழக்கம்; மகளிருக்கு எதிரான அநீதியை முடிவுக்கு கொண்டு வந்த மாபெரும் போராட்டம் தோல்சீலை போராட்டம் – மகளிர் மானம் காத்த வரலாறு.
19ஆம் நூற்றாண்டில் சாதி கொடுமைக்கு எதிராக உக்கிரமாக நடைபெற்ற போராட்டமே தோல்சீலை போராட்டம். இந்தியாவில் சாதி கொடுமைகளுக்கு எதிராக எத்தனையோ போராட்டங்கள் நடைபெற்று இருந்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த பெண்கள் மேலாடை அணிந்து கொள்ளும் உரிமைக்காக நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம் இது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பெண்களுக்கு எதிரான வக்கிரமான நடவடிக்கையை எதிர்த்தே இந்த போராட்டம் தொடங்கியது. சுமார் 40 ஆண்டுகள் நடைபெற்ற தோல் சீலை போராட்டத்தின் 200 வது ஆண்டு நிறைவு விழா தற்போது கொண்டாடப்படுகிறது.
இந்த தருணத்தில் வரலாற்று சிறப்புமிக்க தோல் சீலை போராட்டம் ஏன் தொடங்கியது? இவ்வளவு கொடூரமான சாதியை ஒடுக்குமுறை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நிலவ என்ன காரணம்? தோல் சீதை போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் என்ன? என விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு.
மனித சமூகம் நாகரீகமடைய தொடங்கியது ஆடைகளை அணிய தொடங்கிய போது தான். மனிதர்களுக்கான அடிப்படை தேவைகளில் உணவுக்கு அடுத்த இடத்தில் உடைதான் வரையறுக்கப்படுகிறது. அதற்கு அடுத்த இடத்தில் தான் உறைவிடம் உள்ளது. ஆள் பாதி ஆடை பாதி எனும் அளவுக்கு உடைகள் மனிதர்களின் சுயமரியாதையோடு தொடர்புடையது என்பதால் மானத்தை மறைப்பதற்கான உடைகள் மனிதர்களின் அங்கமாகவே மாறிவிட்டன.
உலகம் முழுக்க இப்படி ஒரு நியதி இருந்தாலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட சாதிகளின் கட்டமைப்பு ஒவ்வொரு சாதியினரும் எவ்வாறு உடை அணிய வேண்டும் என வரையறுத்தது.
குறிப்பிட்ட சாதிகளை சேர்ந்தவர்கள் தோளில் துண்டு போடக்கூடாது காலில் செருப்பு போடக்கூடாது என்றெல்லாம் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இத்தகைய கொடுமைகள் எல்லாம் வேற எந்த பகுதியை விடவும் மிகவும் அதிகமாக கோலோச்சிய பகுதி தான் திருவிதாங்கூர் சமஸ்தானம்.
இன்றைய கேரளாவில் உள்ள மலபார் இரண்டு மாவட்டங்கள் தவிர தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் அனேக பகுதிகளையும் உள்ளடக்கியதுதான் அன்றைக்கு திருவிதாங்கூர் சமஸ்தானமாக விளங்கியது. திருவனந்தபுரத்தை தலைமை இடமாகக் கொண்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மன்னர்கள், நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் தவிர அனைத்து சாதி மக்களும் தீண்ட சகாதவர்களாக கருதப்பட்டனர்.
நம்பூதிரிகள் இருக்கும் இடத்திலிருந்து தீண்ட தகாதவர்களாக கருதப்பட்ட மக்கள் பல அடி தூரம் விலகியே நிறுக்க வேண்டும் என்ற அளவிற்கு சாதி வெறி மேலோங்கி இருந்தது. நம்பூதிரிகள், நாயர்கள் தவிர்த்த பிறர் சாதியினர் குடைப்பிடிக்க கூடாது, செருப்பு அணியக்கூடாது, குளம், கிணறு, சாலை, சந்தை ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது, ஆண்கள் மீசை மற்றும் தாடி வைத்துக்கொள்ள கூடாது, அப்படி மீசை, தாடி வைக்க விரும்பினால் அதற்கு தனி வரி செலுத்த வேண்டும், கல்லாமை, காணாமை, நடவாமை, தீண்டாமை என அனைத்து வடிவங்களிலும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வந்தது.
ஆண்களுக்கே இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்றால் பெண்களின் நிலையை கேட்கவே வேண்டாம். சாதி பாகுபாடு இன்றி அனைத்து பெண்களையும் கட்டுப்பாடுகள் கழுத்தை நெறித்தன. உயர் சாதி பெண்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது, கோயில் போன்ற இடங்களுக்கு செல்லும்போது முகத்தை குடையால் மறைத்துக் கொள்ள வேண்டும், கணவர் மற்றும் நெருங்கிய உறவினர்களை தவிர வேறு ஆண்களிடம் பேசக்கூடாது என எதற்கெடுத்தாலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
உடைகள் அணிவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உயர் சாதி பெண்களுக்கே இவ்வளவு கட்டுப்பாடுகள் என்றால் தீண்ட தகாதவர்களாக கருதப்படும் சாதிகளை சேர்ந்த பெண்களின் நிலைமை பற்றி சொல்ல வேண்டுமா. தீண்ட தகாதவர்களாக கருதப்பட்ட சாதிகளை சேர்ந்த பெண்கள் மார்பகங்களை மறைக்கும் வகையில் எந்த உடையும் உடுத்த கூடாது என்றும் அவ்வாறு மார்பகங்களை மறைத்து உடை அணிந்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுதான் மூலக்கரம் என்ற மார்புவரி.
மார்பு வரி செலுத்தினால் உயர்சாதியினர் முன்பாக மேலாடை அணிந்து கொள்ளலாம். ஆனால் வரி செலுத்தி இருந்தாலும் நம்பூதிரிகள் முன்பாக மேலாடை அணிய முடியாது. இதனை எதிர்த்து போராட்டத்தை தொடங்கி வைத்தார் சேர்த்தலா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஈழவர் சமூகப் பெண்ணான நங்கேலி.
மார்புவரி விதிக்கப்பட்டதற்கு எதிராக நங்கேலி எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைய இறுதியாக தனது உயிரையே ஆயுதம் ஆக்கினால் நங்கேலி. மார்பு வரி வசூலிக்க நாயகர்கள் வந்த போது தனது இரு மார்பகங்களையும் அறுத்து வீசி உயிர் நீத்தாள் நங்கேலி.
நங்கேலியின் சிதைக்கு மூட்டிய தீயில் அவளது கணவன் சிறுகண்டனும் குதித்து உயிரிழந்தான். நங்கேலியின் தியாகத்தால் தோல் சீலை போராட்டம் தீவிரமடைந்தது. நங்கேலியின் உயிர் தியாகத்தை மையமாகக் கொண்டு கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான 19 ஆம் நூற்றாண்டு திரைபடம் பெரும் வெற்றியை பெற்றது.
இதற்கிடையே மதமாற்றத்தில் ஈடுபட்ட ஆங்கிலேய கிறிஸ்தவ பாதிரியார்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் பெண்களுக்கு மார்பை மறைத்துக் கொள்ளும் உரிமையை ஆங்கிலேய சட்டப்படி பெற்று கொடுத்தனர். இதனை பின்பற்றி ஹிந்து மதத்தைச் சேர்ந்த தீண்டப்படாத சமூகத் தவறாத கருதப்பட்ட பெண்களும் மேலாடை அணிய தொடங்கிய போது நாயர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு சில பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் மாகாணம் முழுவதும் பரவத் தொடங்கியது. மார்பு வரிக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் மேலாடைகளை நாயர்கள் கிழித்து எரிந்தனர். தோட்டாரு உள்ளிட்ட பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன.
போராட்டத்தின் போக்கில் இந்துக்களாக இருந்த தீண்டப்படாத மக்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தீண்டப்படாத மக்களும் ஒன்று சேர்ந்து போராட தொடங்கினர். இந்த காலகட்டத்தில் வாழ்ந்த அய்யா வைகுண்ட ஸ்வாமியும் இந்து மதப் பெண்களும் உரிமைகளை மீட்டெடுக்கலாம் என அழைப்பு விடுத்தார்.
தன்னிடம் வந்து அடிதட்டு மக்களை தலைப்பாகை கட்டுமாறும் பெண்கள் மார்பை மறைக்கும் ஆடைகள் அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். ஒருபுறம் கிறிஸ்தவ மதமாற்றமும் மறுபுறம் அய்யா வைகுண்ட ஸ்வாமியும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஒடுக்கப்பட்ட சமூக பெண்களுக்கு மார்பை மறைக்கும் உரிமையை பெற்று கொடுத்ததில் கிறிஸ்தவ மத பரப்புரைக்காக வந்த வில்லியம் டோபியாஸ் ரிங்கெல் டொபே மற்றும் மீட் ஐயர் ஆகிய பாதிரியார்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருந்தது.
இதற்கிடையே 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியை தொடர்ந்து மதப்பழக்க வழக்கங்களில் அரசு தலைமையிடக்கூடாது என பிரிட்டிஷ் மகாராணி உத்தரவிட்டது தோல் சீலை உரிமைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
மகாராணியின் உத்தரவு இந்து பெண்களுக்கு மட்டும் இன்றி கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பெண்களுக்கும் எதிரானதாக திரும்பியது. இறுதிக்கட்ட போராட்டம் பிரச்சனையை தீர்வை நோக்கி நகர்த்தியது. இதில் போராடும் மக்களோடு கிறிஸ்தவ மிஷனரிகளும் இணைந்து கொண்டனர். 1857, 1858, 1859 ஆம் ஆண்டுகளில் தோல்சீலை போராட்டம் தீவிரம் அடைந்தது.
பல பகுதிகளில் களம்பரம் வெடித்து வன்முறை காடாக மாறியது. இதன் பலனாக சென்னை ஆளுநராக இருந்த டுவிலியன் 1859 மே 6ஆம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கான ஆங்கிலேய பிரதிநிதிக்கு கடிதம் எழுதினார். இதில் அனைத்து மக்களுக்கும் உண்மையான நீதியும் பாதுகாப்பும் வழங்கப்பட வேண்டும் என சென்னை ஆளுநர் வலியுறுத்தினார்.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டிருந்த திருவிதாங்கூர் மன்னர் சென்னை ஆளுநரின் உத்தரவை மீற முடியாமல் 1859 மே 20 ஆம் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டார். கிறிஸ்தவ மதத்தை தழுவிய பெண்கள் மார்பை மறைக்கும் ஆடை அணிந்து கொள்ளலாம் என்றும் அதே நேரத்தில் உயர் சாதி பெண்களைப் போன்று தோல்சீலை அணிய கூடாது என்றும் உத்தரவிட்டார்.
ஒரு வழியாக 54 ஆண்டுகளுக்குப் பிறகு சாதி ஒடுக்குமுறையால் அவதிப்பட்டு வந்த பெண்களுக்கு மார்பை மறைக்கும் ஆடை அணியும் உரிமை கிடைத்தாலும் மேலாடை அணிவதற்கான உரிமை கிடைக்கவில்லை. உத்தரவில் தோல் சீலை அணிவதற்கான அனுமதி வழங்கப்படாத போதும் காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் துணிவுடன் தோல் சீலை அணிய தொடங்கினார். பல ஆண்டுகளாக நீடித்த தொடர் போராட்டங்கள் ஆங்கிலேய அரசாங்கத்தின் உத்தரவு ஆகியவற்றின் காரணமாக உயர் சாதியினர் இதனை வலுவாக எதிர்க்கக் முடிய வில்லை.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சென்னை மாகாணத்தில் சமூக சீர்திருத்த இயக்கங்கள் வலுப்பெற்றதும் உயர் சாதியினர் பின்வாங்கியதற்கு மற்றொரு முக்கிய காரணமாக இருந்தது.
இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க தோல் சீலை போராட்டத்தின் 200 ஆம் ஆண்டு நிறைவு விழா தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது.
ஒடுக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களை நினைவு கூறுவதன் மூலமாக தற்போதைய தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் பிற்போக்கு சக்திகளை அடையாளம் காட்ட வேண்டியது காலத்தின் தேவை என்றால் அது மிகை இல்லை.