Homeசெய்திகள்கட்டுரை2026லும் ஸ்டாலின் ஆட்சி! அமித்ஷாவை கதறவிட்ட சீ ஓட்டர் சர்வே!

2026லும் ஸ்டாலின் ஆட்சி! அமித்ஷாவை கதறவிட்ட சீ ஓட்டர் சர்வே!

-

- Advertisement -

தமிழ்நாடு அரசுடன் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்  நூறு நாள் வேலை உறுதித்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது மிகவும் கொடுமையானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் குறித்த சி- ஓட்டர் கருத்துக்கணிப்பு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:- நூறு நாள் வேலைத் திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு 5 மாதங்களாக ரூ.4,000 கோடி நிதி வழங்காமல் இருப்பதை கண்டித்து திமுக இன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியுள்ளது. இந்த விவகாரம் கிராமங்களில் பெரிய அளவில்  கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கிராமங்களில் மாதக்கணக்கில் பணம் கொடுக்காமல் இருக்கிறார்கள். இதனால் அந்த திட்டத்தை நிறுத்தப் போகிறார்கள் என்று அச்சமடைந்துள்ளனர். தற்போது திருவிழா காலமாகும். 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள பணம் கிடைத்தால்தான் அவர்கள் திருவிழாவையே மகிழ்ச்சியாக கொண்டாட முடியும். கிராம வாழ்க்கை என்பது பெரிய அளவுக்கு பண பலமோ, நிரந்தர வருமானமோ இல்லாததாகும். என்னதான் மாநில அரசோடு கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை வந்து நிறுத்திவைப்பது என்பது மிகவும் கொடுமையானதாகும். அதை நிச்சயமாக சேடிஸ்ட் என்று தான் சொல்ல வேண்டும்.

இதுகுறித்து அண்ணாமலை ஏன் வாய் திறக்க மறுக்கிறார்? எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்தித்து தமிழ்நாட்டு பிரச்சினைகள் குறித்து பேசியதாக சொல்கிறார். தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதியை, குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்திற்கு வர வேண்டிய நிதியை தர சொல்லலாம் அல்லவா?.  கிராமங்களில்  விவசாய பணிகள் இல்லாத போது, குறைந்தபட்சம் 100 நாட்களாவது அவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்கிற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அது. அது இலவச பணி எல்லாம் கிடையாது. கிராமத்திற்கு உள் கட்டமைப்புகளை ஏற்படுத்தி தருகிற விதமாக 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படுகிற ஏராளமான தஞ்சை மாவட்ட கிராமங்கள் எனக்கு தெரியும். வியர்வை சிந்தி வேலை பார்த்துவிட்டு, அதற்காக இவ்வளவு நாளாக கூலி வழங்கவில்லை என்றால் அது பாஜக அரசுக்கு ஏற்பட்ட அவமானமாகும். இதற்காக வெட்கி தலைகுனிய வேண்டும்.

100 நாள் வேலை திட்டம்

நூறு நாள் வேலைத் திட்டப்பணிகள் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். மழை வெள்ள காலத்திலோ, விவசாய பணிகள் நடைபெறும் சமயத்திலோ பணிகள் நடைபெறாது. எனது பூர்விகமான காவிரி ஆற்றின் கடைமடை பகுதிகளில் விவசாய பணிகள் முடிந்துவிட்டது. ஆனால் காவிரியில் இருந்து குளத்தில் தண்ணீர் தேக்கி வைத்த பகுதிகளில், தற்போது விவசாய பணிகள் உச்சத்தில் உள்ளது. அதனால் ஒரு பகுதியில் பணிகள் நடைபெறும். மற்றொரு பகுதிகளில் பணிகள் நடைபெறாது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் நேடியாக பணியாளர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுகிறது. நூறு நாள் வேலை உறுதி திட்டம் என்றால், 100 நாட்களுக்கு வேலை உறுதியாகும். அப்படி என்றால் அதற்கான பணமும் உறுதியானதாகும். அதை என்னுடைய மாதாந்திர வரவு செலவு கணக்கில் வைத்துள்ளேன்.

இது நேரடியாக மக்களை தொடும் பிரச்சினையாகும். இருமொழி கொள்கை, தொகுதி மறுவரையறை போன்ற விஷயங்களை தாண்டியது இது. கண்டிப்பாக அனைத்து கிராமங்களுக்கும் இது போகும். திமுக  இதை எப்படி அரசியலாக பயன்படுத்துகிறது என்றால் ஒரு ஒன்றியத்திற்கு 2 இடங்களில் போராட்டம் நடத்துகிறது. எங்கள் பகுதிகளில் பாதி ஒன்றியம் அங்கே தான் இருக்கிறது. ஏனென்றால் இது மக்களை நேரடியாக பாதிக்கக்கூடிய விஷயமாகும். இதில் நிதி வழங்குவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்? அப்படி என்ன தமிழ்நாட்டை வஞ்சிக்க வேண்டும் என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. மக்களுடைய கோபம் பாஜகவுக்கு எதிராக இருக்கிறது.

சி ஓட்டர் கருத்துக்கணிப்பு போன்றவற்றை நான் எச்சரிக்கையுடன் தான் அணுகுவேன். இதுபோன்ற சர்வேக்களில் கேள்விகள் கேட்கப்படுவர்களின் எண்ணிக்கை என்பது போதாது. தமிழ்நாட்டில் தேர்தல் என்பது இன்னும் செட் ஆகவில்லை. பொதுவாக தலைமைத்துவம் என்பது மூன்று வகைப்படும். அதில் அரசியல் தலைமைத்துவம் தான் முதன்மையானது. அடுத்ததாக சமுதாயத் தலைமைத்துவம். இறுதியாக தொழில் தலைமைத்துவம் ஆகும். உதாரணமாக சினிமாத் துறையில் உச்ச நட்சத்திரமாக உள்ளவர்கள், அரசியல் தலைமைத் துவத்திற்கு செல்ல வேண்டும் என்றால், சமுதாய தலைமைத்துவம் என்கிற முக்கிய கட்டத்தை கடந்தாக வேண்டும். அதாவது பெரியார் போல சமுதாயத்திற்கு பாடுபட வேண்டும். அது ஒரு மிக நீண்ட படிநிலையாகும். விஜய் இன்னும் அந்த படிநிலைகளை தாண்டவில்லை. அவர் திரைத் துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் சமூக தலைமைத்துவத்திற்கு செல்லவே இன்னும் காலமாகும். அவரை தமிழ் சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி இருக்கும்போது தற்போது ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி, அதில் விஜய் 2வது இடம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை ஆகியோரை நீங்கள் ஒப்பிடலாம். ஏனென்றால் அவர்கள் 2 படிநிலைகளை கடந்துவிட்டனர். அரசியல் தலைமைத்துவத்திலும் எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் நிருபித்துவிட்டனர். அண்ணாமலைக்கு, ஐபிஎஸ் அவரது ஆரம்ப பணி என்றால் அதற்கு அடுத்த கட்டத்தை தாண்டி, அதற்கும் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். எனவே அவர்களைதான் தான் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். விஜயை இந்த கருத்துக் கணிப்புகளுக்கு எடுத்து வந்ததே தவறு என்று நான் நினைக்கிறேன். எது எப்படி இருந்தாலும் நாம் எது தமிழ்நாட்டிற்கு நல்லது என்றுதான் அணுக வேண்டும். நாடு முழுவதும் பாஜகவின் மதவாதம் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். பாஜக ஆளும் சில மாநிலங்களில் ரம்ஜானுக்கான பொது விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதெல்லாம் வாக்குகளை கவரும் முயற்சியாகும்.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

பொது சிவில் சட்டம் என்பது மத்திய அரசின் கொள்கையாகும். அந்த சட்டங்களை தாண்டி மாநிலம் எப்படி பொது சிவில் சட்டத்தை நிறைவேற்ற முடியும். ஆனால் உத்தரகாண்ட் நிறைவேற்றியுள்ளது. ஜனாதிபதி அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார். உத்தரகாண்ட் சட்டத்தின்படி ஒரு திருமணம் செல்லாது என்றால், மத்திய அரசின் சட்டத்தின்படி அது செல்லும். இதுபோன்ற விஷயங்களில் அப்படி சட்டம் இயற்ற முடியாது. அரசியலமைப்பு சட்டத்தையே மீறி ஒரு மாநிலம் பொதுசிவில் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக அதை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி அதில் கையெழுத்து போடுகிறார். அனைத்து கூறுகளையும் தாண்டி மாநில அரசு ஒரு சட்டம் போடுகிறது. நாடு எப்படி போனாலும் பரவாயில்லை. நமது வாக்கு வங்கியை ஒருமுனைப்படுத்த வேண்டும் என்பதுதான் இதற்கு காரணமாகும்.  பாஜகவை நாம் எதிர்ப்பதற்கான முக்கிய காரணமும் அதுதான். அண்ணாமலை என்ன வேண்டும் என்றாலும் சொல்லலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு இப்படி தான் இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகள் ஒன்றாக சேர்கிறபோது அது உருக்கொள்கிற விதம் என்பது பாஜகவுக்கு எதிராக உள்ளது.

விஜய் என்ன விதமான அரசியலை செய்ய பார்க்கிறார் என்றால் திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள வாக்குகள் வரும். பாஜகவுக்கு எதிரான வாக்குகளில் ஒரு பகுதியையும் எடுக்கலாம் என்று பார்க்கிறார். இது தான் அவரது எளிமையான நோக்கமாகும். அதிமுக – பாஜக கூட்டணி எப்போது வருகிறதோ, அப்போது இரண்டும் ஒன்றாக தான் தெரியும். அதிமுக – பாஜக கூட்டணி வரலை வரலை என்று இவர்கள் மறுத்தாலும், அதை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். இந்தியாவின் இரும்பு மனிதரும், தமிழ்நாட்டின் இரும்பு மனிதரும் சந்தித்து பேசினால் வேறு என்ன பேச போகிறார்கள்?. தமிழ்நாட்டில் பாஜக எந்த அளவுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதோ, அந்த அளவுக்கு அதிமுகவும் தனிமைப் படுத்தப்படும். அப்போது அந்த வாக்கு வங்கி தனக்கு வரும் என்று விஜய் அரசியல் செய்கிறார். அப்படி செய்யும்போது தான் இதுபோன்ற கருத்துக்கணிப்புகள் எல்லாம் வருகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ