Homeசெய்திகள்கட்டுரைமனித இனத்தின் அடிப்படை தத்துவமே மற்றவர்களுக்காக வாழ்வது தான் - மாற்றம் முன்னேற்றம் - 13

மனித இனத்தின் அடிப்படை தத்துவமே மற்றவர்களுக்காக வாழ்வது தான் – மாற்றம் முன்னேற்றம் – 13

-

13. மனித இனத்தின் அடிப்படை தத்துவமே மற்றவர்களுக்காக வாழ்வது தான் – என். கே. மூர்த்தி

”என்ன நடந்தாலும், எதை இழந்தாலும்,சோர்ந்து போக மாட்டேன்.
காரணம் நான் நுறு வெற்றிகளை பார்த்தவன் அல்ல.
நான் நூறு தோல்விகளை பார்த்தவன் ”- தாமஸ் ஆல்வா எடிசன்

நான் அடிக்கடி என் நண்பர்களிடம் பேசும் போது சொல்வேன். மனித இனத்தின் அடிப்படை தத்துவமே மற்றவர்களுக்காக வாழ்வதுதான். நாம் புதிய கருவிகளை கண்டுபிடிப்பது, பணம் சம்பாதிப்பது, தொழிலதிபராக வளர்ச்சி அடைவது, அமைச்சராவது, புகழ் பெறுவது என்று நாம் எதுவாக வளர்ந்தாலும் சகமனிதர்களின் தேவைக்காகவே. அது மனைவி, மகன், உறவினர், நண்பர், அறிமுகம் இல்லாதவர் என்று நமது செயல்பாடு ஒவ்வொன்றும் மற்றவர்களுக்காகவே அமைகிறது.

தலைமை செயலாளர் இறையன்பு

தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் இறையன்புவின் அதிகபட்சம் தேவை காலையில் நான்கு இட்லி, மதியம் கொஞ்சம் சாம்பார் சாதம், கொஞ்சம் தயிர் சாதம் அவ்வளவு தான் என்கிறார்.

தனி மனித தேவை என்பது மிகக் குறைவு. ஆனால் அதற்காக உழைக்காமல் எவரும் இருப்பதில்லை. சலிப்பும், ஓய்வும் தற்கொலைக்கு சமம் என்றார் தந்தை பெரியார்.

எனக்கான தேவை குறைவானதாக இருக்கும் போது நான் ஏன் உழைக்க வேண்டும்? என்கிற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். நாம் இந்த சமுதாயத்தில் தனி மனிதர் அல்ல. குடும்பமாகவும், உறவாகவும், நட்பாகவும், ஊராகவும், மாநிலமாகவும், தேசமாகவும், உலகமாகவும் ஒன்றோடு ஒன்று பிணைந்து கட்டமைக்கப்பட்டுள்ளோம். நாம் யாரும் தனிமனிதர் அல்ல.

ஒன்றோடு ஒன்று பிணைந்து கட்டமைக்கப்பட்டுள்ளோம்

நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் மற்றவர்களை பாதிக்கும். நாம் நன்மையை செய்தால் இந்த சமுதாயத்திற்கு பயன் கொடுக்கும். நாம் பிறருக்கு தீங்கு செய்தால் அது நம்மையும் பாதிக்கும், சமுதாயத்தையும் பாதிக்கும்.

அதனால் நமது செயலில் கவனம் தேவை. ஒவ்வொரு நொடியும் செயல்பாட்டின் மீது கவனம் செலுத்த வேண்டும். உலகில் சுயநலம் என்று ஒன்று இல்லை. ஆனால் அதை தவறான முறையில் கற்பிக்கப்பட்டு இருக்கிறோம்.

சிலர் சுயநலம் என்ற தவறான புரிதலில் மற்றவர்களை துன்புறுத்துகிறார்கள். வலியை உண்டாக்குகிறார்கள். அதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். நான் இந்த நூலின் வழியாக வாழ்க்கையின் முன்னேற்றத்தை பற்றிதான் பேசுகிறேன். ஆனால் சுயநலம் என்கிற தவறான பாடத்தை கற்பிக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி விடுகிறேன்.

சுயநலம் என்பது இல்லை. அது மற்றவர்களுக்கு துன்பத்தை கொடுத்து, தான் இன்பத்தை அடைகிற ஒழுக்கம் இல்லாத குணம்.

பக்கத்து வீட்டுக்காரன் இடத்தில் அரை அடிக்கு ஆசைப்படுவது என்பது அந்த இடத்தை அபகரித்து பங்களா கட்ட வேண்டும் என்பதை விட அவர் கண்ணீர் விட வேண்டும். அதில் நமது மனம் சுகம் காண வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இது ஒரு தவறான பழக்கம்.

இதுபோன்ற எண்ணங்களை வளர்த்துக்கொள்ள கூடாது என்பதை இந்த நூல் கற்பிக்கிறது.

சுயநலம் என்கிற தவறான எண்ணம் மிகவும் ஆபத்தானது. அது பிறருக்கு ஒரு சதவீதம் துன்பத்தை கொடுப்பதாக கருதி தன் வீட்டிற்கு கூடுதலாக பத்து சதவீதத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

நான் மீண்டும் முதலில் சொன்னதை நினைவுப்படுத்துகிறேன். நமது எண்ணம் தான் நமது வாழ்க்கை. எதை விதைத்தாயோ அதையே அறுவடை செய்வாய்.

வாழ்க்கை அழகானது. உண்மையானது. நமது வாழ்வும் சத்தியமானது. அதில் கோபத்தை கொட்ட வேண்டாம்.

இந்த சமுதாயத்தில் பெரும்பான்மை மக்கள் வறுமையிலும் ஒரு சிறிய கூட்டத்தினரிடம் செல்வமும் நிறைந்த மேடும் பள்ளமும் உள்ள சமுதாயம்.
இங்கே பொறாமை குணத்திற்கு பஞ்சமில்லை, துயரமும், கண்ணீரும், காணும் திசையெல்லாம் நிறைந்து இருக்கிறது.

கிழிந்த கந்தலை திரியாக மாற்றுவோம்

கிழிந்த கந்தல் துணியாக வாழ்க்கை திசை மாற்றப்படுகிறது. அந்த கிழிந்த கந்தலை திரியாக மாற்றுவோம். கோபுரத்தில் எரிகின்ற ஒரே ஒரு திரி, ஊருக்கே வெளிச்சத்தை கொடுக்கும். இந்த நூல் ஓராயிரம் திரிகளை உற்பத்தி செய்யும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 

                                                                                               தொடரும் ….

MUST READ