காமராஜர் குறித்து தவறான தகவல் எதையும் திருச்சி சிவா சொல்லவில்லை. இந்த விவகாரத்தில் திமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு எந்த வித அருகதையும் கிடையாது என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில், இதன் பின்னால் உள்ள அரசியல் குறித்து மூன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- காமராஜர் விவகாரத்தில் திருச்சி சிவா எந்தவிதமான தவறான தகவல்களையும் சொல்லவில்லை. பழுத்த அரசியல்வாதியும், சிறந்த நாடாளுமன்றவாதியுமான திருச்சி சிவா தான் சரியாக பேசுகிறபோதும் கூட, சிலர் அதை வேறுவிதமாக திரித்து கூறுவார்கள் என்று உணர்ந்திருந்தார் என்றால் இந்த பேச்சே வந்திருக்காது. திருச்சி சிவா சொன்னதில் பொய் எதுவும் கிடையாது. காமராஜர் குறித்து திருச்சி சிவா மட்டும் சொல்லவில்லை. தமிழருவி மணியன் உள்ளிட்டோரும் சொல்லி உள்ளனர்.
காமராஜர் குறித்து எதற்கு தேவையில்லாத கதைகளை சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளியவர்கள் அனைவரும் கல்வி பயில முடியும் என்பதற்கு அஸ்திவாரம் போட்டவர் காமராஜர்தான். அவருடை பிறந்தநாளை கல்வி பெருநாளாக கொண்டாட வேண்டும் என்பதை யாராவது மறுக்க முடியுமா? கலைஞருக்கும், காமராஜருக்கும் இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தன. அது உண்மைதான். ஆனால் தொடக்கத்தில் இருந்து பார்த்தால், குலக்கல்வி திட்டத்தை எதிர்த்தார் என்பதற்காக 1954ல் குடியாத்தம் இடைத் தேர்தலில் காமராஜர் நின்போது அவரை திராவிடர் கழகம், திமுக ஆகியோர் ஆதரித்தனர். காமராஜரை எதிர்த்து வேட்பாளர் நிறுத்த வேண்டாம் என்று சொன்னவர் அண்ணா. காமராஜரை பச்சைத்தமிழர் ஆளுகிறார் என்று பெரியார் முழுக்க முழுக்க ஆதரவு அளித்தார்.
அன்றைக்கு அரசியலில் இரு துருவங்களாக இருந்தது காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், திமுகவும்தான். காமராஜரை அண்ணா, கலைஞர் ஆகியோர் விமர்சித்துள்ளனர். பதிலுக்கு காமராஜரும் அவர்களை விமர்சித்துள்ளார். இது அரசியலில் சகஜமான ஒன்று. 1971ல் திமுக, இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்திருந்தனர். அதற்கு எதிராக காமராஜர், ராஜாஜி போன்றவர்கள் இணைந்து இந்த கூட்டணியை எதிர்த்தார்கள். 1972ஆம் ஆண்டு காமராஜர் தனிக்கட்சி தொடங்கியதே காங்கிரஸ் கட்சியின் சூது காரணமாக தான்.
அரியாங்குப்பம் இடைத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வேட்பாளரை, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவளிக்கும் மனநிலையில் இருந்து வந்தது. ஆனால் இந்திரா காந்தி எமெர்ஜென்சியை கொண்டுவந்ததால் காமராஜர், காங்கிரஸ் கட்சியுடன் இணைகிற முடிவை கைவிட்டார். காமராஜர் மறைக்கு பின்னர் நடைபெற்ற 1977 தேர்தலில் திமுக, ஸ்தாபன காங்கிரஸ் உடன் இணைந்துதான் போட்டியிட்டது. ஆனால் காமராஜர் மறைவுக்கு பின்னர் அவருடன் இருந்தவர்கள் அனைவரும், இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டனர். இன்றைக்கு உள்ள காங்கிரஸ் கட்சிதான் இந்திர காங்கிரஸ். அப்போது இவர்கள் எல்லாம் காமராஜருக்கு துரோகம் செய்தவர்கள் என்று சொல்லலாமே.
காமராஜர் குறித்து திருச்சி சிவா சொன்னதை திரித்து சொல்வதால் என்ன பயன் உள்ளது? நன்றாக இருந்த கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சிதான். நிச்சயமாக ஜோதிமணிக்கு வரலாறு தெரியாது என்று நினைக்கிறேன். ஆனால் செல்வப் பெருந்தகைக்கு வரலாறு தெரிந்திருக்க வேண்டும். அவருக்கு திருச்சி சிவா என்ன பேசினார்? எதற்காக பேசினார் என்று தெரிந்திருக்க வேண்டும். அல்லது பேச்சு குறித்து திருச்சி சிவாவிடம் விளக்கமே கேட்டிருக்கலாமே? தற்போது திமுக ஐ.டி.விங் நிர்வாகிகள் கலைஞர் பேசியதை வரிசையாக வெளியிடுகிறார்கள். கலைஞர் சொல்லியதை தான் திருச்சி சிவா சொல்கிறார். திமுக ஆட்சியில் உள்ள மின்வெட்டு குறித்து செல்கிற ஊர்களில் எல்லாம் காமராஜர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். ஆனால், அவருக்கும் வெப்பம் தாளாத அளவுக்கு உடல்நிலை இருந்ததால், அவர் செல்கிற இடத்தில் எல்லாம் உள்ள அரசு பயணியர் தங்கும் விடுதியில் ஏசி பொருத்த ஏற்பாடு செய்தேன் என்று கலைஞர் சொல்கிறார்.
அதுவும் காமராஜரை தாக்கி சொல்லவில்லை. காமராஜர் மீது தனக்கு மரியாதை உள்ளது என்பதை காட்டுவதற்காக தான் இதை சொல்கிறார். இதை பெருந்தன்மையாக தான் காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினையை இழுத்துக்கொண்டிருந்தார்கள் என்றால் காங்கிரசில் உள்ள சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்கள் என்றுதான் அர்த்தமாகும். காமராஜர் விவகாரத்தில் முதலமைச்சர் மிகுந்த கண்ணியத்தோடு சொல்கிறார், இறந்துபோன ஒரு தலைவர் குறித்து தயவு செய்து யாரும், எதுவும் பேச வேண்டாம் என்று சொல்கிறார்.
காமராஜரை விமர்சித்ததற்கு காங்கிரஸ் கட்சியினர், திமுகவுக்கு நெத்தியடி பதில் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். திமுகவில் இருந்து பிரிந்து எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காமராஜர் சொன்னார். இன்று காமராஜரை போற்றுகிற அண்ணாமலையின் கட்சியை சேர்ந்தவர்கள் தான், டெல்லியில் காமராஜரை உயிரோடு கொளுத்த வேண்டும் என்று அவருடைய வீட்டிற்கு தீ வைத்தார்கள்? யார்? யார்? எல்லாம் வேஷம் போட்டு வருகிறார்கள் என்று முதலில் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். காமராஜரை புகழ வேண்டும் என்பதற்காக அவர் ரேஷன் அரிசி சாப்பிட்டார் என்று கதைகள் எழுதுகிறார்கள். அண்ணாமலை மற்றும் அவருடைய பாஜக போன்ற கட்சிகளுக்கு காமராஜரை பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.