திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் விஜயின் கேள்விகளை அங்கீகரித்து பதில் அளிப்பது அவருக்கு இரட்டை அட்வான்ட்டேஜ் ஆகும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

விஜயின் விமர்சனங்களுக்கு திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பிலும் பதில் அளிக்க தொடங்கியிருக்கும் நிலையில், இதன் பின்னணி குறித்து தராசு ஷ்யாம் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- நடிகர் விஜயின் கருத்துக்கு திமுக தரப்பில் பதிலடி தரப்பட்டு வந்த நிலையில், தற்போது அதிமுக தரப்பிலும் பதிலடி தர தொடங்கியுள்ளனர். ராஜேந்திர பாலாஜி, திமுகவை வீழ்த்த விஜய் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என சொல்லி உள்ளார். எனினும் அதிமுக கூட்டணிக்கு விஜய் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதற்கு காரணம் இரண்டு முதலமைச்சர் வேட்பாளர்கள் ஒரே கூட்டணியில் இருக்க முடியாது. விஜயின் கிரவுடு புல்லிங் திறனை பார்த்து அதிமுக கொஞ்சம் யோசிக்கிறது. எனது பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகள் அதிமுக ஆதரவான பகுதியாகும். எடப்பாடி பழனிசாமிக்கும் வாக்குகள் சென்றன. தற்போது விஜயின் வரவு அதிமுகவின் வாக்குவங்கியை பாதிப்பது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு புரிகிறது. ஒருங்கிணைந்த திருச்சி, தஞ்சை மாவட்டங்களை ஆய்வு செய்கிறபோது விஜயால், அதிமுக மற்றும் சீமானின் வாக்குவங்கி பாதிக்கிறது. காரணம் அதிமுக மீது அதிருப்தியில் இருந்தவர்கள் சீமானுக்கு வாக்களித்தனர். அது தற்போது பாதிக்கப்படுகிறது. இருதரப்பில் இருந்தும் வருகிற எதிர்வினைகள் அதை தான் குறிப்பிடுகிறது.
திமுகவை, விஜய் நேரடியாக தாக்கி பேசுகிறபோது அவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. விஜய் கூட்டம் போட்ட அதே இடத்தில், அமைச்சர் கே.என்.நேரு கூட்டம் போட்டு பதில் சொல்கிறார்.அப்போது விஜயை போர்ஸ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலையை நோக்கித்தான் அவர்கள் செல்கிறார்கள். அதேவேளையில் விஜய் குற்றச்சாட்டில் பிழை இருக்கிறது. அதை சுட்டிக்காட்ட வேண்டிய பணி திமுகவுக்கும், அமைச்சர்களுக்கும் வந்துவிடுகிறது. அப்போது விஜய்க்கு இரட்டை அட்வாண்ட்டேஜ் கிடைக்கிறது. எதிர்க்கட்சிகளும் அவரை அங்கீகரித்து எதாவது ஒரு வகையில் பதில் சொல்வது. ஆளுங்கட்சியும் அங்கீகரித்து எதாவது ஒரு வகையில் பதில் சொல்கிறது.இதுதான் விஜயின் இன்றைய தேதிக்கான அட்வான்ட்டேஜ். ஆனால் அதை பயன்படுத்தி விஜய் கட்சியை ஸ்திரப்படுத்துகிறாரா? என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியின் பேருந்து பயணத்தையும், விஜயின் பேருந்து பயணத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதில் எடப்பாடியின் சுற்றுப் பயணத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டி வந்தார்கள். ஆனால் விஜயின் பேருந்து பயணத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை கூட்டிவரவில்லை. பிரச்சாரத்தின் போது பொய்களை பேசினாலோ, அரசியல் ரீதியாக பிழையாக பேசினாலோ பொதுமக்களிடம் அம்பலப்பட்டு போய்விடுவார்கள். அதற்கு காரணம் இன்றைக்கு இருக்கும் ஊடக வளர்ச்சியாகும். தொலைக்காட்சிகளில் எல்லாம் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. யூடியூப்களில் எல்லாமே விவாதிக்கப்படுகிறது. அப்போது பிழைபட பேசுவது தவறாகும். இன்றைய தேதிக்கு பிழைபட பேசுவதும் திரித்து கூறுவதும் வாக்காளர்கள் மத்தியில் எடுபடாது. அதற்கு பதிலாக அரசியல் ரீதியாக பதில் தரலாம். திமுக இப்படி விஜய் புள்ளிவிரங்களை தவறாக சொல்வதாக பதிலடி தருகிறது. முதலமைச்சர் மட்டும்தான் மறைமுகமாக சொல்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் நேரடியாக பதில் சொல்கிறார்கள்.
அதிமுக அல்லது பிற கட்சிகள் விஜய்க்கு பின்னால் இருக்கும் கூட்டம் வாக்குகளாக மாறாது. அவர்கள் எல்லாம் இளைஞர்கள். என்ன செய்துவிட போகிறார்கள் என்று சொல்கிறார்கள். இது தவறு. ஏனென்றால் இந்த இளைஞர்கள் தான் திமுகவை பதவியில் அமர்த்தியுள்ளோம். இதே தவறை தான் காமராஜர் செய்தார். 1957 தேர்தலில் திமுக 15 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த 15 தொகுதிகளிலும் காமராஜர் சிறப்பு கவனம் செலுத்தி 14 பேரை தோற்கடித்தார். குளித்தலையில் கலைஞர் மட்டும் வெற்றி பெற்றார். திமுகவின் முதல் தேர்தல் 1957. இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறாது. சினிமா – நாடகம் மூலமாக தான் இவர்கள் வளர்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் சுதந்திரம் வாங்கி தந்த கட்சி. நேரு – காமராஜர் இருக்கிறார்கள் என்ற ஒரு பிம்பம் இருந்தது. அப்போது திமுக 15 இடங்களில் வெற்றி பெற்றது பெரிய வெற்றியா பார்க்கப்பட்டது. அந்த 15 இடங்களில் காமராஜர் கவனம் செலுத்தி 14 பேரை தோற்கடித்தார். ஆனால், 1962ல் 50 பேர் வந்துவிட்டனர். அதன் பிறகு 1967ல் திமுக ஆட்சியை பிடித்துவிட்டது. அப்போது 1957ல் இருந்து 1962க்கு நகர்த்தி கொண்டு வந்தவர்கள் இளைஞர்கள் தான். எனவே இளைஞர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம்.

விஜய் புதிதாக வருகிறார். அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போமே என்று வாக்களிக்கதான் செய்வார்கள். அதை எப்படி நீங்கள் தடுப்பீர்கள்? விஜய் என்ன வாக்கு வாங்குவார்? அவருடைய அரசியல் வியூகம் என்ன? அதில் என்ன குறைகள் இருக்கிறது என்று சுட்டிக்காட்டலாம். விஜயின் அரசியல் வியூகத்தில் நிறைய குறைகள் இருக்கிறது. விஜய் தன்னுடைய பேருந்தில் திருவாரூர்காரர்களையோ, நாகைக்காரர்களையோ ஏற்றி இருந்தால் அவர்களுக்கு ஊருக்குள் ஒரு மெரிட் கிடைத்திருக்கும். நாளைக்கு அவர்களால் கட்சியினரை ஒருங்கிணைத்து கொண்டுபோக முடியும். அந்த இடத்தில் விஜய்க்கு ஒரு பயம் இருக்கிறது. இவர்களை நம்பி எப்படி மேலே ஏற்றுவது. நாளைக்கு அவர்களை வேறு கட்சியினர் தூக்கிப் போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயம் இருக்கும்.
ஆனால் அண்ணாவுக்கு அந்த கவலை கிடையாது. அவ்வளவு பெரிய சம்பத், கண்ணதாசன் 1961ல் வெளியே செல்கிறபோது, 1962ல் அவரால் 50 இடங்களில் வெல்ல முடிந்தது. அதற்கு காரணம் எல்லோரும் கீழே இருந்து வருகிறார்கள். 1949ல் அண்ணா கட்சி தொடங்கியபோது நடிகர் சிவாஜி உள்ளிட்ட பலரும் போனார்கள். அப்போது அண்ணா பலவீனம் அடையவில்லை. நாம் என்ன இலக்கை உருவாக்கினோமோ அது பலவீனப்பட வில்லை. காங்கிரசை வீழ்த்துவது தான் இலக்கு. விஜயின் நோக்கம் என்பது திமுகவை வீழ்த்துவது. 2026ல் அது சாத்தியமா? என்றால் இருக்காது. திமுக மற்றும் அதற்கு எதிரான வாக்கு வங்கி பிளவு படுகிறது. மீண்டும் திமுக என்பதாக தான் நான் பார்க்கிறேன். விஜய் போட்டியாளராக இருப்பாரா? என்றால் உதயநிதிக்கு போட்டியாளராக இருப்பார். எப்போது என்றால் அடுத்த தேர்தல். அதுவரை விஜய் தாக்கு பிடிப்பாரா? என்பதுதான் கேள்வியாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.