Homeசெய்திகள்கட்டுரைவிஜய் அரசியலுக்கு அன்ஃபிட்! 41 உயிரிழப்புக்கு பொறுப்பேற்காத த.வெ.க. ! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

விஜய் அரசியலுக்கு அன்ஃபிட்! 41 உயிரிழப்புக்கு பொறுப்பேற்காத த.வெ.க. ! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

-

- Advertisement -

விஜய் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதற்கு தகுதி அற்றவர். அவர் ஒன்றும் தமிழ்நாட்டின் அரசியலில் மாற்று கிடையாது என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு மூத்த பத்திரிகையாளர் மணி நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்து உள்ளதாவது :- கரூரில் கூட்டநெரிசலால் 41 உயிர்கள் பறிபோன நிகழ்வு என்பது நடக்க காத்திருந்த ஒரு பேரழிவு ஆகும். இதற்கு முதல் காரணம் நடிகர் விஜய். அவருடைய நடவடிக்கைகள், கூட்டத்தை 7 மணி நேரம் காக்க வைத்துவிட்டு வருகிறார். 2வது காரணம் மக்கள். மூன்றாவது இந்த கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய மாவட்ட நிர்வாகமாகும். இந்தியாவில் அரசியல் கட்சியின் நிகழ்வுகளில் கூட்டநெரிசல் ஏற்பட்ட நிகழ்வுகள் என்பது மிக மிக குறைவாகும். இல்லை என்று கூட சொல்லலாம். இவரை விட பல மடங்கு கவர்ச்சி தன்மை உடைய எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் காலத்தில் இதுபோன்ற கூட்டநெரிசல் மரணங்கள் நிகழ்ந்தது கிடையாது. விஜய் அடிப்படையில் ஒரு நடிகராக இருக்கிறார். விஜயை பார்ப்பதற்காக தான் கூட்டம் வருகிறது, அவர் பேசுவதை கேட்கவில்லை என்கிறார்கள். விஜயை எப்படி ஒரு அரசியல் கட்சி தலைவராக ஏற்க முடியும். இந்த துயர நிகழ்வுக்கு மற்றொரு காரணம் தவெகவில் இரண்டாம் கட்ட தலைவர்களே இல்லை. ஏனென்றால் தவெக ஒரு அரசியல் கட்சி கிடையாது. யாருடைய கட்டுப்பாட்டில் யாரும் இல்லை.

முன்னாள் அமைச்சர் சதி என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. முதலில் அரசு அனுமதி வழங்கிய இடத்திற்கு ஏன் சென்றீர்கள்?. அவர்கள் அனுமதி வழங்கி இருந்தாலும் எதற்காக அந்த இடத்தை ஏற்றுக் கொண்டீர்கள்? அப்படி செல்கிறபோது 50 மீட்டருக்கு முன்னதாக டிஎஸ்பி வந்து சொல்கிறார். அங்கே போக வேண்டாம். போனால் கூட்டநெரிசல் ஏற்படும் என்று சொல்கிறார். அதையும் மீறி எதற்காக செல்கிறீர்கள்? கரூரில் உயிரிழப்புகள் நடந்த பிறகும் விஜய் ஆறுதல் சொல்வதற்கு செல்லாமல் இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை. அவர் ஒரு அரசியல் கட்சி தலைவர் இல்லை. அடிப்படையில் அவர் ஒரு நடிகர். பிரச்சினை என்று வந்தால் அவர் ஓடி ஒளிகிறார். ஒரு அரசியல் தலைவர் ராணுவத்தை வைத்து தடுத்தாலும் செல்வார். விஜய், தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் காரணமாக அரசியலுக்கு வந்துள்ளார். இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கிற மனநிலை அவரிடம் இல்லை. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, ஒரு அரசியல் தலைவராக மாறியிருக்க வேண்டும். ஆனால் அவர் இன்னும் மாறவில்லை. அவர் நடிகராகவே தான் இருக்கிறார். அதனால்தான் அவர் அங்கே போகவில்லை.

விஜய் கரூருக்கு போக மாட்டார். கேட்டால் கலெக்டர் சொன்னார். எஸ்.பி போனார் என்று சொல்வார்கள். போனால் அடிப்பார்கள் என்பார்கள். அப்படி அடித்தால் அடியை வாங்கு. உனக்காக இவ்வளவு பேர் உயிரை விட்டிருக்கிறார்கள். நாலு அடி வாங்கினால் என்ன ஆக போகிறது? விஜயிடம் அடிப்படையில் நடிகருக்கு உரிய பண்புகள் மட்டுமே இருக்கின்றன. ஒரு அரசியல்வாதி மக்கள் எவ்வளவு தாக்கினாலும் அவர்களிடம்தான் திரும்பி செல்வான். இவ்வளவு பெரிய துயரம் நடந்திருக்கிறது. நீங்கள் விமானத்தை பிடித்து வந்துவிடுவீர்களா? குறைந்தபட்சம் கரூரிலாவது தங்கியிருக்க வேண்டாமா? ஒரு அரசியல் கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதி அற்றவர் விஜய். இவர் ஒன்றும் தமிழ்நாட்டின் அரசியலில் மாற்று கிடையாது. அவருக்கு இருக்கக்கூடிய செல்வாக்கு குறித்து நானே பல முறை பேசி இருக்கிறேன். அப்போதும் அவரை மாற்று என்று நான் எங்கேயும் சொன்னது கிடையாது. இவரை நான் ஸ்பாயிலர் என்று தான் சொன்னேன்.

கூட்டநெரிசல் விவகாரத்தை தவெக மிகவும் முட்டாள்தனமாக கையாளுகிறது. அவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு இல்லை. மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்கிறார்கள். சென்னையில் முதன்மை அமர்வில் ஆதவ் அர்ஜுனா ஒரு பெட்டிஷன் தாக்கல் செய்கிறார். இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ளது. ஆனால் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லையே. சரி விஜய் தற்போவாவது வெளியே வந்து பேச வேண்டும். கரூரில் இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் தான் காரணம் என்று பேச தொடங்கி விட்டார்கள். அதை விஜய் தான் சொல்ல வேண்டும். திமுக தான் இதை செய்தது என்பது உங்கள் நிலைப்பாடு என்றால் அதை வெளியில் வந்து செய்யுங்கள். கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் உங்களுடைய அரசியல் வாழ்க்கையை முடிக்கபோகிறது. முதலில் இந்த துயரத்துக்கு பொறுப்பேற்று கொள்கிற அடிப்படை நேர்மை கூட விஜயிடம் இல்லை. தவெகவுக்கு எந்தவித கொள்கைகளும் கிடையாது. தமிழக அரசியல் களத்தில் இருந்து இவர்கள் அகற்றப்பட வேண்டியவர்கள். இந்த விவகாரத்தில் கரூர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். ஆனால் முதல் குற்றவாளி விஜய்தான். அவருக்கு எந்த பொறுப்புமே இல்லையா? இவர்கள் நாளைக்கு ஆட்சிக்கு வந்தால் நாடு நாசமாக போய்விடும். அவர் பேசாமல் நடிக்க போவது தமிழ்நாட்டிற்கு நல்லது. அவருடைய இயல்பு என்பது அரசியலுக்கு அறவே ஒவ்வாதது.

ஸ்டாலினுக்கு நீங்கள் மாற்று இல்லை என்பதை கரூர் கூட்டநெரிசல் சம்பவம் நிரூபித்துவிட்டது. அரசியலில் இருக்க விஜய் தகுதி அற்றவர். அவர் தன்னை திருத்திக் கொள்ளாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. அவரை திமுகவுக்கு எதிராக கொம்பு சீவுகிற வேலைகள் நடக்கலாம். தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கு மாற்று இல்லை என்கிற நிலை வந்துவிட்டது. சித்தாந்த ரீதியாக அவர் மிகவும் உறுதியாக இருக்கிறார். அவரை சுற்றி இருக்கிற கட்சிகள் பாஜக எதிர்ப்பில் உறுதியாக உள்ளனர். அவருடைய அனுபவமும், திமுகவின் கட்டமைப்பும் உறுதியாக உள்ளது. இவர்களை எதிர்த்து அரசியல் செய்வது என்றால் உங்களுக்கு 10 சதவீத திறமையாவது வேண்டும் அல்லவா? கரூரில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் உள்ளன. ஆனால், தவெக இல்லை. தமிழ்நாடு அரசும், காவல்துறையும் ஒரு அரசியல் கட்சியை சமாளித்துவிட முடியும். ஆனால் ஒரு ரசிகர்கள் கூட்டத்தை அவர்கள் எப்படி கையாளுவார்கள்? கூட்டநெரிசல் மரணங்கள் இதுவே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு மாற்று வழியை அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும். இல்லை என்றால் இந்த வகையிலான பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

விஜயை நாளைக்கு பாஜக – அதிமுக கையில் எடுக்கலாம் என்று சொல்கிறார்கள். தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் என்டிஏ கூட்டணிக்கு செல்லலாம் என்று கூட சொல்கிறார்கள். திமுகவை எதிர்ப்பது என்பது சித்தாந்த ரீதியாக இருக்க வேண்டும். குருட்டுத்தனமாக எதிர்ப்பது என்பது உங்களை முட்டுச்சந்தில்தான் போய் நிறுத்தும். மற்றவர்கள், உங்களை கையில் எடுக்கிறார்கள் என்றால் வாழ்துக்கள். ஆனால் அதில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிது அல்ல. நீங்கள் திமுகவை எதிர்க்கிறீர்கள் என்றால்? உங்களுடைய செயல்திட்டம் என்ன? எதுவும் இல்லாமல் திமுகவை எதிர்க்கிறீர்கள் என்றால் அதன் பயன் என்ன? மக்கள் இறக்கிறார்கள். நீங்கள் திமுகவை எதிர்ப்பீர்களா? இந்த ஒன்றரை வருடத்தில் தவெகவின் அரசியல் நடவடிக்கைகள் என்ன? ஒரு போராட்டமோ, ஒரு கருத்தரங்கோ, வழக்கோ என எந்த அரசியல் நடவடிக்கையும் கிடையாது. தவெகவின் ஒட்டுமொத்த அரசியல் நடவடிக்கைகளும் விஜயை சுற்றியே சுழல்கிறது. தமிழ்நாடு சிவில் சொசைட்டியும், அரசும் ஒரு நடிகரை டீல் செய்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ