தொண்டர்களை உசுப்பேற்ற கரூரில் சதி நடைபெற்றதாக கூறிவிட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க அது விபத்து என்று சொன்னால் விஜயும் ஒரு சராசரி அரசியல்வாதி தான் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

கரூர் துயர சம்பவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவும், அதற்கு எதிரான தவெகவினரின் விமர்சனங்கள் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது :- கரூர் மரணங்கள் தொடர்பான வழக்கில் விஜயின் தலைமைப் பண்பு குறித்தும், தவெகவின் கட்டமைப்பு குறித்தும் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். தமிழக அரசுக்கும், விஜய் மீது கருணை காட்டுகிறீர்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். நீதிபதியின் கேள்விகள் ஒரு நியாயமான பார்வையாகவும், இந்த சமூகத்திற்கு தேவையான கருத்துக்களாக தான் நான் பார்க்கிறேன். விஜய் எதிராக தீர்ப்பு வந்துவிட்டது என்று கொண்டாட வேண்டியதும் இல்லை. அரசுக்கு கொட்டு விழுந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமியும் சந்தோஷப்பட வேண்டியதில்லை. இன்றைக்கு முதல் நபராக பாதிப்பிற்கு அல்லது பாடத்திற்கு உள்ளானவர் எடப்பாடி பழனிசாமிதான். அரசு கேட்கிற இடத்தை கொடுக்கவில்லை என்கிற குற்றச்சாட்டிற்கு முடிவு வந்துவிட்டது. இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அரசு எங்களை பழிவாங்குகிறது என்று ட்வீட் வந்திருக்கும். அது வராததற்கு காரணம் நீதிபதி செந்தில்குமார், ஒரு சமூக பார்வையோடு, தன் மீது விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்ப்பை வழங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியும் சில விஷயங்களை புரிந்துகொள்கிறார். அப்போது பேருந்தை ஒரு மைதானத்தில் நிறுத்தினால், எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் பேசலாம். அங்கு அடிப்படை வசதிகளை செய்து தரலாம். எந்தவித இடநெருக்கடியும் இருக்காது. அப்படி இடத்தை பார்த்துதான் இனிமேல் நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இந்த வகையான பிரச்சாரத்தை கைவிட வேண்டும். பொதுக்கூட்டம் நடத்தினால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இப்படி பேசிவிட்டு செல்வதை மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என்கிற புரிதலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட்டிருப்பதற்கு காரணம் நீதிபதி செந்தில்குமார் தீர்ப்புதான். நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக அரசுக்கும் தைரியம் வந்துள்ளது. விஜய் மீது நடடிக்கை எடுக்க ஏதோ ஒரு காரணத்திற்காக திமுக தயங்கினார்கள் என்று சொல்லலாம். திமுக அரசு அல்ல, எந்த அரசாக இருந்தாலும் நிலையான வழியான நெறிமுறைகள் உருவாக்க வேண்டும் என்பது ஒன்று. மற்றொன்று தவெக மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளுடன், புதிதாக சொல்லப் போகிற விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்று வழி அமைத்து கொடுத்துள்ளார் நீதிபதி செந்தில்குமார்.
ஆதவ் அர்ஜுனா மீண்டும் உண்மை வெளிவரும் என்று சொல்கிறார். அப்படி உண்மை வெளி வருவதற்கு முன்பு எதற்காக செந்தில்பாலாஜி சதி என்று சொன்னீர்கள்? அப்படி சொல்லிவிட்டு ஆதாரங்களை கொண்டுசென்று நீதிமன்றத்தில் கொடுக்க வேண்டாமா? அருணா ஜெகதீசன் ஆணையத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. அது கண்துடைப்பு என்கிறீர்கள். தற்போது சிறப்பு விசாரணைக்குழு அமைத்து விட்டார்கள். இப்போவாவது போய் ஆதாரங்களை கொடுங்கள். 2 நீதிமன்றங்களில் வழக்கு வருகிறபோது, உங்கள் தரப்பு வழக்கறிஞர்களை அனுப்பி வாதங்களை எடுத்து வைக்கலாம் அல்லவா? மதுரையில் வழக்கு விசாரணையின் போது சதி என்கிற வார்த்தையே வரவில்லை. நடைபெற்றது ஒரு விபத்து என்றுதான் சொன்னீர்கள். இந்த முரண்பாட்டை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தொண்டர்களை உசுப்பேற்ற ஒரு வார்த்தை, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க ஒரு வார்த்தை சொன்னால் நீங்களும் ஒரு சராசரி அரசியல்வாதிதான்.
இந்த துரதிர்ஷ்டவசமான சூழலில் இருந்து எப்படி வெளியே வர வேண்டும் என்பது தெரியாமல் தவிப்பிலோ, அல்லது மற்றவர்கள் சொல்வதை கேட்டோ அவர் வேறு எங்குமே நடக்காதது கருரில் நடக்கிறது என்று சொல்கிறார். அதில் பாதிதான் உண்மை. வேறு எங்குமே மரணங்கள் நடக்கவில்லை. மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற சம்பவம் எல்லா ஊர்களிலும் நடைபெற்று உள்ளது. அதற்கு காரணம் விஜயினுடைய பாப்புலரிட்டி. அவரை பார்க்க எல்லோரும் வந்து குவிகிறார்கள். எனவே விஜய்க்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. கட்டுப்பாடு இல்லாத தொண்டர்களை நாம் வைத்திருக்கிறோம் என்கிற புரிதல் விஜய்க்கு வராவிட்டால், அவர் எத்தனை வீடியோ போட்டும் பயனில்லை. இன்றைக்கு மக்கள் விஜயை நம்பலாம். ஆனால் வெகு சீக்கிரமாக அம்பலப்பட்டு போவார். பாஜக எம்.பிக்கள் குழு அறிக்கை கேட்டிருப்பது முழுக்க முழுக்க அரசியலாகும். இல்லா விட்டால் ஸ்டாலின் கேட்டது போல, மணிப்பூருக்கு எம்.பிக்கள் குழுவை அனுப்பினார்களா? என்று சொல்ல வேண்டும்.
தவெகவின் அரசியல் தாரளமாக பயணிக்க வேண்டும். இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு விஜயை அழித்துவிடலாம் என்று யாராவது நினைத்தால் அவர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால் அதற்கு முன்பாக நாம் என்ன தவறு செய்தோம். இனி என்ன சரியாக செய்ய வேண்டும் என்பதை விஜய் முதலில் சுயப்பரிசோதனை செய்ய வேண்டும். அப்படி செய்துவிட்டு அவர் எல்லா ஊர்களுக்கும் போக வேண்டும். அவர் மக்களை சந்திக்க வேண்டும். அப்படி விஜய் பார்க்க போகிற மக்கள் சுய அறிவை பயன்படுத்தி போக வேண்டும். பாதுகாப்பு இருந்தால் போக வேண்டும். அப்படி இல்லாவிட்டால் யாருடைய கூட்டத்திற்கும் போக கூடாது. மக்கள் ஆட்டுமந்தை அல்ல என்கிற உணர்வு விஜய்க்கு வர வேண்டும். அவர் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.