ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கான உணவுபடியை ரத்து செய்து கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு. இதனால் 4500 காவலர்கள் பாதிப்பு.
ஏற்கனவே பல்வேறு மன உளைச்சலில் இருக்கும் தங்களை மேலும் வேதனை படுத்துவதாக காவலர்கள் கருத்து.
கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் புதிதாக தனியே தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இதற்கிடையே, கடந்த 3 மாதங்களாக ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் சுமார் 4500 காவலர்கள், அதிகாரிகளுக்கு என பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை உணவுப்படி வழங்கப்படவில்லை. எனினும், சென்னை காவல் ஆணையரகத்தில் மட்டும் காவலர்களுக்கு மாதந்தோறும் 7500 ரூபாய் உணவுப் படி வழங்கப்படுகிறது. இதனால் மாத சம்பளம் வாங்கும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள், அதில் வீட்டுக் கடன், குழந்தைகளின் கல்வி கட்டணம், பேங்க் லோன் போன்றவற்றுக்கு செலவிடுகின்றனர்.
மேலும், அன்றாட பணிகளின்போதும், ஏதேனும் குற்றவாளிகளை பிடிக்க உள்ளூர் மற்றும் பிற நகரங்களுக்கு செல்லும் சூழலில் உணவு சாப்பிட போதிய பணமின்றி தவித்து வருகின்றனர். இதனால் மாத சம்பளத்தில் கைவைத்தால், குடும்ப செலவுக்கு பணமின்றி கடன் வாங்க நேரிடுகிறது.
இதில் பல்வேறு காவலர்களும் அதிகாரிகளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்கள், அதிகாரிகளுக்கு 3 மாத உணவுப்படி நிலுவை வழங்காமல் இருந்தது.
இதனை தற்போது அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உணவு படி வழங்க பட்டு வந்ததை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஏற்கனவே பல்வேறு வகையில் துன்பங்களை அனுபவித்து வரும் காவலர்கள் இந்த உத்தரவின் மூலம் மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே தங்களுக்கு மாதந்தோறும் உணவுப்படி வழங்க தமிழ்நாடு முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணவேண்டும் என காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.