மணிப்பூரில் இருந்து 9 பேர் சென்னையில் தஞ்சம்! ஆதரவு அளித்த வழிபோக்கர்
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சென்னை வந்த, ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேரின் வாழ்வாதாரத்துக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.
மணிப்பூரில் இருந்து தப்பி வந்து, என்ன செய்வதென தெரியாமல் 2 நாட்களாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு, அவ்வழியே சென்ற செங்குன்றத்தை சேர்ந்த மூர்த்தி (61) என்பவர் உதவியுள்ளார். 9 பேருக்கும் தனது வீட்டில் உணவு, உடை கொடுத்து, தங்குவதற்கு தற்காலிகமாக ஓர் வீட்டையும் கொடுத்துள்ளார் மூர்த்தி.
முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இவர்களை அழைத்து சென்று மனு கொடுத்துள்ளார். “ஆட்சியரை உடனடியாக சென்று பாருங்கள். அவர் உங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வார்” என முதலமைச்சர் தனிப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். மணிப்பூரில் இருந்து வந்த ஜோசப் குடும்பத்தினருக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம், கல்வி தகுதி விவரங்களை சேகரித்து தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்தார். மேலும், மூர்த்தியை அழைத்து பாராட்டும் தெரிவித்தார்.
சென்னை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து செங்குன்றம் பகுதி வருவாய் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஜோசப் பின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், தங்கள் வாழ்வாதாரத்துக்கு உதவிய சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அதிகாரிகளுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துவிட்டு ஜோசப் குடும்பத்தினர் சென்றனர்.