சென்னை காசிமேட்டில் அதிகாலை முதலே அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் செல்வதால் காசிமேடு சந்தையே களைகட்டியது.


ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலே காசிமேடு மீன் விற்பனை சந்தையில் திருவிழா போன்று கூட்டம் அலைமோதும். கடந்த மாதங்களில் வானிலை மாற்றம், விடுமுறை என மீன்வரத்து குறைவானதால் மீன்கள் விற்பனை மந்தமானது.
இதனை அடுத்து இயல்பான சூழ்நிலை திரும்பிய பின்னர் ஏராளமான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. இதனால் மீன்வரத்து அதிகமாக காணப்பட்டது. கடந்த வாரத்தை விட சில வகை மீன்கள் குறைவாக இருந்தாலும் வஞ்சிரம், பாறை உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் விலை ஏற்றமாக காணப்படுகிறது.

கடந்த வாரங்களில் முழு வஞ்சிரம் மீன் 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. துண்டுகளாக கழிவுகள் நீக்கி வெட்டப்பட்ட மீன் 950 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
கடந்த வாரம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வவ்வால் மீனை 850 ரூபாய்க்கும், 400 ரூபாய் விற்பனை செய்யப்பட்ட சங்கரா-வை இன்று 450 ரூபாய்க்கும் மக்கள் வாங்கி செல்கின்றனர்.

கடல் விரால் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 480 ரூபாய் விற்பனை செய்யப்படுகின்றது. இறால் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 400 ரூபாய்க்கும், களவான் 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
காணங்கத்தை, கேரை உள்ளிட்ட மீன்கள் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகாலை முதலே காசிமேட்டில் அசைவ பிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

சில்லறை விற்பனையாளர்கள் , மொத்த விற்பனையாளர்கள் அதிகாலையிலேயே கூடை கூடையாக மீன்களை ஏலம் எடுத்து சென்றனர். மீன் விலை கடந்த வாரத்தை விட சற்று உயர்ந்திருந்தாலும், பொதுமக்கள் தங்களுக்கேற்றார் போல பேரம் பேசி வாங்கி செல்கின்றனர்.


