மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, நடிகர் விஜய் இன்று சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரைக் காணக் குவிந்த ரசிகர்களின் கூட்ட நெரிசலில் அவர் சிக்கிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தனது கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக மலேசியா சென்றிருந்தார். கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நேற்று (டிசம்பர் 27) நடைபெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

மலேசியப் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (டிசம்பர் 28) மாலை விஜய் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார். அவர் வருவதை முன்கூட்டியே அறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் விமான நிலையத்தின் வருகை பகுதியில் திரண்டிருந்தனர்.
விஜய் வெளியே வந்ததும், அவரைக் காணவும், புகைப்படம் எடுக்கவும் ரசிகர்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்தனர். பாதுகாப்பு வளையத்தை மீறி ரசிகர்கள் நெருங்கியதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் விஜய் நிலைதடுமாறினார். ஒரு கட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி அவர் கீழே விழ நேர்ந்தது.
உடனடியாக அங்கிருந்த தனியார் பாதுகாப்புப் பணியாளர்களும், போலீசாரும் விரைந்து செயல்பட்டு விஜயை மீட்டனர். பின்னர் மிகுந்த சிரமத்திற்கு இடையே அவர் தனது காரில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்.
விஜய் கீழே விழுந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இதைக் கண்ட ரசிகர்கள், அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்று கவலையுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் அவருக்குப் பெரிய அளவிலான காயங்கள் ஏதுமில்லை என்றும், அவர் பாதுகாப்பாக வீடு திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


