சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 7 கோடி ரூபாயில் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை 200 வார்டுகள் மற்றும் 7 அரசு மருத்துவமனைகளிலும் தற்போது 390 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேற்குறிப்பிட்ட அம்மா உணவகங்களுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 2013 ஆம் ஆண்டு முதல் பல்வேறு காலங்களில் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அம்மா உணவகம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை மண்டலங்களில் இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்கள் பழுது நீக்கம் செய்ய அம்மா உணவக சில்லறை செலவுகள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்ததில் 23,848 பாத்திரம் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத ஒரு சூழலில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பொருட்கள் மற்றும் இயந்திரங்களை மாற்ற 7 கோடியே 6 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இயந்திரங்கள் மற்றும் பொருட்களை 30 நாட்களுக்குள் உரிய விதிகள் அடிப்படையில் பழுது நீக்கம் செய்யும் பணியை முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.