சென்னை திருமங்கலம் அருகே தனியார் பள்ளியில் உலக தரத்தில் உருவாக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் தடகளப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தன.
சென்னை அம்பத்தூர் திருமங்கலம் அருகே செயல்பட்டு வரும் எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி மற்றும் இளநிலைக்கல்லூரியில் கடந்த இரு நாட்களாக, எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டி மற்றும் உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் 13 மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவர்கள் 700 பேர் கலந்துகொண்டனர். தொடக்க விழாவில் பள்ளி முதல்வர் சாரதா ராமமூர்த்தி அறிமுக உரையாற்றினார். எஸ்.பி.ஐ.ஓ ஏ கல்வி அறக்கட்டளையின் தலைவர் முனைவர் P.நிதீஷ் ஆண்றேய ராஜா சிங் அவர்கள் தம் தலைமை உரையில் மாணவர்களுக்கான பல்வேறு அறிவுரைகளைக் கூறி மாணவர்களை வாழ்த்தினார்.
இந்த 2 நாள் போட்டியில் கலந்துகொண்டு தங்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டத்தின் முதன்மைப் பொது மேலாளர் பர்மிந்தர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பதக்கங்கள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினார். இப்போட்டியில் மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மேலும் அனைத்து எஸ்பி ஓ.ஏ பள்ளிகளின் தாளாளர் மற்றும் முதல்வர்களும் விழாவிற்கு அணி சேர்த்தனர். பள்ளியின் விளையாட்டு ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்த தடகளப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கல்வி அறக்கட்டளையின் செயலர் மற்றும் தாளாளர் A.செந்தில் ரமேஷ் கூறியது,1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் தன்னுடைய தரத்தை காலத்திற்கு ஏற்ப உயர்த்திக் கொண்டே இருக்கிறது. எஸ்.பி.ஓ.ஏ பள்ளி அறக்கட்டளையின் சார்பில் 13 கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறோம். குறிப்பாக இந்த ஸ்கூல் அண்ட் ஜூனியர் காலேஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் சென்னை மாநகரத்தில் அமைந்துள்ளது. இப்பள்ளியில் இந்த ஆண்டு உலகத்தரம் வாய்ந்த சிந்தட்டிக் தடகள விளையாட்டு மைதானம் அமைத்துக் கொடுத்துள்ளோம்.
இந்தப் பள்ளி ஆனது கடந்த 18 வருடங்களாக தடகளப்போட்டியில் தனது வெற்றிகளை சேர்த்துக்கொண்டு வருகிறது. இந்த புதிதாக அமைக்கப்பட்ட தடகளத்தை தலைமை முதன்மை பொதுமேலாளர் பர்மிந்தர் சிங், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அவர்களால் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. உலகளவில் நடைபெறக்கூடிய ஒலிம்பிக் போட்டிக்கு நிகராக இந்த விளையாட்டு மைதானத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் பள்ளியில் இருந்தும் பல மாணவர்கள் விளையாட்டில் உலகளவில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கி தருவதற்கான முயற்சிகளை எடுத்துள்ளோம், இவ்வாறாக அவர் கூறினார்