கல்லூரிக் கல்வி ஆணையரின் சுற்றறிக்கையைக் கண்டித்து, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்துள்ளது.


சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை
இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டு கல்லூரிக் கல்வி ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்தச் சுற்றறிக்கையை உடனடியாகத் திரும்பப் பெறக்கோரி இந்த முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் இப்ராஹிம் பேட்டி
சுற்றறிக்கை குறித்து அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் இப்ராஹிம் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
“தமிழ்நாடு அரசு சர்வாதிகார போக்குடன் செயல்படுகிறதோ என்கிற அச்சம் எழுகிறது. மாணவர்களின், இளைஞர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் விஜய் அரசு, அரசியலுக்கு ஒவ்வாத, பிற்போக்குத் தனமான அரசு என்பதை ஒவ்வொரு செயல்பாட்டிலும் நாள்தோறும் நிரூபிக்கிறது.”
“அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது”
“அரசின் சுற்றறிக்கை இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகளுக்கு எதிரானது. தமிழ்நாடு அரசின் அரசியல் ஒவ்வாமை, அறமற்ற செயலாக உள்ளது. தமிழ்நாடு அரசின் மாணவர் விரோதப் போக்கின் வெளிப்பாடே இந்தச் சுற்றறிக்கை. கல்வி நிலையங்களில் மாணவர்கள் தங்களின் பிரச்சினைகளுக்காகவே போராடுகின்றனர்.”
“தமிழ்நாடு அரசின் செயல்பாடு சட்டவிரோதமானது. இடதுசாரி மாணவர்கள் மீதான இந்த தாக்குதல், அரசின் தொடர் செயல்பாடுகளை, அவலங்களை வெளிப்படுத்துவதை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.”
“மாணவர்களைக் கண்டு அஞ்சும் அரசு”
“மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கவும், மாணவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவுமே இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது. தமிழ்நாடு அரசு மாணவர்களைக் கண்டு அஞ்சுகிறது. தமிழ்நாடு அரசின் செயல்பாடு பாசிச நடவடிக்கை; அநாகரீகமான போக்கு.”
“கேள்வி கேட்கும் மாணவர்களை கேள்வி கேட்கக் கூடாது, மீண்டும் பேசக்கூடாது என்பதன் அடிப்படையிலேயே அடக்குமுறையைக் கையாளும் விதமாக இந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது. போராட்டம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என அரசு நினைக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
