ரவுடி சம்பவம் செந்தில் கேட்டதாக கூறியதால் நாட்டு வெடிகுண்டுகளை வழங்கியதாகவும், ஆனால் யாரை கொலை செய்வதற்காக வாங்கினார்கள் என தனக்கு தெரியாது என்றும் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் கைதான ரவுடி புதூர் அப்பு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தேடப்பட்டுவந்த முக்கிய நபரான ரவுடி புதூர் அப்பு கடந்த 21ஆம் தேதி டெல்லியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகளை வினியோகம் செய்த ரவுடி புதூர் அப்பு மீது கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் 28வது நபராக கைதான அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல ரவுடி சம்பவம் செந்தில் கூட்டாளிகள் கடந்த 2021ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது அவரோடு செல்போனில் பேசியதாகவும், அதன் மூலம் செந்திலுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், ஆனால் சம்பவம் செந்திலோடு நேரடி தொடர்பு இல்லை என்றும் ரவுடி புதூர் அப்பு குறிப்பிட்டுள்ளார். சம்பவம் செந்தில் கூட்டாளிகள் மூலமாக கே.கே.நகர் பகுதியில் ராஜேஷ் என்பவரது குடோனில் 6 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்து இருந்ததாக தெரிவித்துள்ள புதூர் அப்பு, அவற்றை விஜயக்குமார், முகிலன் ஆகியோர் அண்ணாசாலையில் ஹரிஹரன், மொட்டை கிருஷ்ணாவிடம் ஒப்படைத்ததாகவும் அதன் பின்னர் அருளிடம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டு வெடிகுண்டுகளையே அவர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையின்போது எடுத்துச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சம்பவம் செந்தில் கேட்டதாக அவரது கூட்டாளிகள் தெரிவித்ததால் தான் நாட்டு வெடிகுண்டுகளை வழங்கியதாகவும், ஆனால் யாரை கொலை செய்ய அவற்றை வாங்கினார்கள் என தனக்கு தெரியாது என்றும் ரவுடி புதூர் அப்பு தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு பின்னர் ரவுடி புதூர் அப்பு எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு தனிப்படை போலிசார் ஆஜர் படுத்தினர். அப்போது, புதூர் அப்புஹவக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதனை அடுத்து, போலிசார் அவரை சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் சென்றனர்.