அரசியல் கட்சிகளின் கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே, இதற்கும் அரசுக்கும் எந்த சம்மந்மும் இல்லை என சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுகவை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சோழிங்கநல்லூர் தொகுதியைச் சேர்ந்த அதிமுக இளைஞரணி நிர்வாகிகள் 300 பேர் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், பகுதி செயலாளர்கள் ரவிச்சந்திரன், மதியழகன், வட்ட செயலாளர் ஏகாம்பரம், அவைத்தலைவர் குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர், சென்னை தெற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தாா். அப்போது பேசிய அவர், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜீவ் காந்தி சாலை பகுதியிலிருந்து அதிமுக இளைஞர் அணியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தினம்தோறும் அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர் என்றார்.
பெரம்பூரில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்தான கேள்விக்கு , ”தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையத்தின் ”சுவிதா” இணையதளத்தில் 48 மணி நேரத்துக்கு முன்பாகவே என்ன நிகழ்ச்சி நடத்தப் போகிறோம் என்ற தகவலை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு 48 மணி நேரத்திற்குள் அனுமதி கிடைத்து விடும். இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தமும் இல்லை. மேலும் அரசியல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி கொடுப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே என்று பதிலளித்தாா்.
பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு – தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!
