சாலையில் எரிந்த சொகுசு பேருந்து- நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்
பூவிருந்தவல்லி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் பேட்டரி சொகுசு பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை கோயம்பேட்டில் குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேட்டரி பேருந்து ஒன்று பயணிகளுடன் பெங்களூர் சென்று கொண்டு இருந்தது. சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக பூவிருந்தவல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை கடந்த போது முன்னால் சென்ற அரசு பேருந்து ஒன்று திடீரென பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் திடீரென பிரேக அடித்தால் பின்னால் பயணிகளுடன் வந்த மற்றொரு தனியார் பேருந்து மோதியது.


இதில் பேட்டரி பேருந்தின் பின்புறம் சேதமடைந்து தீ பற்றியது உடனடியாக அருகே இருந்தவர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுகடங்காமல் எரிந்தது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டது. அதற்குள் தீ மளமளவெண பரவி பேருந்து முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாக மாறியது. தீவிபத்தில் பேருந்தில் இருந்தவர் உடனடியாக இறங்கியதால் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீவிபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


