ரூ.100 குவாட்டர் தராததால் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டுவீச்சு
ரூ.100 குவாட்டர் தராததால் ஆத்திரமடைந்த மதுபிரியர் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. நேற்று இரவு 10மணி அளவில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென மதுபான கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசி ரகளையில் ஈடுபட்டார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடையின் ஷட்டர் மூடப்பட்டு இருந்ததால் மதுபான கடை ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் முகமது பரகத்துல்லா மற்றும் போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருடைய இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசியது சின்ன போரூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கதிரவன்(வயது32) என்பது தெரியவந்தது. கதிரவன் கடை மூடும் நேரத்தில் வந்து ரூ100 மட்டும் கொடுத்து குவாட்டர் பாட்டில் மது கேட்டுள்ளார்.
தொகை குறைவாக இருந்ததால் ஊழியர் ராஜேந்திரன் மது தர மறுத்து கடையை மூடிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து அந்த இளைஞர் டாஸ்மாக் பின்புறம் நடத்தப்படும் சட்ட விரோத பாரில் சென்று 100 ரூபாய் கொடுத்து மது பாட்டில் கேட்டுள்ளார். அவர்கள் 130 குவாட்டருக்கு, 180 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீவைத்து மதுபான கடை மீது வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கதிரவன் மீது கொலை மிரட்டல் வழக்கு ஒன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.