இன்று ஒரே நாளில் தக்காளி விலை கிடு கிடு உயர்வு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 20 ரூபாய் விலை உயர்ந்து கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். வெயிலின் தாக்கம் காரணமாக விளைச்சல் இல்லாததால் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்து கொண்டே செல்வதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொடர்ச்சியாக வரத்து குறைவு காரணமாக கடந்த இரண்டு வார காலமாக தக்காளி விலை உயர்ந்து வருகிறது.

கிலோ 15 ரூபாய்யில் இருந்து படிப்படியாக விலை உயர்ந்து வந்த தக்காளி தற்போது அதிகபட்சமாக கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 90முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி போன்று உற்பத்தி, வரத்து குறைவு காரணமாக கடந்த சில வாரங்களாக அனைத்து காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு தக்காளி விலை உயரும் என்றும் தற்போது வெயிலின் தாக்கம் குறைந்து வருவதால் வரும் காலங்களில் விலை குறைய வாய்ப்பு இருப்பதாகவும் வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.