புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுனனை பார்க்க வந்த பெண் ஒருவர் உயிரிழந்தார் அதற்கு அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார் அதேபோன்று தமிழகத்தில் 41 உயிர்கள் பலியாகி இருக்கிறது அதற்கு ஏன் விஜய் கைது செய்யக்கூடாது என உங்களின் ஒருவன் அமைப்பு சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார் எழுந்துள்ளது.சென்னை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் உங்களின் ஒருவன் அமைப்பின் தலைவர் அறிவழகன் என்பவர் தவெக தலைவர் விஜய்யை கைது செய்யக்கோரி புகார் மனு அளித்துள்ளார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் விஜய் நடத்தி வரும் மக்கள் சந்திப்பில் முறையான காவல் துறையின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை. கடந்த இரண்டு சந்திப்பின்போதும் மக்களுடைய அலை அதிகமாக இருந்தது.
இந்நிலையில், நேற்றைய முன்தினம் நடைபெற்ற கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் இளம்பெண்கள் என 41 நபர்கள் உயிர் இழந்துள்ளனர். இந்த தகவல் அறிந்த உடன் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலேயே இது போன்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் எந்த விதமான உயிரிழப்பும் ஏற்படவில்லை என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்தது மிகுந்த மன அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்திய தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர், பொதுச் செயலாளர், உட்பட நான்கு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இருப்பினும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீதும் காவல்துறை கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இவர்களுக்கு எந்த விதமான நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்காமல் இருக்க வேண்டும் என உங்களின் ஒருவன் அமைப்பு சார்பாக கோரிக்கை வைக்கின்றோம். குறிப்பாக புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியானது ஐதராபாத்தில் வெளியிடப்பட்டது. அப்பொழுது நடிகர் அல்லு அர்ஜுன் பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதியது அந்த கூட்டத்தில் பெண் ஒருவர் சிக்கி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். ஒரே ஒரு பெண் உயிர் இழந்ததற்கு ஹைதராபாத் போலீசார் நடிகர் அல்லு அர்ஜுனனை கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குழந்தைகள் பெண்கள் என 41 நபர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஏன் விஜய்யை கைது செய்யவில்லை இது தொடர்பாக உங்களின் ஒருவன் நிறுவனம் சார்பாக காவல்துறையிடம் புகார் மனு அளித்தோம். உரிய நடவடிக்கையை எடுத்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.