விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இவர் தற்போது குரங்கு பொம்மை பட இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்சன் திரில்லர் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த வகையில் 25 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த வெளியான படங்களை விட வில்லனாக நடித்து வெளியான படங்கள் தான் அதிக வசூலை வாரிக் குவித்தது. அதாவது விஜய், ஷாருக்கான் போன்ற ஸ்டார் நடிகர்களுடன் இவர் நடித்திருந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் தற்போது விஜய் சேதுபதி சிங்கிளாக களம் இறங்கிய அவருடைய ஐம்பதாவது படமான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. எனவே விஜய் சேதுபதி சிங்கிளாக சம்பவம் செய்திருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.